எனர்ஜிபார்’ அறிந்ததும் அறியாததும்!

பெயரிலேயே எனர்ஜி தருகிறது. ஜிம் போகிறவர்கள், விளையாட்டு வீரர்கள் சாப்பிட்டு வந்தவை. பெரும்பாலான கடைகளில் கிடைப்பதால், நொறுக்குத்தீனியாக அனைவரும் வாங்கிச் சாப்பிடுகின்றனர். ‘சாக்லேட்டுக்குப்  பதிலாக எனர்ஜி பாரை சாப்பிட்டால் நல்லதாம்’ எனக் கடைக்காரர் சொல்ல உடனே குழந்தைகளுக்கு வாங்கித் தரும் பெற்றோர்கள் அதிகம். முந்திரி, திராட்சை நல்லதுதான். ஆனால், அவற்றை இப்படிப் பார் வடிவில் சாப்பிடலாமா என்கிற  விழிப்புஉணர்வு இல்லாமல் இருப்பதால்தான் கடைக்காரர்கள் இவற்றை நொறுக்குத்தீனியாக விற்கத் தொடங்கிவிட்டனர். எனர்ஜி பார் யாருக்கு நல்லது, யார் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

எனர்ஜி பார் என்றால்?


எனர்ஜி பாரை சப்ளிமென்ட் பார் என்றும் சொல்லலாம். நட்ஸ், பருப்பு, தானியங்கள் ஆகியவை கலந்த உணவுப்பண்டம் இது. குறிப்பிட்ட நேரத்துக்கு உணவு கிடைக்காதோர், உடனடியாக எனர்ஜி தேவைப் படுவோர் சாப்பிடும் உணவு.

இதிலுள்ள கார்போஹைட்ரேட், கலோரியாக மாற்றப்பட்டு உடலுக்குத் தேவையான ஆற்றலாக மாறுகிறது. எனவே கடினமான உடல்உழைப்பு உள்ளவர்களுக்குத் தேவையான ஆற்றலைப் பூர்த்திசெய்வதற்காக அறிமுகமானது இந்த எனர்ஜி பார்.

எனர்ஜி பாரில் என்னவெல்லாம் இருக்கும்?

* கொழுப்பு – சாக்லேட், கொக்கோ பட்டர், நட்ஸ் போன்றவை
* புரதம் – வே புரோட்டீன், பருப்புகள் போன்றவை
* மாவுச்சத்து – ஓட்ஸ், பார்லி போன்றவை
யாருக்கு அவசியம்?
ஒரு எனர்ஜி பாரில் 100 முதல் 200 கலோரிகள் வரை இருக்கும். இந்த அளவிற்கான கலோரிகள் கிடைக்க வேண்டுமானால், ஒருவர் 2 – 3 கப் ஊட்டச்சத்துள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

யார் சாப்பிடலாம்?

விளையாட்டு வீரர்கள், ஜிம் செல்கிறவர்கள், உடல் உழைப்பு அதிகம் இருப்பவர்கள், பாடி பில்டர், அதிக உடற்பயிற்சி செய்கிறவர்கள் ஆகியோர் சாப்பிடலாம்.
விளையாடும்போது, விளையாட்டு வீரர்களுக்கு அதிகமாக வியர்வை வெளியாகும். இதனால், உடலில் சோடியம் இழப்பு ஏற்படும். எனவே, இவர்கள் சோடியம் சேர்த்த எனர்ஜி பாரை சாப்பிடலாம்.

யார் தவிர்க்க வேண்டும்?
உடல் உழைப்பு இருப்பவர்கள் சாப்பிடுவதால், கலோரிகள் எளிதாக எரிக்கப்பட்டு விடுகின்றன. இதனால், அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால், உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு இது நிச்சயம் தேவையில்லை.
சர்க்கரை நோயாளிகள்,முதியவர்கள், செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், உடல்பருமனானவர்கள் எனர்ஜி பாரைத் தவிர்க்க வேண்டும்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சோடியம் சேர்த்த எனர்ஜி பாரைத் தவிர்க்க வேண்டும். இதனால் ரத்த அழுத்தம் மேலும் அதிகமாகி, பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
உடல் உழைப்பு இல்லாதவர்கள் எனர்ஜி பாரை சாப்பிடவே கூடாதா?
நீண்ட தூரப்பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல், வெளி இடங்களில் சுத்தமான, சுகாதாரமான உணவு கிடைக்காத சூழல், வெளியிடங்களில் சாப்பிடும் உணவு ஏற்றுக்கொள்ளுமா என்ற சந்தேகத்துடன் பயணிப்பவர்கள் ஆகியோர் ஒருவேளை மட்டும் எனர்ஜி பார் உண்ணலாம்.
எனர்ஜி பாரை வாங்கும் முன், பாக்கெட்டில் உள்ள சத்துகள், மூலப்பொருள்களின் விவரங்களைக் கவனித்து இது உங்களுக்கு ஏற்றதா எனச் சரிபார்த்து வாங்க வேண்டும். எனர்ஜி கிடைக்க என்ன சாப்பிடலாம்?
நட்ஸ், உலர்பழங்கள், விதைகள், ஃபிரெஷ் ஜூஸ், பழங்கள், டார்க் சாக்லேட், கடலை மிட்டாய், எள்ளு உருண்டை போன்ற இனிப்புகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

%d bloggers like this: