ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-கும்பம்

கும்பம் (அவிட்டம் 3,4-ம் பாதம் சதயம், பூரட்டாதி  1,2,3-ம் பாதம்)

விவாதம் செய்வதில் வல்லவர்களே!

உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் இருக்கும் போது இந்த புத்தாண்டு பிறப்பதால், மற்றவர்கள் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள். செலவுகளுக்கு ஏற்ற வருமானம் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் சுக்கிரனும், 3-ம் வீட்டில் சூரியனும் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

1.9.17 வரை குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் இருப்பதால், வீண் கவலையும் அலைச்சலும் வந்து செல்லும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தைத் தவிர்க்கவும். 2.9.17 முதல்  9-ம் வீட்டில் குரு அமர்வதால்,  இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். ஆனால், 14.2.18 முதல் 13.4.18 வரை உள்ள காலக்கட்டத்தில் குரு வக்கிரகதியிலும், அதிசாரத்திலும் 10-வது வீட்டில் செல்வதால், தாய்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். மறதியால் விலை உயர்ந்த பொருள்களை இழக்க நேரிடும்.

26.7.17 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும், ராசிக்குள்ளேயே கேதுவும் தொடர்வதால், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வாழ்க்கைத் துணையின் உடல்நலன் பாதிக்கப்படக்கூடும். 27.7.17 முதல் ராகு 6-ல் அமர்வதால், அரைகுறையாக நின்று போன வீடு கட்டும்பணி முழுமை அடையும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். 27.7.17 முதல் 12-ல் கேது நிற்பதால், அலைச்சல், தூக்கமின்மை வந்து செல்லும்.

21.8.17 முதல் 15.9.17 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால்,  வாகனம் பழுதாகும். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னையை தவிர்க்கப் பாருங்கள். 15.10.17 முதல் 1.12.17 வரை உள்ள காலக்கட்டத்தில் செவ்வாய் 8-ல் மறைவதால், கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும். சொத்துக்கு உரிய ஆவணங்கள் தொலைந்துபோகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சகோதர வகையில் ஒத்துழைப்பு குறையும்.

உங்களின் ராசிநாதனாகிய சனி பகவான் உங்கள் ராசிக்கு 18.12.17 வரை 10-வது வீட்டில் தொடர்வதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். செல்வாக்குக் கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 19.12.17 முதல் வருடம் முடியும் வரை சனி லாப வீட்டில் அமர்வதால், செயலில் வேகம் கூடும். வருமானம் உயரும். பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

வியாபாரத்தில் அதிகம் உழைக்க வேண்டி வரும். வேலையாட்களின் குறைநிறைகளை அன்பாக சுட்டிக் காட்டி திருத்துங்கள். வைகாசி, ஐப்பசி, ஆடி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவார்கள். எலெக்ட்ரானிக்ஸ் சாதனங் கள், கெமிக்கல், என்டர்பிரைசஸ் வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். கார்த்திகை, மார்கழி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
   
உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆடி, ஆவணி மாதங்களில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். அலுவலக ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. கார்த்திகை, மாசி மாதங்களில் உங்கள் நிலை உயரும். 

மாணவ-மாணவியர்களுக்கு அதிக உழைப்பு தேவைப்படும் காலம் இது. விரும்பிய பாடப்பிரிவில் சேர்வதற்குச் சிரமங்கள் ஏற்படலாம்.

கலைத் துறையினர், விமர்சனங் களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உங்களது படைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். திரைக்கு வர இயலாமல் முடங்கிக்கிடந்த உங் களுடைய திரைப்படங்கள் விரைவில் வெளியாகி வெற்றி பெறும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, ஆடி மாதம் வரை உங்களுக்கு பல்வேறு சோதனைகளைத் தந்து அலைக் கழித்தாலும், ஆவணி மாதம் முதல் எதிர்பாராத யோகங்களை அள்ளித் தந்து உங்களை உயரவைப்பதாக அமையும்.

பரிகாரம்

பட்டுக்கோட்டை, பேராவூரணிக்கு அருகிலுள்ளது பாலதள்ளி எனும் ஊர். இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீவிஷ்ணு துர்கைக்கு, செவ்வாய்க் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள்; சொத்தும் சுகமும் உண்டாகும்.

%d bloggers like this: