புராஸ்டேட் பிரச்னை செய்கிறதா?

கிராமத்தில் வசித்து வந்த அந்தப் பெரியவருக்கு இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் போனது. ஒருமுறை சிறுநீர் கழித்த பின்பும் உடனே சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. சிறுநீர் சரியாகப் பிரியவில்லை என நினைத்து, ‘நீர் மாத்திரை’களை வாங்கிச் சாப்பிட்டார். அப்போது புதிய பிரச்னை கைகோர்த்தது. சிறுநீர் பெருகி, சிறுநீர்ப்பை பெருத்து

அடிவயிற்றில் வலி எடுத்தது.உள்ளூர் மருத்துவமனைக்குச் சென்றார். ‘சிறுநீர்ப் பாதையில் அடைப்பு இருக்கிறது. வயிற்றை ஸ்கேன் எடுத்துப் பாருங்கள். ஆபரேஷன் அவசியப்படலாம்’ என்றதும், பயந்துபோய் என்னிடம் வந்தார். பரிசோதித்ததில், அவருக்கு புராஸ்டேட் சுரப்பி வீங்கியிருந்தது. அந்த வீக்கமானது இரண்டாவது கிரேடில் இருந்தது. ‘மாத்திரையில் சரி செய்துவிடலாம்; சர்ஜரி தேவையில்லை’ என்றதும், போன உயிர் திரும்பியது போல் சந்தோஷப்பட்டார்.
புராஸ்டேட் சுரப்பி… கிரேடு டூ… அப்படியென்றால்?
அடிவயிற்றில், சிறுநீர்ப்பைக்குக் கீழே, சிறுநீர்க் குழாய் தொடங்கும் இடத்தில், பேரிக்காய் வடிவத்தில் ஒரு சுரப்பி இருக்கிறது. அதற்குப் பெயர் ‘புராஸ்டேட்’. சிவனின் கழுத்தைச் சுற்றி பாம்பு இருப்பதுபோல், சிறுநீர்ப்பையின் கழுத்தைச் சுற்றி புராஸ்டேட் இருக்கிறது. பார்ப்பதற்கு ஒரு பெருநெல்லி அளவில்தான் இருக்கும். இதன் நடுவே சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை வெளியேற்றும் குழாய் செல்கிறது.
இது ஆண்களுக்கு மட்டுமே இருக்கிறது. இதுவே இதற்கு உயர்தனிச்சிறப்பு! முழுக்க முழுக்க இது ஒரு பாலியல் சுரப்பி; குழந்தைப் பருவத்தில் ‘அக்கடா’வெனத் தூங்கிக் கொண்டிருக்கிறது; வாலிபத்தில் ‘மெரினா புரட்சி’ போல் விழித்துக் கொள்கிறது. இதில் ஜிங்க் மற்றும் புரத என்சைம் கலந்த திரவம் சுரக்கிறது. வெண்ணெய் போன்ற இத்திரவம் விந்து செல்லுக்கு ஊட்டம் தருகிறது.
பாலுறவின்போது உடல் உணர்ச்சிகளை ஊக்குவிப்பதும், பெண்ணுறுப்புக்கு விந்துவைச் சுமந்து செல்வதும் இதுதான். வாலிபத்தில் இது இயல்பாகவே இருக்கிறது; வயதாக ஆக வீக்கமடைகிறது. பரம்பரை காரணமாக சிலருக்கு இருபது வயதிலேயே இது வீங்குவதுண்டு; வழக்கத்தில் ஆண்களில் பாதிப்பேருக்கு ஐம்பது வயதுக்கு மேல்தான் பெரிதாகிறது; மீதிப்பேருக்கு எண்பது வயதுக்குள்.
ஆனால், சிலருக்கு மட்டுமே இது பிரச்னை ஆகிறது. அதற்குப் பெயர்….. வெயிட், வெயிட்… வாசிக்கும்போது வாய் சுளுக்கிக்கொண்டால் நான் பொறுப்பில்லை. ‘பினைன் புராஸ்டேடிக் ஹைப்பர்பிளேசியா’ (Benign Prostatic Hyperplasia – BPH). முடி நரைப்பதைப்போல, சருமம் சுருங்குவதைப் போல இதுவும் வயோதிகத்தின் ஓர் அடையாளம். மூப்பில் இதற்கு வேலை இல்லை.
என்றாலும், உதவி இல்லாவிட்டாலும் உபத்திரவம் இல்லாமல் இருக்க வேண்டுமல்லவா? வீங்கிக் கொண்டு போகும் புராஸ்டேட் சிலருக்கு வாழ்நாள் முழுவதும் உபத்திரவம் தருகிற உறுப்பாக மாறுவதுதான் பிரச்னையே! வயதாகும்போது உடலில் சில ஹார்மோன்கள் அதிகமாகச் சுரப்பதும் சில குறைவாகச் சுரப்பதும் சகஜம்தான். அப்போது இந்த ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுத்தும் சிக்கல்தான் புராஸ்டேட் வீக்கம்.
மூளையில் பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் எல்.ஹெச். ஹார்மோன் விரைகளில் வினைபுரிந்து, டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோனைச் சுரக்கச் செய்கிறது. புராஸ்டேட் இதை டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோனாக மாற்றிவிடுகிறது. வயதாகும்போது இதன் அளவு அதிகமாகிறது. இதுதான் புராஸ்டேட்டுக்கு வினையாகிறது. இது தருகிற ஊக்கத்தால் புராஸ்டேட் பெரிதாகிறது.
அடுத்த காரணம், ஆண்களுக்கு வயதாகும்போது டெஸ்டோஸ்டீரோன் சுரப்பு குறைந்துவிடும்; வாலிபத்தில் சிற்றருவி போல் சீராகக் கொட்டும் ஈஸ்ட்ரோஜன் வயோதிகத்தில் ஐந்தருவியாகி ஆர்ப்பரிக்கும். இதனாலும் புராஸ்டேட் வீங்கிவிடும்.

இதன் அறிகுறிகள் என்ன?

வீக்கத்தின் அறிகுறிகள், அடைப்புக்கான அறிகுறிகள் என இரண்டு ரகம் உண்டு. சிறுநீர் சிறுகச் சிறுக அடிக்கடி போவது, திடீரென்று வருவதுபோல் அவசரப்படுத்துவது, நீர்க்கடுப்பு, எரிச்சல் ஆகியவை புராஸ்டேட் வீக்கத்தின் அறிகுறிகள். சிறுநீர் மெல்லியதாகப் போவது, சிறுநீர் கழிக்கும்போது தடைபடுவது, சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும்போது தயக்கம் ஏற்படுவது, இரவில் பத்து தடவைக்கும் மேலாகச் சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழித்த பின்னரும் இன்னும் சிறுநீர் உள்ளது போல் உணர்வது, மறுபடியும் சிறுநீர் கழிக்க வேண்டும் எனத் தோன்றுவது, சிறுநீர் கழித்த கடைசியில் சொட்டுச் சொட்டாகப் போவது போன்றவை புராஸ்டேட் அடைப்புக்கான அறிகுறிகள்.
சிரிக்கும்போதும், முக்கும்போதும்கூட சிலருக்கு சிறுநீர் கசிந்துவிடும். பரீட்சை ஹாலில் காப்பி அடிக்கும் மாணவன் ஆசிரியர் பார்த்து விடுவாரோ எனப் பயந்துகொண்டே இருப்பானே.. அதுமாதிரி இவர்கள் எப்போதும் ஓர் எச்சரிக்கை உணர்வுடன்தான் இருப்பார்கள். உதாரணமாக, வெளியில் எங்காவது செல்வதென்றால், முதலில் ரெஸ்ட் ரூம் எங்கே இருக்கிறது என்று விசாரித்துக்கொள்வார்கள். அடுத்தது, கிரேடு.
கட்டடம் கட்டுவதற்கென்று ஒரு கிரேடு, கான்கிரீட் போடுவதற்கென்று ஒரு கிரேடு என சிமெண்ட் தயாரிப்பில் பல விதம் இருப்பதைப்போல, புராஸ்டேட் வீக்கத்திலும் ஒன்று முதல் நான்கு வரை கிரேடு கொடுத்திருக்கிறார்கள். இதைத் தெரிந்துகொள்வதற்குப் பெரிய அளவில் பரிசோதனைகள் எதுவும் தேவையில்லை. உங்கள் குடும்ப மருத்துவரே ‘விரல் பரிசோதனை’ செய்து சொல்லிவிடுவார். பொதுவாக, புராஸ்டேட் வீங்குகிறது என்றால் அது பின்புறமாக மலக்குடலை நோக்கித்தான் செல்லும்.
மருத்துவர் மலக்குடலுக்குள் விரலை நுழைத்துப் பார்க்கும்போது, புடைப்பு எதுவும் தெரியவில்லை என்றால் அது நார்மல். இரண்டு செ.மீ. வரை புடைப்பு தெரிந்தால், கிரேடு ஒன்று. புடைப்பானது இரண்டிலிருந்து மூன்று செ.மீ.க் குள் இருந்தால், கிரேடு இரண்டு; மூன்றிலிருந்து நான்கு செ.மீ.க் குள் இருந்தால், கிரேடு மூன்று; நான்கு செ.மீ.க்கு அதிகமென்றால், கிரேடு நான்கு.பாதிக்கப்பட்டவருக்கு புராஸ்டேட் வீக்கம் எந்த கிரேடில் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால், அவருக்குள்ள பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்து, அவருக்குத் தேவை மாத்திரையா, ஆபரேஷனா எனத் தீர்மானிப்பது எளிது. முதல் கிரேடும் இரண்டாம் கிரேடும்தான் அதிக ஆண்களுக்கு வருகிறது. அந்த நிலைமையில் சிகிச்சையைத் தொடங்கிவிட்டால், பாதிப்பு அடுத்த கிரேடுக்குத் தாவாது.
பெரிய பாதிப்புகள் என்றால்?
அடிக்கடி சிறுநீர்த் தொற்று ஏற்படும். சிறுநீர்ப்பையில் சீழ் கட்டும்; கல் / துணைப்பை (Diverticulum) உருவாகும். சிறுநீர் ரத்தமாகப் போகும். சிறுநீர் செல்லும் குழாய் அடைத்துக்கொள்ளும். ஒரு கட்டத்தில் சிறுநீரகம் வீங்கிவிடும். இதனால், தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ சிறுநீரகம் செயலிழக்கும். இது உயிருக்கு ஆபத்தைக் கொடுக்கும்.
வியாதியை வளர்ப்பானேன்? புராஸ்டேட் வீக்கத்துக்கான ஒருசில அறிகுறிகள் எட்டிப் பார்த்ததும், வயிற்றை அல்ட்ரா சவுண்ட் எடுத்துப் பார்த்தால், புராஸ்டேட்டின் நிலைமை புரியும்; சிறுநீர் எவ்வளவு தேங்குகிறது என்ற விவரம் தெரியும். ரத்த டெஸ்ட்டுகளும் ‘யூரோஃபுளோமெட்ரி’ எனும் ஸ்பெஷல் டெஸ்ட்டும் இந்த பாதிப்பின் தீவிரத்தை உறுதி செய்யும். அப்போதே உஷாராகி சிகிச்சையைத் தொடங்கி விடலாம்.
மூன்றாவது கிரேடு வரைக்கும் இப்போது மாத்திரைகள் மூலமே குணப்படுத்திவிடலாம். முடியாதபோது, ‘டர்ப்’ (TURP) சர்ஜரி செய்து அல்லது லேசர் சிகிச்சையில் இதற்குத் தீர்வு காணலாம். இவற்றுக்கெல்லாம் சரிப்படாதவர்களுக்கு சிறுநீர்க் குழாயில் ’ஸ்டென்ட்’ வைத்துவிடலாம். நாற்பதே வயதான என் உறவினர் ஒருவருக்குப் பல வருடங்களாக மூக்கடைப்புப் பிரச்னை இருந்தது.
அதற்கு ஆபரேஷன் செய்யச் சொன்னேன். ஆபரேஷனுக்குப் பயந்து அவராகவே மூக்கில் விடும் சொட்டு மருந்துகளை வாங்கிப் போட்டுச் சமாளித்து வந்தார். அது தவறு எனப் பல தடவை சொல்லியும் கேட்கவில்லை. அவருக்கு சமீபத்தில் ‘பிபிஹெச்’ பிரச்னை ஆரம்பித்தது. ‘மாத்திரை கொடுத்தாலும் உங்களுக்குப் பிரச்சினை சரியாகாது’ என்றேன். ‘ஏன் டாக்டர், எனக்கு வரக்கூடாத வியாதி ஏதாவது வந்துவிட்டதா?’ என்று பயத்துடன் கேட்டார்.‘பத்து வருஷமா மூக்கில் சொட்டு மருந்து ஊத்தியிருக்கீங்க… அதனால, அறுபது வயதில் வர வேண்டிய ‘பிபிஹெச்’ பிரச்னை இப்போதே வந்துவிட்டது. மூக்கில் சொட்டு மருந்து விடுவதை நீங்கள் நிறுத்தினால்தான் உங்கள் புராஸ்டேட் பிரச்னைக்கு சிகிச்சை தரமுடியும்’ என்றேன். சரி, புராஸ்டேட் வீக்கம் சாதாரணமானதா, புற்றுநோயா? எப்படித் தெரிந்துகொள்வது? அதற்கு ஒரு டெஸ்ட் இருக்கிறது. அது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

புராஸ்டேட் பிரச்னை உள்ளவர்கள் கவனத்துக்கு!

* இடுப்புக்குழி தசைப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
* தினமும் 2 லிட்டர் வரை மட்டும் தண்ணீர் குடியுங்கள்.
* பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி மிகுந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்.
* ஒமேகா 3 கொழுப்பு அமிலமுள்ள மீன் உணவு நல்லது.
* கொழுப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்து உடல் எடையைப் பேணுங்கள்.
* மது வேண்டாம்.
* காபி அருந்துவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
* சிறுநீர் கழிக்கும் நேரத்தை முறைப்படுத்துங்கள்.
* மாலை நேரத்துக்குப் பின்னர் தண்ணீர் மற்றும் திரவ உணவுகளின் பயன்பாட்டை சீர்படுத்துங்கள்.
* ஒருமுறை சிறுநீர் கழித்த பின்னர் சிறிய இடைவெளியில் மறுபடியும் சிறுநீர் கழிக்கவும்.
* சுய மருத்துவம் செய்யாதீர்கள்.

%d bloggers like this: