எண்ணெய்ப் பலகாரங்கள் சாப்பிடலாமா?

லகாரங்கள் என்றதுமே நாக்கு ஊறத் தொடங்குகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகம் விரும்புவது எண்ணெய்ப் பலகாரங்களைத்தான். ஆனால், 40 வயதைக் கடந்தாலே மருத்துவர்கள் சொல்லும் எண்ணெய்ப் பலகாரங்கள் குறித்த எச்சரிக்கைகளால் உடலுக்கும் மனதுக்கும் போராட்டம்

தொடங்கிவிடுகிறது. அதிக கொலஸ்ட்ராலால் ஏற்படும் உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்ற நோய்கள் குறித்த அச்சங்களால் எண்ணெய்ப் பலகாரம் என்றாலே வாய்க்குப் பூட்டு போட்டுக்கொள்ள நேர்கிறது. உண்மையில் எல்லோரும் எல்லா வகை எண்ணெய்ப் பதார்த்தங்களையும் தவிர்த்துவிட வேண்டுமா? எண்ணெய் பலகாரங்களால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்று பார்ப்போம்.

எண்ணெய் உணவுகள்
எண்ணெய் உணவுகளை எவ்வளவு நாள்களுக்கு ஒருமுறை எடுத்துக்கொள்கிறோம், எந்த எண்ணெய் உபயோகிக்கிறோம், எவ்வளவு நாள் அதைப் பயன்படுத்துகிறோம் போன்ற விஷயங்களை வைத்துத்தான் எண்ணெய் உணவுகள் நல்லதா, கெட்டதா என்பதைத் தீர்மானிக்க முடியும். முழுமையாக அனைத்து எண்ணெய் உணவுகளும் கெடுதல் என்று சொல்ல முடியாது. அதற்காக தினமும் எண்ணெய்யில் பொரித்த உணவுகளாக எடுத்துக்கொண்டால், அது கண்டிப்பாக உடலுக்கு அனைத்துவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
எண்ணெய்யின் அளவு:
சராசரியாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 20 மி.கி எண்ணெயை எடுத்துக்கொள்ளலாம். அதாவது நான்கு டீஸ்பூன் எண்ணெய். குழந்தைகளுக்கு 4.5 டீஸ்பூன் எண்ணெய் வரை பயன்படுத்தலாம். தவறு இல்லை. எடை குறைப்பில் ஈடுபடுபவர்கள், கொலஸ்ட்ரால் பிரச்னை  உள்ளவர்கள் மூன்று டீஸ்பூன் எண்ணெயையும் இதய நோயாளிகள் இரண்டு டீஸ்பூனுக்குக் குறைவாகவும் மருத்துவர் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ளலாம்.
தினசரி உணவில் சரியான அளவில் புரதச்சத்து, மாவுச்சத்து, மினரல்கள், வைட்டமின் களுடன் கொழுப்புச்சத்தும் இருக்க வேண்டும். அந்தக் கொழுப்புச்சத்துக்காக நாம் எண்ணெய் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், சமநிலையுடன் அனைத்துச் சத்துகளும் இருக்க வேண்டும்.

எண்ணெய் உணவுகளும் நோய்களும்

வயிறு சம்பந்தப்பட்ட நோய் பாதிப்பு உள்ளவர்கள் அல்லது வேறு ஏதாவது உடல் உபாதைகள் உள்ளவர்கள், அளவாக எண்ணெய் சேர்த்துக்கொள்வது நல்லது.
உதாரணமாக, வடையை எடுத்துக் கொள்வோம். அதில் இருக்கும் பருப்பில் புரதச்சத்து நிறைந்துள்ளது. அதை எண்ணெயில் போட்டு எடுக்கும்போது அதனுடன் கொழுப்புச்சத்தும் உடன் சேர்கிறது. எனவே, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, மாவுச்சத்து என்று ஒரு சமநிலை உணவில் உருவாகிறது. இதை, அளவோடு எடுத்துக்கொண்டால் உடலுக்கு எந்தத் தீங்கும் இல்லை.

எண்ணெய் உணவுகள் நெஞ்சு எரிச்சலை அதிகரிக்கக்கூடும் என்பதால் கெர்டு (Gerd-Gastrooesophagal reflex disorder) எனப்படும் நெஞ்சு எரிச்சல் பிரச்னை இருப்பவர்கள் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
கெட்ட கொழுப்பு, நல்ல கொழுப்பு:
ஹெச்.டி.எல் (HDL) எனும் நல்ல கொழுப்பு நம் உடலில் அதிகமாக இருக்க வேண்டும். எல்.டி.எல் (LDL) எனும் கெட்ட கொழுப்பு குறைவாக  இருக்க வேண்டும். அதேபோல், நிறைவுறா கொழுப்புகள் அதிகமாகவும் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாகவும் இருக்க வேண்டும். நல்ல கொழுப்பு, சூரியகாந்தி எண்ணெய்யிலும் மீன் ஈரல் எண்ணெய்யிலும் அதிகமாக இருக்கும். எல்லாவிதமான எண்ணெய்களுமே உடலுக்குத் தேவை. எந்தவிதக் கலப்படமும் இல்லாமல் செக்கில் இருந்து ஆட்டப்பட்ட கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் உடலுக்கு ஆரோக்கியமானவையே. ஆனால், அவற்றையும் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவசியம்.
உபயோகித்த எண்ணெய்
ஒரு முறை உபயோகித்த எண்ணெயை மீண்டும் உபயோகிப்பதாலும் சில கலப்படங்களை எண்ணெயில் கலக்குவதாலும் டிரான்ஸ்ஃபேட் அதிகரிக்கிறது. இந்தக் கொழுப்பினால் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிப்பதோடு, நல்ல கொழுப்பின் அளவு குறைகிறது. நல்ல கொழுப்பைவிட கெட்ட கொழுப்பு அதிகமாவதால், இதயநோய் போன்றவை வர வாய்ப்பு உள்ளது. மேலும், எண்ணெய் போன்ற உணவுகளை அதிக வெப்பநிலையில் கொதிக்க வைக்கும்போது, அதில் கார்சினோஜன் எனும் புற்றுநோய் செல்களை அதிகரிக்கும் வேதிப் பொருள் உருவாகிறது. எனவே, எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதைத் தவிர்ப்பதே நல்லது.

%d bloggers like this: