பொதுமக்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் வீடுகள் பெற்றுத் தருவதாக பணம் கேட்டு ஏமாற்றும் இடைத்தரகர்களைப் பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம்” என்று தமிழக அரசு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தின் நகர குடிசைப்பகுதிகளில் வாழும் குடும்பங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த, பல்வேறு வீட்டு வசதி, குடிசைப்பகுதி மேம்பாடு மற்றும் மறுகுடியமர்வு திட்டப் பணிகளை, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் கடந்த  45 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான  முறையில்  செயல்படுத்தி வருகிறது. வாரியத்தின் பணிகள், முதலாவதாக சென்னை நகரில் செயல்படுத்தப்பட்டு, பின்னர் தமிழகத்திலுள்ள இதர நகரங்களுக்கும்  விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய களப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள்,  மனை மேம்பாடு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு, மறு வாழ்வு மற்றும்  மறு குடியமர்வு, சிதிலமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளை மீண்டும் கட்டுதல், பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்கள் மற்றும் இளைஞர்களின் உயர்வினை உறுதிசெய்ய, வேலை வாய்ப்புப் பயிற்சிகள் மற்றும் வாழ்வாதாரப் பணிகள் போன்ற திட்டப்பணிகளை,  “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற குறிக்கோளுடன் செயல்படுத்திவருகிறது. குறிப்பாக மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ஜவஹர்லால் நேரு தேசிய நகர சீரமைப்புத் திட்டம், ராஜீவ் வீட்டு வசதித் திட்டம், தொலை நோக்குத் திட்டம் 2023−ன் கீழ்  அனைவருக்கும் வீட்டு வசதி வழங்க வகைசெய்யும்  அனைவருக்கும், வீடு வழங்கும் திட்டம், சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு வசதி மற்றும் மறு குடியமர்வுத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள்மூலம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி வழங்கப்பட்டுவருகிறது.

தற்போது சென்னை மணலி புதுநகர், வியாசர்பாடி, காஞ்சிபுரம் மாவட்டம் ஒக்கியம் துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், மறைமலை நகர், திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு  திட்டப் பகுதிகளில், பல்வேறு திட்டங்களின் கீழ் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு,  வீடுகள்  ஒதுக்கீடுசெய்யப்பட்டுவருகின்றன. இந்தத் திட்டங்களில்,  பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த, வீடுகளின்றி அரசு புறம்போக்கு நிலங்கள், ஆற்றங்கரையோரங்களில்  ஆக்கிரமிப்புச்செய்து குடிசைகள்  அமைத்து வசிப்பவர்கள், திட்டப்பணிகளுக்காகத்  தேர்வுசெய்யப்படும்  இடங்களில் ஆக்கிரமிப்புசெய்து வசிப்பவர்கள், பெரு வெள்ளம் மற்றும் இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்படுபவர்கள், பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த பிரிவினர் போன்றவர்களுக்கு,  மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, பொதுப் பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைமூலம் பரிந்துரைக்கப்படுகின்ற குடும்பங்களுக்கு, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு வழங்குகின்ற வகையில், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின்மூலம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இந்தத் திட்டப் பகுதிகளில், குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றுத் தருவதாக இடைத்தரகர்கள், பொதுமக்களிடமிருந்து பணம் வாங்கி ஏமாற்றி வருதாகப் பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. எனவே, தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தில் வீடுகள் பெற்றுத் தருவதாகப் பணம் கேட்டு  ஏமாற்றும் இடைத்தரகர்களைப் பொதுமக்கள்  நம்பி ஏமாற வேண்டாம். எனவே, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில்  வீடுகள் பெற்றுத்தருவதாக இடைத்தரகர்கள் யாரேனும் அணுகினால்,  பொதுமக்கள் அருகாமையிலுள்ள குடிசைப்பகுதி மாற்று வாரிய அலுவலங்களில் நேரில் சென்று உண்மை நிலையை விசாரித்துத் தெரிந்துக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

%d bloggers like this: