தூக்கத்தைத் தியாகம் செய்யாதீர்கள்! – பெண்கள் கவனத்துக்கு

மூன்றில் இரண்டு பெண்களுக்குத் தூக்கமின்மைப் பிரச்னைகள் இருக்கின்றன என்கிறது நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷனின் ஆய்வு ஒன்று.  பெண்களுக்கு ஆண்களைவிட அதிகத் தூக்கம் தேவை. ஆனால், உண்மையில் அவசியமான அளவு தூக்கம்கூட அவர்களுக்குச் சாத்தியப்படுவதில்லை என்றும், தொடர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிற பெண்களை டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

அதிகாலையில் எழுந்து சமைத்து, பிள்ளைகளை பள்ளிக்குத் தயார் செய்து, கணவனை அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டு, கிச்சனை சுத்தம் செய்து, ஒரு குட்டித் தூக்க ம்போடலாமா என நினைக்கிற நொடியிலேயே அழைப்புமணி ஒலிக்கும். அப்படியே அடுத்தடுத்த வேலைகள் தொடரும்.அப்புறமென்ன… தூக்கத்தை மறந்துவிட வேண்டியதுதான். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் தூக்கம் என்பது கனவுதான். 
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், பெண்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை குறித்தும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பேசுகிறார் தூக்கவியல் மருத்துவர் என்.ராமகிருஷ்ணன்.

தூக்கம் தவிர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
இப்போது மட்டுமல்ல… பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெண்கள் தூங்கும் நேரம் என்பது மிகவும் குறைவாகவே  உள்ளது. கணவன் வரும் வரை சாப்பிடாமலும், தூங்காமலும் இருப்பது போன்ற வழக்கங்களால், பெண்கள்  தாங்களாகவே தூங்கும் நேரத்தைக் குறைத்துவிட்டார்கள்.
70 சதவிகித  பெண்கள் தங்களுக்குத் தூக்கமின்மை பிரச்னை இருப்பதையே அறியாமல் இருப்பதுதான் வேதனை.
இன்றைய காலகட்டத்திலோ, பெண்கள்  நினைத்தால்கூட தூங்குவதற்குப் போதிய நேரம் கிடைப்பதில்லை. கணவன், மனைவி  இருவருமே வேலைக்குச் செல்லும்  சூழலில், காலை முதல் இரவு வரை பெண்களுக்கு வேலை ஓய்வதில்லை. என்னதான் கணவர் வீட்டுவேலைகளைப் பகிர்ந்துகொண்டாலும், பெண்களுக்குத்தான்  கூடுதல் வேலைகள் இருக்கும் என்பது மறுக்கமுடியாத நிஜம். வேலைகளை முடித்துவிட்டுத் தாமதமாகச் சாப்பிடுவதும், உடனே  படுத்துவிடுவதும்கூட உடலுக்கு நாம் இழைக்கும் தீங்குதான்.
இரவு நேரப் பணி என்பதும் நம் உடலுக்கு ஒவ்வாத  விஷயமே. பகலில் உழைப்பதும், இரவில் உறங்குவதுமே இயற்கையின் நியதி.  இந்தச் சக்கரத்தை மாற்றி, பகலில் உறங்கி, இரவில் வேலை செய்வதை நம் மனமும் உடலும் ஏற்றுக்கொள்ளாது. மேலும், நம்மைத்  தூங்க வைக்கும் ’மெலட்டோனின்’  என்கிற ஹார்மோன் இரவில் அதிகம் சுரக்கும். பகலில் நாம் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கான காரணம்,  இது குறைவாக சுரப்பதுதான்!
இந்தச் செயல்பாட்டைத் தலைகீழாக  மாற்றும்போது, உடல்நலமும் பாதிப்படையும். குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும்போது, அவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுவார்கள். சரியான தூக்கம் கிடைக்காத பெண்கள் காரணமில்லாமல் எரிச்சல் அடைவார்கள். அதன் தொடர்ச்சியாக கோபம், மனச்சோர்வு, நாள் முழுவதும் மந்தமாக உணர்வது, சிறிய  பிரச்னையைக்கூட பெரியதாக நினைத்து கவலைப்படுவது என மனரீதியான  சிக்கலுக்கு ஆளாவார்கள். 
தூக்கமின்மை காரணமாக ஆரம்ப காலகட்டத்தில் கண் எரிச்சல், தலைவலி, மைக்ரேன் எனப்படும் தீராத தலைவலி  போன்ற பிரச்னைகளால் அவதிப்படுவார்கள். இவை தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் மாதவிடாய் குழப்பங்கள் உண்டாகும். குழந்தையின்மை போன்ற பெரிய பிரச்னைகளுக்கு ஆரம்பமாக அமைந்துவிடும். கண்டுகொள்ளாமல் விட்டாலோ, சில ஆண்டுகளிலேயே ரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு வரை கொண்டு சென்று விடும்.
ஆண்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகுகிறார்கள். பெண்களோ, ‘இதெல்லாம் ஒரு விஷயமா’ என்று சர்வசாதாரணமாகக் கடந்துவிடுகிறார்கள். ‘நான் ஆறு மாசமா தலைவலியால அவதிப்படுறேன். அதுக்கு டேப்லெட் எடுத்துகிறேன் டாக்டர்’ என்பவர்களை ஆராய்ந்தால், தூக்கம்தான் பெரும் பிரச்னையாக இருக்கும். தூக்கமின்மை என்பது, நம் உடல்நலனில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்த வழி.
அம்மாக்கள் கவனத்துக்கு…
இருபது வயது கடந்த பெண்களுக்கு, குறைந்தபட்சமாக  ஆறு மணி நேரத் தூக்கமும், அதிகபட்சமாக எட்டு மணி நேரமும், இரவுத் தூக்கமும் அவசியம். ஆனால், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு  இது சாத்தியப்படாது. இதுபோன்ற நேரங்களில், நாம் மேற்கத்திய பழக்கத்தை பின் தொடரலாம்.
வெளிநாடுகளில் குழந்தை பிறந்த பிறகு, குழந்தைகளை நம்மூர் போல அருகிலேயே படுக்க வைக்க மாட்டார்கள். தொட்டிலில் போட்டு உறங்க வைத்துவிட்டு தாயும் நன்கு உறங்குவார். தாய்ப்பாலை ‘Express Breast Milk’’ என்கிற முறையில் சேமித்து வைப்பது, குழந்தைக்குத் தேவை எனும்போது புகட்டுவது, அதுவரை நன்றாக உறங்குவதுதான் அவர்களுடைய வாழ்க்கை முறை.
எக்ஸ்பிரஸ் பிரெஸ்ட் மில்க் முறையில் தாய்ப்பாலைச் சேகரித்து வைத்து, தேவைப்படும் போது கொடுப்பதை நம்மூர் பெண்கள் விரும்புவதில்லை. கால மாற்றத்துக்கு ஏற்ப நம் நலனையும் கருத்தில் கொண்டு சிறுசிறு மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதில் தவறில்லை.
பொதுவாக, குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஒருவித மனச்சோர்வு இருக்கும். இதனை  ‘போஸ்ட் ப்ரெக்னன்சி ட்ரோமா’ (Post pregnancy trauma) என்போம். நம்மூரில், பிறந்த குழந்தையை தாய் அருகிலேயே தூங்க  வைக்கிறோம். அப்போது, குழந்தை மீது நம்முடைய கைபட்டுவிடுமோ, குழந்தை எழுந்துவிடுமோ என்கிற  யோசனையிலேயே தாயால் சரியாகத் தூங்க முடியாது.
பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் காலை, மதியம் வேளைகளில் நன்றாகத் தூங்குவார்கள். பொதுவாக மதிய நேரத் தூக்கத்தை நான் யாருக்கும் பரிந்துரைப்பதில்லை. ஆனால், இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மதியவேளையில் தாய்மார்களும் சிறிது நேரம் ஒய்வெடுத்துக் கொள்ளலாம்’’.


ஆழ்ந்த தூக்கம் பெறஎளிய வழிமுறைகள்
* பெரும்பாலும், வீட்டில் எவ்வளவு வேலைகள்  இருந்தாலும், இரவு 8 மணி அல்லது 9 மணிக்குள் இரவு  உணவைச்  சாப்பிட்டுவிடுங்கள். இரவு உணவு நேரத்துக்கும், தூங்கச் செல்வதற்கும் குறைந்தபட்சம் ஒருமணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும்.
* சாப்பிட்ட பிறகு குடும்பத்தினருடன் பேசுவது, புத்தகம் படிப்பது, பாடல் கேட்பது என உங்களை நீங்களே ரிலாக்ஸ் ஆக்கிக் கொள்ளுங்கள். 
* காலையில் நடைப்பயிற்சி செய்வதும் சீரான தூக்கத்துக்கு உதவும். காலையில் நேரம் இல்லை எனில், அலுவலகம்  விட்டு வரும்போதோ, வீட்டுக்கு வந்தபிறகோ, சிறிது தூரம் காலாற நடக்கலாம்.
* சிலர், ‘எனக்கு  இரவில்தான் நேரம் கிடைக்கிறது’ என உடற்பயிற்சி செய்வார்கள். இது முற்றிலும் தவறு. தூக்கமின்மைக்கு இதுவும் ஒரு காரணம். குறைந்தபட்சம், தூங்குவதற்கு நான்கு மணி நேரம் முன்பு  உடற்பயிற்சி செய்வதே  சரியான முறை.

%d bloggers like this: