இளநீரும் ஒரு மருத்துவர்

கோடை காலம் துவங்குவதற்கு முன்பே, வெயில் வாட்டி எடுக்கிறது. வெயிலில் தொடர்ந்து பணி செய்வோர், வெப்பத்தால் உடல் சோர்வு மற்றும் உடல் சூட்டை தணிக்க, நீர் கடுப்பை போக்க இளநீர் அருமையான பானம்.

இளநீர், உடலுக்கு குளிர்ச்சியை அளித்து, ரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இளநீர் இயற்கை அளித்த இனிய பானம். பல்வேறு நோய்களை தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது.
இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும ரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் தடுக்க உறுதுணை புரிகிறது. மூல நோய், நாட்பட்ட சீதபேதி, ரத்தபேதி, கர்ப்பப்பை கோளாறு, ரத்தபோக்கு காரணமாக வரும் ரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றுக்கு, இளநீர் மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.
பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது, மருத்துவரிடம் செல்வதற்கு முன், 2 குவளை இளநீர் அருந்துவது, ஒரு பாட்டில் குளுகோஸ் ஏற்றுவதற்குச் சமம். டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள், நிமோனியா, வாந்தி, பேதி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது, இளநீரைத் தாராளமாக குடிக்க வேண்டும். அறுவை சிகிச்சைகளுக்குப் பின், திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில், இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவை சிகிக்சைப் புண் விரைவில் குணமடையும்.
மே, ஜூன் ஆகிய 2 மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது உடலிலிருந்து வியர்வை ஏராளமாக வெளியேறுவதால், நீர்க்கடுப்பு ஏற்படலாம். அப்போது இரண்டு குவளை இளநீர் பருகிட, ஒரு மணி நேரத்துக்குள் சிறுநீர் தாராளமாகப் போகும். சிறுநீர்ப் பாதையில் சில நேரம் புண்ணாக இருந்தால் கிருமிகள் அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு, இளநீரில் வெந்தயம் சேர்த்து பருகி வர, விரைவில் குணமாகும்.
பெண்களுக்கு, மாதவிலக்கின் போது, அடிவயிற்றில் அதிகமாக வலி எடுக்கும். அதற்கு இளநீர் சிறந்த மருந்து. பேதி சீதபேதி, ரத்த பேதி ஏற்படும் போது, இளநீர் பருகினால், உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு போன்ற கோளாறுகள் வந்துவிட்டால், இளநீர் குடிப்பது சிறந்தது. உணவு எளிதில் ஜீரணமாவதற்கு, இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால், செரிமான உறுப்பு கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு, வாந்தி வரும்போது, இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும்.
கோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும், குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால், உடல் வளமை பெற்று, நோயற்று, ஆரோக்கியத்துடன் வாழலாம். பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.
ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் உட்கொண்ட பின்பே, இளநீரை குடிக்க வேண்டும்.
உடலுக்குக் கேடு தரும் பல்வேறு வேதிப்பொருட்களை உள்ளடக்கிய குளிர்பானங்கள் அருந்துவதை விட, பல மடங்கு நலம் தரும் இயற்கை பானமான இளநீரைப் பயன்படுத்தினால், ஆரோக்கியத்தை கொடுக்கும்.

%d bloggers like this: