மருந்தாகும் கீரைகள்!

கீரைகள்… மருந்தே உணவின் வடிவு எடுத்த இயற்கையின் அற்புதங்கள். இவற்றில் சில கீரைகளை மூவா மருந்தாகும் மூலிகைகள் என்றே நம் முன்னோர் கொண்டாடினர். கீரைகளை மருத்துவப் பொக்கிஷங்கள் எனச் சொல்லலாம். சத்துகளை அள்ளித்தருவதில் முதன்மையான இடம் கீரைகளுக்கு உண்டு. கீரைகளில் எவை எல்லாம் அதிகப்படியான மருத்துவக்குணம் கொண்டவை என்று பார்ப்போம்.

முடக்கத்தான் கீரை
முடக்கத்தான் கீரையில் அதிக அளவு கால்சியம் உள்ளதால், மூட்டுவலிக்கு மிகவும் நல்லது. இதில், அதிகக் கசப்புத்தன்மை உள்ளதால் தோசை மாவோடு சேர்த்து அரைத்து தோசையாகச் சுட்டுச் சாப்பிடலாம். இதை, நல்லெண்ணெயில் வதக்கி, ஒரு துணியில் கட்டி, மூட்டில் வலி உள்ள பகுதியில் வைத்துக் கட்டிக்கொண்டால், மூட்டுவலி சரியாகும்.

மூக்கிரட்டைக் கீரை
உடலிலுள்ள உப்புத்தன்மையைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. சிறுநீரகத்தில் கல், சிறுநீரகக் கோளாறுகள் உள்ளவர்கள், கஷாயமாகச் சாப்பிடலாம். மோரில் கலந்தும் பருகலாம். இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், ரத்தச்சோகையையும் கட்டுப்படுத்தும்.

கல்யாண முருங்கை
இந்தக் கீரை பெண்களுக்கும், ரத்தச்சோகை உள்ளவர்களுக்கும் சிறந்த மருந்து. ரத்தச்சோகை உள்ளவர்கள் இந்தக் கீரையைப் பூண்டு மற்றும் மிளகோடு சேர்த்துக் கஷாயமாகத் தொடர்ந்து பருக வேண்டும். மாதவிடாய் தடைப்படும் பெண்கள், இரவு முழுவதும் ஊறவைத்த கறுப்பு எள்ளின் தண்ணீரில் இந்தக் கீரையை அரைத்து, உட்கொண்டுவந்தால் மாதவிடாய் சீராகும்.
கீழாநெல்லி
கீழாநெல்லிக் கீரை, ரத்தத்தில் உள்ள நச்சுக் கிருமிகளைப் போக்கக்கூடிய தன்மையுடையது. மஞ்சள் காமாலை உள்ளவர்கள் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் கீழாநெல்லிக் கீரையின் சாற்றை 35 மி.லி பாலுடன் சேர்த்து, மூன்று நாள்கள் தொடர்ந்து உட்கொண்டுவர, நல்ல முன்னேற்றம் தெரியும். மேலும், மாதவிடாய்க் காலத்தில் அதிக ரத்தப்போக்கு உடைய பெண்கள் கீழாநெல்லிக் கீரையின் சாற்றை 35 மி.லி பாலுடன் சேர்த்து உட்கொண்டுவந்தால், மாதவிடாய் சீராகும்.
மொசுமொசுக்கை
இந்தக் கீரை, மார்புச் சளி, மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு. இதை, மிளகுடன் சேர்த்துக் கஷாயமாகப் பருகினால், மார்பகச் சளி விரைவில் குணமடையும்.

துத்திக் கீரை
துத்திக் கீரை உடல் சூட்டைத் தணிக்க வல்லது. வயிற்றுப் புண்னை ஆற்றும். சிறுநீரகத்தில் உள்ள கற்களைக் கரைத்துவிடும். இந்தக் கீரையைத் துவையலாகச் சாப்பிட்டால், மூலச்சூடு நீங்கும்;  மலச்சிக்கலைப் போக்கும்.

தூதுவளை
தூதுவளைக் கீரை, ஆஸ்துமா, சளி, மூச்சு இரைப்பு என அனைத்து நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களையும் சரிசெய்ய வல்லது. இந்தக் கீரையைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு, கஷாயமாகச் செய்து,  தொடர்ந்து மூன்று நாள்கள் பருகிவந்தால், பாதிப்பின் தீவிரம் குறையும். சளித் தொல்லை நீங்கும். இந்தக் கீரையை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.  காரணம், இது உடலுக்கு அதிக உஷ்ணத்தைத் தரும்.

வல்லாரை
இந்தக் கீரை, மூளையில் உள்ள ரத்தநாளங்களைத் தூண்டும் தன்மைகொண்டது. இந்தக் கீரை, குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் இந்தக் கீரையைக் கஷாயமாகப் பருக மறுத்தால், குழம்பு அல்லது துவையலாக வைத்துக் கொடுக்கலாம். நினைவாற்றலை மேம்படுத்தும். மூளையைச் சிறப்பாகச் செயல்படவைக்கும்.

%d bloggers like this: