ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-சிம்மம்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்,)

பேச்சால் மற்றவர்களைக் கவர்பவர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் சந்திரன் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், முடியாத காரியத்தையும் முடித்துக்காட்டுவீர்கள். மனதில் தைரியம் பிறக்கும். செவ்வாய் 10-ல் இருக்கும்போது வருடம் பிறப்பதால், சிலருக்குப் புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிதாக  சொத்து வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பெரிய பதவிகள் தேடி வரும்.

18.12.17 வரை சனி பகவான் அர்த்தாஷ்டமச் சனியாகத் தொடர்வதால், தாயின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். தாய்வழி உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகும். வீண் பழிகள் ஏற்படக்கூடும். 19.12.17 முதல் சனி 5-ல் அமர்வதால், பிள்ளைகளின் வருங்காலம் கவலை தரக்கூடும். மகளின் திருமணத்துக் காக வெளியில் கடன் வாங்க நேரிடும். பாகப்பிரிவினை விஷயத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

12.7.17 முதல் 28.8.17 வரை செவ்வாய் 12-ல் மறைவதால், பணத் தட்டுப்பாடு, சகோதர சகோதரி களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். 14.1.18 முதல் 7.2.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். ஈகோ பிரச்னையால் கணவன் – மனைவிக்குள் கருத்து மோதல்கள் ஏற்படும் என்பதால், பொறுமை அவசியம். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியம்  பாதிக்கப்படக்கூடும்.

குரு 1.9.17 வரை 2-ல் தொடர்வதால், குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் காணப்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை திருப்பித் தருவீர்கள். ஆனால், 2.9.17 முதல் குருபகவான் 3-ல் அமர இருப்பதால், காரியங்களில் தடை தாமதம் ஏற்படக்கூடும். எந்த ஒரு வேலையையும் போராடித்தான் முடிக்க வேண்டி இருக்கும். இளைய சகோதரர் உதவி யாக இருப்பார். எனினும், பணத் தட்டுப் பாடு அதிகரிக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். தாய்வழியில் கிடைக்கவேண்டிய சொத்துகளைப் போராடித்தான் பெற வேண்டி இருக்கும். மற்றவர்களின் ஆலோசனைகளை அப்படியே பின்பற்ற வேண்டாம்.

26.7.17 வரை 1-ல் ராகுவும் 7-ல் கேதுவும் இருப்பதால், முன்கோபம், மன சஞ்சலம் ஏற்படக்கூடும்.வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். 27.7.17 முதல் 12-ல் ராகு அமர்வதால் வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து செல்லும். மன அமைதி இல்லாமல் தவிப்பீர்கள். தன்னம்பிக்கை குறையக்கூடும். இளைய சகோதரர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள். ஆனால், 27.7.17 முதல் கேது 6-ல் அமர்வதால், வி.ஐ.பிக்களால் நன்மை உண்டாகும். உங்களை ஏமாற்றியவர் களைப் புரிந்துகொள்வீர்கள். வெளி மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும்.

வியாபாரத்தில் குறைவான லாபம் வைத்து அதிக வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். புரட்டாசி மாதத்தில் இருந்து வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும். மார்கழி, தை மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலா கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நபர் புது பங்குதாரராக இணைய வாய்ப்பு இருக்கிறது. கொடுக்கல் – வாங்கல் சுமுகமாக இருக்கும். உணவு, ஷேர், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்தியோகத்தில், புரட்டாசி மாதம் புது வாய்ப்புகள் வரும். மேலதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவர். சில கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும். சக பணியாளர்களது ஒத்துழைப்புடன் தேங்கிக் கிடக்கும் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பங்குனி மாதத்தில் பதவி உயர்வு உண்டு. சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

மாணவ – மாணவிகள், நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவார் கள். ஆசிரியர்களது பாராட்டுகளைப் பெறுவார்கள். பெற்றோர் மூலம் தேவைகள் நிறைவேறும். இலக்கியப் போட்டிகளில் முதலிடம் பெறுவார்கள்.
கலைத் துறையினருக்குப் பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவார்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, அனுபவ அறிவாலும், இங்கிதமான பேச்சாலும், மாறுபட்ட அணுகுமுறையாலும் உங்களை வெற்றி பெற வைப்பதாக அமையும்.

பரிகாரம்

வேலூர் மாவட்டம் தக்கோலம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகிரிராஜ கன்னிகாம்பாள் சமேத ஸ்ரீஜலநாதீஸ் வரரை வில்வார்ச்சனை செய்து வணங்கிட நினைத்தது நிறைவேறும்.

ஒரு மறுமொழி

  1. அரசுப்பணி கிடைக்குமா?

%d bloggers like this: