உயர் ரத்த அழுத்தம்

ப்பு இல்லா பண்டம் குப்பையிலே’ என்பார்கள். சிலர் வீட்டில் உப்பே சேர்க்காமல் சமைப்பார்கள். இதற்குக் காரணம், வீட்டில் யாருக்காவது ரத்த அழுத்த பிரச்னை இருக்கக்கூடும். அவருக்கெனத் தனியாகச் சமைக்க முடியாது என்பதால், சமைக்கும்போதே உப்பு இல்லாமல் சமைத்து, அதையே குடும்பத்தில் அனைவரும் சாப்பிடப் பழகி இருப்பார்கள். இப்படிப் பழகிப்போன இவர்களின் நாக்கு, உப்பு சேர்த்த உணவைச் சுவைக்கும்போது, “அய்யோ… இவ்ளோ உப்பா” என்பார்கள். ரத்த அழுத்தம் இருப்பவரைக் கருத்தில்கொண்டு இப்படிக் குடும்பத்தில் அனைவருமே உப்பில்லாமல் சாப்பிடப் பழகியிருப்பார்கள். அவ்வளவு பெரிய பிரச்னையா இந்த ‘உயர் ரத்த அழுத்தம்’?

ரத்த அழுத்தம் என்றால் என்ன?


ரத்தக்குழாய்களில் ரத்தம் ஓடிக் கொண்டே இருக்கும். இது, இதயத்துக்குள் வரும்போது ஒரு வேகத்திலும் வெளியேறும்போது வேறொரு வேகத்திலும் ஓடும். இந்த வேகத்தை, ரத்த அழுத்தம் (Blood pressure) என மருத்துவ ரீதியாகக் குறிப்பிடுகிறோம். பெரிய தமனிகளில் (Large Arteries) அழுத்தம் ஏற்பட்டு, சீரான ரத்த ஓட்டத்தை உடலுக்குள் செலுத்துகிறது.
உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன?
ஆரோக்கியமான ஒருவரின் ரத்த அழுத்தம் “120/80 mmHg” இருக்க வேண்டும். 120 என்பதைச் சிஸ்டாலிக் அழுத்தம் (Systolic pressure) என்றும் 80 என்பதை டயஸ்டாலிக் அழுத்தம் (Diastolic pressure) என்றும் குறிப்பிடுவோம். ரத்த அழுத்தமானது 130/90 mmHg என்ற அளவைத் தாண்டும்போது, உயர் ரத்த அழுத்தம் எனப்படுகிறது.
உயர் ரத்த அழுத்தம் எப்போது ஏற்படுகிறது?
உடலில் ரத்த அழுத்தம் சாதாரணமாகவே இருக்கும். ஏதேனும் ஒரு பாகத்தில் சிக்கல் ஏற்பட்டால் ரத்த அழுத்தம் உடலில் அதிகரிக்கிறது. இதனால், ரத்த அழுத்தத்தின் அளவு மாறுகிறது. மகிழ்ச்சி, துக்கம், கவலை, கோபம், பயம், அதிர்ச்சி என ஒவ்வொரு உணர்வு நிலைக்கும் ரத்த அழுத்தம் சிறிது அதிகமாகவோ, குறைவாகவோ மாறுகிறது. வயது அதிகரிக்கும் போது ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது.
உடல்பருமன், சர்க்கரைநோய், சிறுநீரக நோய், ரத்தத்தில் அதிகளவில் கொழுப்பு சேருதல், மதுவால் பாதிப்பு, புகைப்பதால் பாதிப்பு, மனஅழுத்தம், தூக்கமின்மை போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிறது.
‘தனித்த உயர் ரத்த அழுத்தம்’ என்றால்?
‘தனித்த உயர் ரத்த அழுத்தம்’ (Isolated Systolic Hypertension) என்பது சிஸ்டாலிக் அழுத்தம் மட்டும் 180-க்கு மேல் இருக்கும். டயஸ்டாலிக் அழுத்தம் சரியாக இருக்கும். பொதுவாக வயதானவர்களுக்குத்தான் இந்தப் பிரச்னை ஏற்படும். இவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, மருத்துவரின் ஆலோசனைப்படி வாழ்வியலை பின்பற்றுவது நல்லது.

உயர் ரத்த அழுத்தம் – பாதிப்புகள் என்னென்ன?
* மாரடைப்பு
* இதய நோய்கள்
* பக்கவாதம்
* கண் தொடர்பான பிரச்னைகள்
* சிறுநீரகச் செயலிழப்பு
* நெஞ்சுவலி
* கால் வலி, நடக்க முடியாமல் போகுதல்
தீர்வுகள் என்னென்ன?
* மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் எடுப்பது, அவசியமான டெஸ்ட்களைச் செய்துகொள்வது முக்கியம்.
* வருடம் தவறாமல் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்வது அவசியம்.
* தினமும் குறைந்தது 6-7 மணி நேரமாவது தூங்க வேண்டும்.
* அதிகமாகக் கோபப்படுவது, உணர்ச்சிவசப் படுவது ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.
* தினமும் 40 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
* உணவில் உப்பின் அளவை வெகுவாகக் குறைத்துக் கொள்வது நல்லது.
* காபி, தேநீருக்குப் பதிலாகச் சர்க்கரை சேர்க்காத பழச்சாறு, லெமன் டீ, கிரீன் டீ குடிக்கலாம். இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
* கொழுப்பு அதிகம் உள்ள இறைச்சி வகைகள், முட்டையின் மஞ்சள் கரு, தயிர், நெய், வெண்ணெய், ஐஸ்க்ரீம், சீஸ், க்ரீம் நிறைந்த கேக் வகைகள், இனிப்பு வகைகள், சாக்லேட் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

தடுக்கும் வழிகள் என்னென்ன?
* வாழ்வியல் பழக்கத்தையும் உணவுப் பழக்கத்தையும் ஆரோக்கியமாக மாற்றுவதே முதல் சிகிச்சை.
* நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய் ஆகியவற்றைக் குறைந்த அளவில் பயன்படுத்தலாம். இவையெல்லாம் மரச் செக்கில் தயாரிக்கப்பட்டதாக இருப்பது நல்லது.
* உப்பு அதிகம் சேர்க்கப்படும் ஊறுகாய், கருவாடு, அப்பளம், சிப்ஸ், புளித்த மோர் போன்றவற்றையும், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளையும் அவசியம் தவிர்க்க வேண்டும்.
* பொட்டாசியம், நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்துகள் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்ப்பதால் உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்கலாம். பால், வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, உளுந்தால் தயாரித்த உணவுகள், முட்டைகோஸ், காலிஃபிளவர், கீரைகள், இளநீர் மற்றும் மீன் உணவுகளைச் சாப்பிடலாம்.
அறிகுறிகள் என்னென்ன?
* தலைவலி
* மயக்கம்
* வாந்தி
* வாசத்தில் பிரச்னை
* களைப்பு
* பார்வைக் கோளாறுகள்
* குமட்டல்
* படபடப்பு

%d bloggers like this: