நோய்கள் ஜாக்கிரதை!

சமீபத்தில் திருமண வரவேற்பு ஒன்றுக்குச் சென்றிருந்தேன். இசைக்கச்சேரி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. புதிதாகக் கட்டப்படும் மண்டபம் எனில், கச்சேரியை மனதில் வைத்து பக்கவாட்டில் அதற்கென இடம்விட்டுக் கட்டுகிறார்கள். பழைய மண்டபம் எனில், இசைக் கலைஞர்களுக்கு முதுகு காட்டி அமர வேண்டியதுதான். கல்யாணம் சற்றே தூரத்து உறவினர் என்பதால், முன்வரிசைகளை விடுத்து கடைசியில் சென்று அமர்ந்தேன். சினிமா ஆசையில் தொலைக்காட்சி குரல் தேர்வு போட்டியில் கலந்துகொள்ளும் பெரும்பாலான குழந்தைகளை  கல்யாணக் கச்சேரிகளில் பார்க்க முடிகிறது. இவர்கள்தாம், நம் வீட்டு வயதானவர்களின் செல்லம். அவர்களே இந்தக் கச்சேரிகளை இப்போது ரசிக்கவும் செய்கிறார்கள்.

அப்படி ஐம்பது வயது மதிக்கத்தக்க அம்மணி ஒருவர் அருகில் சென்று அமர்ந்துகொண்டேன். தனியே இருக்கும் வயதானவர்களிடம் புன்னகைத்தாலே போதும், அவர்களாகவே பேச ஆரம்பிப்பார்கள். பேசுவது அவர்களுக்கும், கேட்பது எனக்கும் பிடிக்குமாதலால், பெரும் பாலும் நேரம் போவதே தெரியாது. அவர்கள் அனுபவத்தில் கண்டறிந்ததை போகிறபோக்கில் சொல்லிவிடுவார்கள். அதை நாமாக கற்றுக்கொள்ள ஆண்டுகள் பலவாகும். எனினும், பெரும்பாலான வயதானவர்கள் தங்கள் உடல் உபாதை குறித்த பேச்சுக்குள் போய்விட்டால், அதிலிருந்து அவர்களை மீட்டு கொண்டு வருவது சுலபமல்ல.

நோய் பற்றி பேசுவதால் அவர்களுக்கு ஒருவித ஆறுதல் கிடைப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள் என்றாலும், உண்மையில் தங்கள் உடல் உபாதை பற்றியே நினைப்பிலிருப்பது அவர்களை மேலும் மேலும் அயற்சியும் சுயகழிவிரக்கமும் நிறைந்தவர்களாக மாற்று வதையே காண்கிறேன். அதைவிட பெரிய துயர், அவ்வாறு பேசிக்கொண்டே இருப்பதால் வீட்டிலுள்ளவர்களே அவர்களுடனான சம்பாஷணைகளை குறைத்துக்கொள்கிறார்கள்.
அருகிலிருந்தவர் தன் முட்டி தேய்மானம் பற்றி சொல்லத் தொடங்கினார். ஒரு கஜினி முகமதுவாகவே மாறி, மாநகரத்தின் எல்லா ஆர்த்தோ டாக்டர்களிடமும் படை யெடுத்திருக்கிறார். அவர்கள் பரிசாகக் கொடுத்த மருத்து புட்டிகளை அடுக்கினாலே வீட்டுக்குச் சுற்றுச்சுவர் கட்டிவிட முடியும்.
அவரிடம், மருத்துவத்தில் மருந்து பாதி, நம்பிக்கை பாதி… அடிக்கடி மருத்துவரை அல்லது மருந்தை மாற்றுவதால் ஏற்படும் நம்பிக்கையின்மை பற்றி, நடிகர் சிவகுமார் ராமாயணம் சொல்வது போல மூச்சுவிடாமல் உரையாற்றினேன். கடைசியாக விடை பெறுகையில், `சீதைக்கு ராமன் சித்தப்பாவா’ என்பது போல, என்னால் ஏதேனும் வைத்தியம் அல்லது வைத்தியரைப் பரிந்துரைக்க முடியுமா என்றார்.
என் உறவினர் ஒருவர் இருக்கிறார். எந்த ஊருக்கு சென்றாலும், அந்த ஊரின் சிறப்புக் கோயில் போல, சிறப்பு மருத்துவர் யார் என்று தெரிந்துகொண்டு ஒருமுறை சென்று பார்த்துவிடுவார். எதற்கென்றே தெரியாமல், ஒருமுறை அவருக்காக நானும் சரும மருத்துவருக்காகக் காத்திருந்திருக்கிறேன். சிரிக்கும்போது தன் முகத்தில் முன்பை விட அதிகச் சுருக்கம் விழுவதாக குறைப் பட்டுக்கொண்டார். மருத்துவர் சிரித்து, `தேங்காய் எண்ணெய் தடவுங்கள், போதும்’ என்று அனுப்பிவிட்டார். வெளியே வந்த உறவினர், `இந்த மருத்துவர் சரியில்லை’ என்று அங்கலாய்த்துக்கொண்டே இருந்தார். `ஏன்?’ என்றேன். ‘டாக்டர், சிரிக்கும்போது பார்த்தேன்.  அவருக்கே தேங்காய் எண்ணெய் வேலைசெய்யலையே?’
இன்னும் சிலரைக் கவனித்திருக்கிறேன். `சர்க்கரை இருக்கிறதா?’ என்று முதலில் பார்த்துக் கொள்வார்கள். சாப்பிட்டுவிட்டு மீண்டும் சர்க்கரை அளவைப் பார்ப்பார்கள். இதே கதைதான் ரத்தக்கொதிப்புக்கும். வெளிநாடுகளில் இருக்கும் மகன் அல்லது மகள் எனில், பெற்றோருக்கு இதுபோன்ற பரிசோதனைக் கருவிகளை  வாங்கிக் கொடுத்துவிட்டு கடமையைச் செய்ததாக நிம்மதியாகிறார்கள். இங்கிருக்கும் வயதானவர்கள், எப்போதாவது மருத்துவரிடம் செல்வதுபோய், வீட்டிலேயே நோய் கண்டுபிடிக்கும் கருவிகளைப் பயன்படுத்தி தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள்.
இதில் பயங்கரவாதிகள் சிலருண்டு. சும்மா போகிறவர்களை அழைத்து, `நீ ரொம்ப நோஞ்சானா இருக்க… எதுக்கும்  `அனிமிக்’கான்னு பார்த்துடு. அதுவும் இல்லன்னா, தைராய்டா இருக்கும். இது இரண்டும் இல்லன்னா, முழு உடல் பரிசோதனை செய்துடு’ என்று அறிவுரை தருவார்கள். இந்த முழு உடல் பரி சோதனைக்கு ஐந்தாயிரம் ரூபாய் செலவழித்து விட்டு, நோய் ஒன்றும் சொல்லவில்லையே என்று வருத்தப்படுபவர்களும் உண்டு.
எத்தனைக்கு எத்தனை மருத்துவம் முன்னேறியிருக்கிறதோ, அத்தனைக்கு அத்தனை நோய்களும் பெருகியிருக்கின்றன.சென்ற தலைமுறையில் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளப்படாத சின்ன சின்ன உபாதைகளுக்கும் இப்போது பேர் சூட்டப் பட்டாயிற்று. பேர் சூட்டியப்பின் குழந்தையை தொட்டிலில் போட்டு கொஞ்சுவதுபோல, நோய் என்று கண்டுபிடிக்கப்பட்டப் பின், பல்வேறு மருந்து மாத்திரைகளால் கொண்டாடப்படுகிறது.
முடிவற்ற இந்த உபாதைகளிடமிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள ஒரே வழிதான் இருக்கிறது. அது, நாம் ஆரோக்கியமாக இருப்பதை நம்புவது, போகிறபோக்கில் யாருக்கும் மருத்துவ அறிவுரை தராமல் இருப்பது மற்றும் அப்படி நமக்கு யார் தந்தாலும் காதுகளைப் பூட்டிக்கொள்வது!

%d bloggers like this: