நகம் கடிக்கும் முன்!

நகம் என்பது, நம் உடல் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் ஓர் முக்கிய காரணியாக செயல்படுகிறது. இதை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். உடலில் ஏற்படும் ஒவ்வொரு பாதிப்புக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னைகளை நகம் காட்டுகிறது.
விளையாட்டு குணமிக்க குழந்தைகள் பலருக்கு, நகம் கடிக்கும் பழக்கம் அதிகளவில் காணப்படுகிறது.

இதனால், பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளதாக, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, நகம் கடிப்பவர்களின் விரல் நுனிகளில் கிருமிகள் சேர்ந்து, “ஹியூமன் பாப்பில்லோமா’ வைரஸ் தாக்குதல் ஏற்படலாம். இது அதிகமாகும் போது புற்று நோய் வருவதற்கான வாய்ப்பும் உண்டு.
நம்முடைய நகங்களில் இருக்கும் பாக்டீரியா, ஈஸ்ட், நுண்ணுயிரிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, நகங்களின் மேல் தோலை சிவப்பாக்கி, தடித்து வீங்க வைத்துவிடும். இந்த பழக்கத்தால், நாளடைவில் நகக்கண் பகுதிகளில் சீழ் கட்ட வாய்ப்பிருக்கிறது.
நகங்களை கடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், அந்த நகங்களை பல சமயங்களில் விழுங்குகிறார்கள். இப்படி விழுங்குவதால், செரிமான அமிலத்தால் அவை செரிமானமாகாமல், வயிற்றில் அவை அப்படியே தங்கி, அதுவே பெரும் பிரச்னையை ஏற்படுத்தும்.
தொடர்ந்து பற்களால் நகங்களை கடிக்கும் போது, அது பற்களின் எனாமலை பாதித்து, பற்களை வலிமையிழக்க செய்துவிடும்.
தோல் வியாதிகள், நகக்கண் நோய், சளி போன்ற எளிதில் தோற்றக் கூடிய வியாதிகள் மற்றும் நமது வாய் மற்றும் மூக்கு வலி தொற்றக் கூடிய நோய்கள் வரவும் காரணமாக அமைந்து விடுகிறது.
நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதிலிருந்து, விடுபட இதோ சில எளிய வழிமுறைகள்:
எப்போதும் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருத்தல். முனைகளை வழுவழுப்பாக்கிவிட்டால் கடிக்கும் ஆர்வம் குறைந்து விடும். ஸ்வெட்டர் பின்னுதல், கைவினைப் பொருட்கள் செய்தல் என, கைகளுக்கும் விரல்களுக்கும் அதிக வேலைகள் கொடுக்கலாம். நகம் கடிப்பதால் வரும் கேடுகளை எளிய முறையில் எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம்.
மனநலப் பயிற்சிகளை மேற்கொண்டு பயன் பெறலாம். வாழ்க்கை முறைகளை எளிய முறையில், அதிக மனவருத்தம் தராத வகையில் அமைத்துக் கொண்டால், பிரச்னைகளை பெரிதாக்காமல் அமைதியான வாழ்க்கையைத் தொடர்ந்தால் நகம் கடிக்கும் பழக்கம் தொடராது.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், “ஈ.எப்.டி’ எனப்படும் “உணர்வுகளை சுதந்திரமாக அமைத்துக் கொள்ளுதல்’ என்னும் சிகிச்சை, முறையான நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. இதன் மூலம் நகம் கடித்தலை மட்டுமல்ல, வேறு சில பிரச்னைகளையும் தீர்க்கலாம். “பாசிடிவ் திங்கிங்’ அணுகுமுறையை பின்பற்றலாம். ஒன்றை அழுத்தமாக நினைவில் கொள்வது நல்லது. நகம் கடிப்பது ஆரோக்கியக் கேடு. அதைத் தவிர்ப்பது நல்லது.
ஒருவரது உடலில் இரும்புச் சத்துக் குறைவாக இருப்பின், நகங்கள் உடைவது அல்லது பட்டையாக விரிந்து வளர்வதன் மூலம் அறியலாம். சிலருக்கு
நகங்களில் மேடு பள்ளங்கள் ஏற்பட்டிருக்கும். இதுவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டையே காட்டுகிறது. உடல்நிலையில் ஏற்படும் சில தற்காலிக பாதிப்புகளினால், நகங்களின் வளர்ச்சியில் கூட மாற்றங்களை ஏற்படுத்தும்.

%d bloggers like this: