ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-தனுசு

தனுசு (மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)

நன்மை தீமைககளைப் புரிந்துகொள்பவர்களே!

உங்கள் ராசிக்கு 11-ல் சந்திரன் இருக்கும்போது சந்திரன் பிறப்பதால், கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை வலுப்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வேலை கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய சிக்கல்களுக்குப் புதிய அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். நீண்ட நாள்களாக எதிர்பார்த்திருந்த வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

18.12.17 வரை சனி பகவான் விரயத்தில் இருப்பதால், வீண் சந்தேகங்களைத் தவிர்க்கவும். செலவுகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். வழக்குகளில் வழக்கறிஞரை மாற்றவேண்டி வரும். 19.12.17 முதல் சனி உங்கள் ராசிக்குள்ளேயே அமர்வதால், பெரிய நோய்கள் இருப்பது போல் நினைத்து கவலைப்படுவீர்கள். பயணங்களால் அசதியும் மனச்சோர்வும் உண்டாகும்.
 
1.9.17 வரை குரு பகவான் 10-ல் தொடர்வதால், வேலைச்சுமையின் காரணமாக பதற்றம் ஏற்படும். உங்கள்மீது சிலர் வீண்பழி சுமத்தப் பார்ப்பார்கள். மற்றவர்களுக்கு வாக்குறுதி எதுவும் தர வேண்டாம். பிள்ளைகளிடம் உங்கள் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். 2.9.17 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால், திடீர் அதிர்ஷ்டம், யோகம் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் இடம் உண்டு. அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன், கௌரவமும் உயரும். இதுவரை உங்களைத் தாழ்வாக நினைத்தவர் களும் இனி உங்களைப் பாராட்டுவார்கள். வீட்டை மாற்றுவது, விரிவுபடுத்திக் கட்டுவது போன்ற முயற்சிகள் நல்லபடியாக நிறைவேறும். கௌரவப் பதவிகள் தேடி வரும்.

14.2.18 முதல் 13.4.18 வரை வக்கிரகதியிலும் அதிசாரத்திலும் குரு 12-வது வீட்டில் அமர்வதால், சிக்கனம் அவசியம். பழைய கடன்களை நினைத்துக் கலங்குவீர்கள்.

26.7.17 வரை கேது 3-ல் இருப்பதால், சவாலான விஷயங்களை யும் எளிதாக முடிப்பீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். ராசிக்கு 9-ல் ராகு தொடர்வதால், தந்தையுடன் மன வருத்தம் உண்டாகும். தந்தைக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படக் கூடும். பிதுர்வழிச் சொத்துகளைப் பெறுவதில் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். 27.7.17 முதல் ராகு 8-லும் கேது 2-லும் தொடர்வதால், பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. அரசாங்க விஷயங்கள் தாமதமாகும்.

12.7.17 முதல் 28.8.17 வரை செவ்வாய் 8-ல் அமர்வதால், கணவன் – மனைவிக்குள் மனக்கசப்பு ஏற்படக்கூடும். இருவரும் அனுசரித்துச் செல்லவும். சகோதர வகையிலும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். சொத்துப் பிரச்னை தலைதூக்கும். பூர்விகச் சொத்துகள் விஷயத்தில் செலவுகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். வழக்குகளில் எச்சரிக்கை தேவை. 28.6.17 முதல் 26.7.17 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், பேச்சால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம்.

வியாபாரத்தில் சித்திரை, வைகாசி, ஆவணி மாதங்களில் பற்று வரவு அதிகரிக்கும். புதிய நபர்களுக்குக் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். பெரிய வாய்ப்புகளும் தேடி வரும். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்பு கூடும். பங்குதாரர்களை மாற்றவேண்டி வரும். வியாபார விஷயம் எதுவானாலும் சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ளுவது நல்லது. துரித உணவு, கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு இனங் களால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் வேலையின் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வைகாசி, ஆனி மாதங்களில் சம்பள உயர்வு கிடைக்கும். மார்கழி, பங்குனி மாதங்களில் புதுப் பொறுப்புகள் வரும்.
மாணவ – மாணவிகளுக்கு  ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பர். கலைத் துறையினருக்கு விருதுகள், அரசாங்க கெளரவம் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களைத் தலைநிமிர வைப்பதாக அமையும்.

பரிகாரம்

திருநெல்வேலிக்கு அருகிலுள்ளது ஆறுமுகமங்கலம். இவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஆயிரத்தெண் விநாயகரை, சதுர்த்தி திதி நாளில் சென்று வழிபடுங்கள். நினைத்தது நிறைவேறும்.

%d bloggers like this: