நினைக்கறது ஒண்ணு…நடக்கறது ஒண்ணு.

ஆரோக்கியம் குறித்து எத்தனையோ தவறான எண்ணங்களும், நம்பிக்கைகளும் நமக்குள் இருக்கின்றன. அந்த வகையில் இதுவரை நாம் நம்பிக்கொண்டிருக்கும் 4 தவறான ‘உண்மை’யை உடைக்கிறார்கள் நிபுணர்கள்.

1. உடற்பயிற்சி உடல் எடையைக் குறைக்கும்
.

எடையைக் குறைக்கும் முயற்சியில் உடற்பயிற்சி முக்கியமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அது ஒன்றுதான் முதலும் மூலாதாரமுமான செயல் என்று பலரும் நினைக்கிறார்கள்.இதற்காக புது வருட தீர்மானமாக ஜிம்மில் சேர்பவர்களும் நிறைய பேர் உண்டு. உண்மை அதுவல்ல. உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்தைத் தந்தாலும், எடை குறைப்பு விஷயத்தில் உடற்பயிற்சியோடு, உணவுக்கட்டுப்பாடும் சரிவிகிதத்தில் சேர்ந்தால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
2. ஆன்டிபயாடிக் மருந்துகள் ஜலதோஷத்தைப் போக்கும்.
ஆன்டிபயாடிக் மருந்துகள் பாக்டீரியா தொற்றையே அழிக்கக்கூடியவை. ஆனால், காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் வைரஸ் தொற்றால் வருகிறது. இந்த மூலகாரணத்தை அறியாமல் ஜலதோஷம், காய்ச்சல் வந்துவிட்டால் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பழக்கம் நமக்கு இருக்கிறது. இந்த தவறான மருத்துவ முறையால் பாக்டீரியா நோய் எதிர்ப்பு உடலில் குறைகிறது. உடலில் உள்ள நன்மையளிக்கும் பாக்டீரியாவையும் ஆன்டிபயாடிக் மருந்துகள் அழித்துவிடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
3. மன உறுதி இருந்தாலே இலக்குகளை அடைந்துவிடலாம்.
இது உளவியல் சம்பந்தமான தவறான நம்பிக்கை. ‘மிகப்பெரிய வெற்றியை அடைய மன உறுதி வேண்டும் என்பது பலரின் யூகம். ஆனால், அது உண்மையில்லை’ என்கின்றனர் ஜெர்மனியின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக உளவியலாளர்கள்.சுமார் 205 பேரிடம் ஒருவார காலத்துக்கு நடத்தப்பட்ட ஆய்வில் பிடித்தமான உணவை அவர்கள் முன் உள்ள தட்டில் வைத்து, அந்த உணவின் மீதான அவர்களுக்கு ஏற்பட்ட உந்துதல், அப்போது அவர்களுக்கு இருந்த மன உறுதி பற்றிய கேள்விகளைக் கேட்டார்கள் உளவியலாளர்கள்.மன உறுதி மட்டுமே அங்கே வேலை செய்யவில்லை. உடல் பருமனைப்பற்றிய முழுமையான விழிப்புணர்வும், பருமன் பற்றிய பயமும் மட்டுமே அந்த உணவின் மீதான ஈர்ப்பை திசைதிருப்பு வதாக இருந்தது என்பதைக் கண்டறிந்தார்கள் ஆய்வாளர்கள்.

4. ‘Power pose’-ல் உள்ளவர்களுக்கு உண்மையிலேயே ஆற்றல் உள்ளது.

‘தங்களுக்குள்ள உடலமைப்பு, வலிமையை வைத்து தன்னை ஒரு சக்திமானாக, சூப்பர்மேனாக கற்பனை செய்து கொள்பவர்கள் சாகசங்களில் ஈடுபடுவதுண்டு. இதையே ‘Power posing’ என்று சொல்கிறோம்.ஆனால், உடல்வலிமை மட்டுமே இவர்களின் இந்த சாகச செயல்களுக்குக் காரணமில்லை. அவர்களின் மூளையில் டெஸ்டோஸ்டிரோன் என்கிற ஹார்மோன் சுரப்பு அதிகமாவதால்தான் அதுபோன்ற ஆபத்தான சாகச வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என 2010-ம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகம் தன்னுடைய ஆய்வறிக்கையில் வெளியிட்டது.

%d bloggers like this: