வாரம் ஒரு முறை!

எண்ணெய் தேய்த்து குளிப்பது, நம் பாரம்பரிய மரபு சார்ந்த பழக்க வழக்கங்களில் ஒன்றாக உள்ளது. அதனால், நம் முன்னோர், வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இது ஒருவகையான ஆயுர்வேத முறையாகும். எண்ணெய் மூலம், பல நோய்களுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளனர்.

நம் உடலின் வெப்பத்தன்மை அதிகரிப்பதால், பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, வெயில் காலங்களில் வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்றவை அதிகம் ஏற்படுகின்றன. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
குறிப்பாக, பெண்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையிலும், ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமையிலும் நல்லெண்ணெய் குளியல் எடுப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. நல்லெண்ணையை தலைக்கும் தேய்த்து குளிக்கும் போது, அதை அடுப்பில் காய வைத்து, அதில் மூலிகைகள் சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய பின், வெதுவெதுப்பாக இருக்கும் போது தலையில் தேய்த்து, அரை மணி கழித்து, சுத்தமான சிகைக்காய் தூள் தேய்த்து குளிக்க வேண்டும்.
நோய்கள் அண்டாது
எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம், இன்றைக்கு இளைஞர்கள் மத்தியில் குறைந்து வருகிறது. எண்ணெய் குளியல் மூலம் உடல் வெப்பம் தணிந்து கண்கள் குளிச்சியாகும். உடல் சூட்டால் வரும் நோய்கள், நம்மை அண்டாது. வாரம் ஒருமுறையாவது, நல்லெண்ணெய் குளியல் எடுத்து வருவது நல்லது. இதனால், நோய்களின் தாக்கம் குறைவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக வளரும். வறண்ட தோல் உள்ளவர்களுக்கு, எண்ணெய் குளியல் ஓர் வரப்பிரசாதம். உடல் முழுவதும் எண்ணெயை விட்டு நன்றாக அழுத்தித் தேய்த்தால், வியர்வையின் காரணமாக தோலில் ஏற்பட்டு உள்ள அழுக்குகளும் அடைப்புகளும் நீங்கிவிடும். உடல் சூடு குறைந்து, மனம் புத்துணர்வை பெறும்.
நல்லெண்ணெய் குளியலின் மூலம் தலைமுடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும். முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாக இருக்கும்.
தூக்க பிரச்னைக்கு தீர்வு
வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும். உடலில் உள்ள நரம்புகள், ரிலாக்ஸ் ஆகி, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எண்ணெய் குளியலில், தலைக்கு மட்டுமின்றி, உடலுக்கும் நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும். பொடுகுத் தொல்லை இருந்தால் தீரும். தூக்கமின்மை பிரச்னையில் இருந்து விடுபட்டு, நல்ல நிம்மதியான
தூக்கத்தை பெறலாம்.
கம்ப்யூட்டர் முன், நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால், கண்கள் சிவப்பாகி, அதன் ஆரோக்கியம் கெடும். எண்ணெய் குளியல் மூலம், பார்வைக்கு புது தெம்பு கிடைக்கும். முடி உதிர்தல் அதிகம் இருந்தால், நல்லெண்ணெய் குளியலை, வாரம் ஒருமுறை மேற்கொண்டு வர, நல்ல பலன் கிடைக்கும்.
பழங்கள், மோர், தயிர், பால், குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் போன்ற எந்தக் குளிர்ச்சியான பொருட்களையும் எண்ணெய் தேய்த்து குளித்த நாளில் உண்ணக் கூடாது. காலை 5 மணி முதல் 7 மணி வரை தான் எண்ணெய் தேய்த்துக் குளிக்க சரியான நேரம். நன்றாக எண்ணெய் தேய்த்த 15 முதல் 30 நிமிடங்களுக்குள் குளித்துவிட வேண்டும். குளித்து முடித்தவுடன் தலையை நன்றாக ஈரம் போகத் துவட்ட வேண்டும்.

%d bloggers like this: