ஆட்சியைக் கவிழ்க்க அடுக்கடுக்கான அஸ்திரங்கள்!

வியர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்த கழுகார், ‘‘அண்ணா சாலை போக்குவரத்து நெரிசலைத் தாண்டி ஆபீஸுக்கு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. டி.டி.வி.தினகரனின் நாற்காலிக் கனவில் விழுந்த ஓட்டை மாதிரி, மெட்ரோ ரயில் பணிகளால் அண்ணா சாலையில் பெரும் பள்ளம் விழுந்திருக்கிறது’’ என்றார்.

ஜில்லென மோர் கொடுத்து உபசரித்தோம். ‘‘நீர் சொன்னமாதிரியே ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தள்ளிப்போய்விட்டதே?” என்று கேட்டுவிட்டு, 5.4.17 தேதியிட்ட ஜூ.வி இதழைக் காட்டினோம்.

‘ஃபெரா பொறியில் தினகரன்! தள்ளிப்போகுமா ஆர்.கே. நகர் தேர்தல்?’ என்ற தலைப்பிலான கவர் ஸ்டோரியைப் புரட்டினார். பிறகு, ‘‘இப்போது ஆர்.கே. நகர் ஓவர். சனிக் கிழமையிலிருந்து பாருங்கள்… ஃபெரா வழக்குச் சூடுபிடிக்கும்” என்று சொல்லிவிட்டு நிமிர்ந்தவர், “தினகரன் வெற்றி பெற்றுவிடுவார். அதுவும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று மத்திய உளவுத்துறை அனுப்பிய ரிப்போர்ட்டுடன் தேர்தல் ரத்து அறிவிப்பு முடிச்சுப் போடப்படுகிறது’’ என்றார்.
‘‘கொஞ்சம் விளக்கமாகச் சொல்லும்.’’
‘‘ஆரம்பத்தில் ஆர்.கே. நகர் தொகுதியில் தினகரனுக்கு எதிரான மனநிலை கடுமையாக இருந்தது. ஜூனியர் விகடன் சர்வேகூட ஓ.பி.எஸ் அணியின் மதுசூதனனுக்குத்தான் சாதகமாக வந்தது. ஆனால், பணம் பாய்ந்ததும், நிலைமை தினகரனுக்குச் சாதகமாக மாறியது. குறிப்பாக ஏப்ரல் 4, 5, 6-ம் தேதிகளில் வாரி இறைக்கப்பட்ட தொகையால், தினகரன் பக்கம் அலை அடிக்க ஆரம்பித்தது. இதையெல்லாம் தெளிவாக உளவுத்துறை ரிப்போர்ட்டாக அனுப்பியது. அதன்பிறகுதான், ‘இந்தத் தேர்தலை நடத்துவது சரியானதாக இருக்காது. தினகரன் வெற்றிபெற்றால் தமிழகம் முழுவதும், இனி அவர்தான் அ.தி.மு.க என்ற பிம்பம் உருவாகிவிடும். அதன்பிறகு சமாளிப்பது கடினம்’ என்று டெல்லி தலைமைக்கு இங்கிருந்து சொல்லப்பட்டது. ரெய்டுக்கு அனுமதி அதன்பிறகே கிடைத்தது. அதே நேரம் தேர்தல் கமிஷனும் முனைப்பு காட்டிக்கொண்டிருந்தது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக ஆவணங்கள் சிக்கின.’’
‘‘அப்படியா?”

‘‘தனக்கு ரொம்ப நெருக்கமான மருத்துவ அடைமொழி கொண்ட ஒரு பிரமுகர் மூலம்தான் விஜயபாஸ்கர் டீலிங்குகள் செய்வாராம். விஜயபாஸ்கரே தன் கணக்கு வழக்குகளில் குழப்பம் வந்தால், அவரிடம்தான் கேட்பாராம். அந்த அளவுக்கு எல்லா கணக்குகளிலும் இவர் கில்லி. ரெய்டு அன்று அதிகாலை நான்கே முக்கால் மணிக்கு இவர் வீட்டுக் கதவை ஒரு டீம் தட்டியது. கதவைத் திறக்க இவர் முரண்டு பிடிக்க, ‘நாங்கள் வருமானவரித் துறை அதிகாரிகள். திறக்காவிட்டால் கதவை உடைப்போம்’ என்றதும் கதவு திறந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் சவடாலாகப் பேசிய இவர், இடியாக கன்னத்தில் ஒரு அறை விழுந்ததும் பொறி கலங்கிப்போனாராம். ‘கடந்த நான்கு மாதங்களாக நீங்கள் யார் யாருக்குப் பேசினீர்கள், என்ன பேசினீர்கள், அமைச்சர் சொல்லி என்னவெல்லாம் உங்களிடம் வந்தது, என்னவெல்லாம் கொடுத்தீர்கள் என எல்லாவற்றுக்கும் எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. உங்கள் செல்போன் உரையாடல்களை, தொடர்ந்து கண்காணிந்து வந்தோம். அதை இப்போது போட்டுக்காட்டுவோம். அதுபற்றிய விளக்கங்களைச் சொல்ல வேண்டும்’ எனக் கட்டளைப் பிறப்பித்தார்களாம். அதன்பின் மளமளவென தகவல்கள் கொட்டியுள்ளன.’’
‘‘என்ன சொன்னாராம்?”
‘‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்காக முதல்வர் உள்பட சீனியர் அமைச்சர்கள் சிலருக்கு ரூ.10 கோடி வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மற்றவர்களுக்குக் கொஞ்சம் குறைவான அளவு சொல்லப்பட்டு, மொத்தம் ரூ.120 கோடி வரை திரட்டப்பட்டது என்ற கணக்கைச் சொன்னாராம். இதில் ஒரு பகுதிதான், ஓட்டுக்குத் தருவதற்கு என ஒதுக்கப்பட்ட ரூ.89 கோடி. இந்தப் பணம் எல்லாம் எங்கிருந்து, எப்படி வந்தன. எங்கெங்கு போயின என்ற எல்லா தகவல்களையும் கொட்டிவிட்டாராம் அவர். அது மட்டுமல்ல… குட்கா போன்ற போதைப்பொருள்களைத் தயாரிப்பவர்களோடு நடக்கும் டீலிங், மருந்து கம்பெனிகளோடு நடக்கும் பேரங்கள், பணி நியமனங்கள் மற்றும் டிரான்ஸ்ஃபர்கள் போன்றவற்றில் இருக்கும் நெளிவு சுளிவுகள் என அவர் வெளிப்படுத்திய தகவல்கள் எல்லாமே வருமானவரித் துறை அதிகாரிகளை அதிர வைத்தன. இந்த விசாரணையின்போது ஒரு காமெடியும் நடந்தது.’’
‘‘என்ன அது?”
‘‘இவர் ரெய்டில் சிக்கியிருப்பது தெரியாமல், வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்கு பணம் கேட்பதற்காகப் போன் செய்தார், செட்டிநாட்டுப் பகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர். ஸ்பீக்கரை ஆன் செய்து பேசச்சொன்ன அதிகாரிகள், அந்த முன்னாள் எம்.எல்.ஏ-வை வீட்டுக்கு வரச் சொல்லுமாறு சைகை காட்டினார்களாம். அவரும் அப்படியே செய்ய, தானாக வந்து மாட்டினார் அந்த எக்ஸ். விஜயபாஸ்கரின் நண்பர் வீட்டிலேயே அவரைத் தனி அறையில் வைத்து விசாரிக்க,     ‘ஆர்.கே. நகர் தொகுதியில் பூத்வாரியாக எப்படி பணப்பட்டுவாடாவுக்கு பிளான் போட்டோம். தொப்பிகளை மொத்தமாக கொள்முதல் செய்தோம்’ என விலாவாரியாக வாக்குமூலம் கொடுத்தாராம் அந்த முன்னாள் எம்.எல்.ஏ.’’

‘‘சுவாரஸ்யமாக இருக்கிறதே!”
‘‘இங்கு சிக்கிய ஆவணங்களையும் தகவல்களையும் வைத்துதான் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் என எல்லோரிடமும் விசாரணையில் கிடுக்கிப்பிடி போட்டார்களாம். சரத்குமார், எட்டு மணி நேர விசாரணையில் விழிபிதுங்கினார். விஜயபாஸ்கரின் புளூ மெட்டல் நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் ரெய்டு நடக்கவும் இதுவே காரணம்.’’
‘‘சரி, பி.ஜே.பி-யின் அடுத்த ஆபரேஷன் என்ன?’’
‘‘தற்போதைய நிலையில், அ.தி.மு.க-வை   பி.ஜே.பி ஏறத்தாழ கலைத்துவிட்டது என்றே சொல்லலாம். சசிகலா சிறையில் இருக்கிறார். தினகரன் போட்டியிட்ட தேர்தலும் ரத்தாகி விட்டது. ஃபெரா வழக்கை வைத்து தினகரனை சாய்த்துவிட்டால், அதன்பிறகு ஆட்சியைக் கவிழ்ப்பது சுலபம் என நினைக்கிறார்கள் டெல்லிவாலாக்கள். இதற்கும் அவர்கள் வைத்திருப்பது, ‘ரெய்டு’ என்ற ஆயுதம்தான். அமைச்சரவையில் ஐந்து சீனியர்களைத் தனி லிஸ்ட்டில் வைத்திருக்கிறார்கள். ரெய்டு அஸ்திரத்தைப் பயன்படுத்தி அவர்களின் சொத்துகளையும் முடக்கினால், தானாக வழிக்கு வந்து விடுவார்கள் எனக் கணக்கு போடுகிறார்கள். ராம மோகன ராவ், விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் நடந்த சோதனைகளுக்குப் பிறகு, அமைச்சர்கள் ரொம்பவே உஷாராகிவிட்டார்கள். ஆனாலும்கூட, ரெய்டுக்கான ஆதாரங்கள் அனைத்தையும் வருமானவரித் துறையினர் திரட்டி வைத்துள்ளார்கள்.’’
‘‘அப்படியானால் கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கும் போல?’’
‘‘தமிழகத்தில் இதுபோன்ற அசாதாரண சூழலைச் சமாளிக்க நிரந்தர கவர்னர் வேண்டும் என நினைக்கிறார்கள். முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் உள்ளிட்ட வேறு இரண்டு கறாரான நபர்களின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன. காங்கிரஸ்காரரான பரத்வாஜ், ஏற்கெனவே கர்நாடக கவர்னராக இருந்தவர். காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருக்கும் வரத்வாஜ்,  பி.ஜே.பி பக்கம் சாய்ந்திருக்கிறார். அவரோ, அல்லது வேறு யாரோ, புது கவர்னராக வந்தபிறகு இந்த ஆட்டம் தொடங்கும்.’’
‘‘அ.தி.மு.க-வின் ஆட்டத்தை முடித்தாலும், இங்கு தி.மு.க வலுவாக இருக்கிறதே?’’
‘‘பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைமை அதை யோசிக்காமல் இருக்குமா? அதற்கான வேலைகளும் எப்போதோ தொடங்கிவிட்டன. தி.மு.க-வில் அதிருப்தியில் இருக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலரை, கடந்த மாதம் நாக்பூரில் வைத்து பி.ஜே.பி-யின் முக்கியத் தலைவர்கள் சந்தித்துள்ளனர். தி.மு.க-வை உடைப்பதற்கு அவர்களிடம் பேரங்கள் பேசப்பட்டுவிட்டன. இந்தச் சந்திப்பில் தி.மு.க-வில் இருந்து ஏழு பேர் கலந்துகொண்டுள்ளனர். பெரும்பாலும் அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள். கொங்கு மண்டலத்தில் அழகிரியின் ஆதரவாளராக உள்ள ஒருவர்தான் இந்தச் சந்திப்புக்குத் தலைமை ஏற்றவர். இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட மற்றொரு வி.ஐ.பி., டெல்லி பி.ஜே.பி பிரமுகர்களோடு நெருக்கமான நட்பில் இருப்பவர். பி.ஜே.பி தமிழகத்தில் நேரடியாகக் காலடி எடுத்துவைக்க முடியாது. அதனால், எல்லா குறுக்குவழிகளிலும் முயற்சி செய்கிறது. பி.ஜே.பி-யின் முயற்சி வெற்றி பெறுமா… தோல்வி அடையுமா… என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்’’ என்ற கழுகார், சட்டென பறந்தார்.

%d bloggers like this: