உடல் பளபளப்புக்கு வெண்டை!

மருத்துவக் குணம் கொண்ட காய்களில் முக்கியமானது, வெண்டைக்காய். பல நோய்களை போக்கும் தன்மை உள்ளது. வெண்டைக்காயில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ், புத்தி கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது. உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவிதமான தாவர பசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது.

எளிதில் ரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு, சக்தியாக மாறும் மாவுச்சத்தும், இதில் உள்ளன. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் “பெக்டின்’ என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத் துடிப் பை சீராக்கும் மக்னீசியம் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி, 66 ஆகும். இத்தகைய காரணங்களால், வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாக திகழ்கிறது.
வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதிலுள்ள ஒருவித அமிலம், இதை உண்டாக்குகிறது. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் திரவம் வெளியேறி சமைக்கும்போது “ருசி’ குறைந்து விடும்.
வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் மலச்சிக்கல் நீங்கும். இதனால் குடல் சுத்தமாவதோடு, வாய் துர்நாற்றமும் அகலும். மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை, மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொண்டால், பலன் கிடைக்கும்.
வெண்டைக்காயில் உயர்தர லேக்ஸடிவ் உள்ளது. இது, உடல் நலனுக்கு ஏற்றது. அல்சரை கட்டுப்படுத்துகிறது. வாயு கோளாறுகளை தடுக்கிறது. வெண்டைக்காயை நன்றாக வேக வைத்து அந்த நீரை கூந்தலில் தடவி வர கூந்தல் உதிர்தலை தடுக்கும். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்கு குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடலை பளபளப்பாக மாற்றவும், அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.
நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன.
தயிரில் உள்ளதைப்போல இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. இதில் வைட்டமின் “பி’ காணப்படுகிறது. வெண்டைக்காயை, குழந்தைகளுக்கு வதக்கி உணவில் சேர்த்து தரலாம். குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது.
எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள், இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், மினுமினுப்பான தோலையும் பெறலாம்; உடலை, சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ளலாம். வயிற்றுப்புண் குணமாக வெண்டைக்காய் நல்ல மருந்து.
வெண்டைக்காய், மஞ்சள், சுண்டைக்காய் வற்றல், சீரகம், கடுகு, வெங்காயம், பூண்டு, பட்டை, கருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து, அரிசியுடன் கலந்து
கஞ்சியாகக் கொதிக்க வைத்து, தயிருடன் கலந்து வர, வயிற்று உபாதைகள் நீங்கும். குழந்தைகளை, சிறு வயதிலிருந்தே சாப்பிட கொடுத்தால், பல்வேறு நோய் உபாதைகளிலிருந்து, தற்காத்துக் கொள்ள உதவும்.

%d bloggers like this: