‘என்னமோ திட்டம் இருக்கு…’

வெயிலுக்கு இதமாக தொப்பிகூட போட முடியவில்லை. ஆர்.கே. நகர் பக்கம் போனால், ஒருவித ‘எதிர்பார்ப்போடு’ நம்மைப் பார்க்கிறார்கள்’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். 
‘‘எல்லா கெடுபிடிகளையும் மீறி, ஆர்.கே. நகரில் பணம் பாய்கிறதாமே?” என்றோம்.
‘‘ஆமாம்! இடைத்தேர்தல் சோதனைகளும் கெடுபிடிகளும் இந்த அளவுக்கு இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லை. ஆளும்கட்சி மிரண்டு போய்தான் இருக்கிறது. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என்று படை பட்டாளங்களைக் குவித்திருந்தாலும்,

அவர்கள் தயங்கித் தயங்கியே வேலை செய்கிறார்கள். அவர்களிடம் வழக்கமான இடைத்தேர்தல் உற்சாகம் இல்லை. சென்னை போலீஸ் ஆணையர் கரன் சின்ஹா, தொகுதிக்கே வந்து நேரடி ஆய்வுகள் செய்கிறார். போலீஸார் ஒவ்வொரு சந்திப்பிலும் நின்று வாகனங்களை மடக்கி சோதனை செய்து வருகின்றனர். அமைச்சர்களின் கார்களையும் சோதனை செய்யலாம் என உத்தரவு வந்திருக்கிறது. ஒரு ஷிப்டுக்கு 10 பறக்கும் படையினர் வீதம் 100 பறக்கும் படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர, வருமான வரித்துறை அதிகாரிகளும் ஆர்.கே. நகரில் தனியாக சுற்றி வருகிறார்கள். பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது எண்ணிக்கை அதிகமாகிவிடக்கூடாது என்ற பதற்றத்தில் இருக்கிறார்கள், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள். அதனால், முக்கியமான டீலிங்குகளை தொகுதிக்கு வெளியில் வைத்துக்கொள்கிறார்கள். எந்தக் காரணத்தாலும் தேர்தல் தள்ளிப்போய்விடக்கூடாது என்ற கவலை அவர்களுக்கு…’’
‘‘இடைத்தேர்தல் தள்ளிப்போகுமா?’’
‘‘அப்படி ஒரு தகவல் பரப்பப்படுகிறது. ஆனால், இன்றைய தேதியில் ஆர்.கே. நகரின் சூழ்நிலை தேர்தலைத் தள்ளிப்போடும் அளவுக்கு இல்லை. ‘ஆர்.கே. நகர் தேர்தலைத் தள்ளிப்போடக்கூடாது’ என டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து தம்பிதுரை மனு கொடுத்திருக்கிறார். ‘தேர்தலைத் திட்டமிட்ட தேதியில் நடத்த வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக இருக்கிறது’ என்றுதான் டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன.’’
‘‘முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவ், மீண்டும் பதவிக்கு வந்துவிட்டாரே?’’

‘‘வருமான வரி சோதனையைத் தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட ராவுக்கு மூன்று மாத காலத்துக்குள் மீண்டும் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டது, அரசு அதிகாரிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஒரு சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரியை நீண்ட நாட்களாகக் காத்திருப்போர் பட்டியலில் வைப்பது சரியாக இருக்காது’ என்பதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். மத்திய அரசும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்துவருகிறது. சஸ்பெண்டு ஆகியிருந்த ஞானதேசிகனுக்கும், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது இதேபோல்தான் பதவி வழங்கப்பட்டது. தற்போது முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் நிலையில், ராம மோகன ராவுக்குப் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் இந்த அரசுக்கு மிக மிக நெருக்கமாக இருந்தவர்தானே? மத்திய அரசில் செல்வாக்காக இருக்கும் ஆந்திர வி.வி.ஐ.பி ஒருவர், தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். டி.டி.வி.தினகரனும் பச்சைக்கொடி காட்ட, ராம மோகன் ராவ் மீண்டும் வந்து விட்டார். இவர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குப் போய்விட்டு வந்துதான், தன் இருக்கையில் அமர்ந்து முதல் கையெழுத்தைப் போட்டாராம்.’’
‘‘இடைத்தேர்தல் நடக்கும நேரத்தில் விஜயகாந்துக்கு என்னாச்சு?’’
‘‘ஏற்கெனவே அவர் எடுத்துக்கொண்ட மருத்துவச் சிகிச்சை, அவரின் மூளை நரம்பு பகுதியில் சில மாறுதல்களை ஏற்படுத்தி விட்டதாகச் சொல்கிறார்கள். இதற்கும் அவர் உரிய சிகிச்சை எடுத்து வந்தார். இடையில், கல்லீரல் பிரச்னையும் அவரைப் படாதபாடு படுத்தி வருகிறது என்கிறார்கள். திடீரென்று சென்னை மியாட் மருத்துவமனையில், மார்ச் 23-ம் தேதி இரவில் அனுமதிக்கப்பட்டார். பத்து நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பி விட்டார். அவருக்குக் கல்லீரல் பிரச்னை மற்றும் சிறுநீரகத் தொற்று பிரச்னைக்குத்தான் சிகிச்சை கொடுக்கப்பட்டதாம். முன்பு போலவே சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆலோசனை நடந்ததாம். ஆனால், ‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நேரத்தில் தே.மு.தி.க சார்பில் வேட்பாளரை நிறுத்திவிட்டு விஜயகாந்த், பிரேமலதா எல்லோரும் சிங்கப்பூர் சென்றுவிட்டால் இங்கு தேர்தல் பிரசாரம் செய்யவும் ஆள் இருக்காது. தொண்டர்களும் சோர்ந்துவிடுவார்கள்’ என்று சிங்கப்பூர் பயணத்தைத் தள்ளிப் போட்டார்களாம். பிரசாரக் களத்தில் பிரேமலதாதான் சுற்றி வருகிறார்.”
‘‘மீண்டும் ரஜினியைச் சுற்றி அரசியல் வட்டமிடுகிறதே?’’

‘‘மலேசிய பிரதமர் நஜீப் ரசாக், அரசு முறை சுற்றுப்பயணமாக மார்ச் 30-ம் தேதி டெல்லி செல்லும் வழியில் சென்னை வந்தார். ரஜினியை, அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து சொல்லும்போதுதான், ‘ஏப்ரல் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள இருக்கிறேன்’ என ரஜினி அறிவித்தார். ரசிகர்கள் சந்திப்புக்கான ஆலோசனைக் கூட்டம் ஏப்ரல் 2-ம் தேதி, ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்தது. ரசிகர்மன்றப் பொறுப்பாளர்கள் சத்தியநாராயணா, சுதாகரன் தலைமை தாங்கினர். மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்துப் பேசினர். ‘ஒரு மாவட்டத்துக்கு 250 பேர் வரை புகைப்படம் எடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்றபடி வேறு எதைப்பற்றியும் ஆலோசிக்கவில்லை’ என்று சுதாகரன் சொன்னார்.”
‘‘நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள்?’’
“ரசிகர் மன்றப் பொறுப்பாளர்கள் அடக்கி வாசித்தாலும், ரசிகர்கள் இனிமேல் பொறுமை காப்பதாக இல்லை. பலர் கொடிகளோடு வந்திருந்தார்கள். அவர்கள், ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி வெளிப்படையாகவே கூட்டத்தில் பேசியிருக்கிறார்கள். ‘தமிழகத்தின் அரசியல் சூழல் தற்போது மோசமாக இருக்கிறது. நம்பிக்கை தரக்கூடிய தலைவர்களே இல்லை. மக்கள், மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். ஏற்கெனவே ஒரு முறை வந்த வாய்ப்பை தலைவர் தவற விட்டுவிட்டார். இது இரண்டாவது வாய்ப்பு. இதை மிஸ் பண்ணக்கூடாது. அரசியலுக்கு வர இதுதான் சரியான காலகட்டம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இப்படி பெரும்பாலான நிர்வாகிகள் பேச, ‘இதையெல்லாம் நாங்கள் தலைவரிடம் சொல்ல முடியாது. உங்கள் கருத்துக்களையும் விருப்பங்களையும் கடிதமாக எழுதிக்கொடுங்கள்’ என்றார்களாம் சத்தியநாராயணாவும், சுதாகரனும். அதன்படி பலரும் கடிதம் எழுதிக்கொடுத்துள்ளார்கள். அவை ரஜினியிடம் தரப்பட்டுள்ளன.’’
‘‘ஓஹோ…”
‘‘கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதிதான் ரசிகர்களை மொத்தமாக அவர் சந்தித்தது. ஈழத் தமிழர்கள் பிரச்னைக்காக நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்தில் நவம்பர் 1-ம் தேதி பங்கேற்று, இலங்கை அரசை கடுமையாகத் தாக்கிப் பேசிய ரஜினி, ‘ஈழத்தில் தமிழர்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளனர்’ என்று முழங்கினார். அந்தச் சூட்டோடுதான் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்புக்கும் ஏற்பாடு செய்தார். ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த அந்தச் சந்திப்பில் கிட்டத்தட்ட 1000 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 30 பேருக்குக் கேள்வி கேட்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ‘விருப்பமில்லாத எதையும் நான் அடுத்தவர் வற்புறுத்தலுக்காகச் செய்யமாட்டேன். ஆனால், ஆண்டவன் நினைத்தால் நாளையே அரசியல் கட்சிதான்’ என்றவர், ‘இப்போது தமிழ்நாடு மட்டுமல்ல, நாடே சரியில்லை. அமைதியாக அவரவர் பணிகளில் கவனம் செலுத்துங்கள், அரசியல் பற்றிப் பின்னர் பார்க்கலாம்’ என்று சொல்லி ரசிகர்களை வழியனுப்பி வைத்தார். ரஜினி அன்று சொன்னது போன்ற சூழ்நிலைதான் இன்றும் உள்ளது.’’
‘‘ரஜினி பற்றிய பரபரப்புக்கு அவரின் பட ரிலீஸ்தான் காரணம் என்றும், பி.ஜே.பி பிரஷர் என்றும் இரண்டுவிதமாகச் சொல்கிறார்களே?’’
‘‘ரஜினியின் ‘2.0’ படம் தீபாவளிக்குத்தான் ரிலீஸ் ஆகிறது. அதற்கு இந்த அளவுக்கு முன்கூட்டியே ரசிகர்களைச் சந்திக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ரஜினி மீது பி.ஜே.பி-க்கு ஒரு கண் இருப்பது உண்மை. எப்படியாவது தமிழகத்தில் கால் ஊன்ற வேண்டும் என்ற ஒரு எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது. அதை நேரடியாகச் சொல்லாவிட்டாலும், ரஜினிக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். ‘இதை ஏற்றுக்கொள்வதா… வேண்டாமா?’ என்று இன்னும் ரஜினி முடிவெடுக்கவில்லை. இது பி.ஜே.பி-யின் டெல்லி தலைமைக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ‘இதில் ஏதோ ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார். அவர் மனதுக்குள் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது. அதுபற்றியும் இந்தச் சந்திப்பில் ரசிகர்களின் மனநிலையை ரஜினி அறியக்கூடும். 2008-ல் நடந்த பிரமாண்ட சந்திப்பு போல ஒரே நாளில் அனைவரையும் பார்க்க அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்பதால்தான் தனித்தனியாகப் பார்க்கிறார்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பரபரப்பையும் தாண்டி, தமிழகத்தில் அத்தனை அரசியல் கட்சிகளின் கவனமும் ரஜினி பக்கம் இப்போது திரும்பியிருக்கிறது’’ என்ற கழுகார், சட்டென பறந்தார்.

%d bloggers like this: