உரலுக்கு ஒரு பக்கம் இடி.. எடப்பாடியாருக்கோ 2 பக்கம் அடி! 3 அமைச்சர்களை நீக்க மத்திய அரசு நெருக்கடி

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின்போது பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ள 3 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்வருக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்துள்ளது.

ஆர்கே நகர் இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடைபெற்றபோது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும், சரத்குமாரின் வீட்டில் சோதனையின்போது கடம்பூர் ராஜுவும் பிரச்சினை செய்தனர்.

பாதுகாப்பை மீறி உள்ளே சென்று அதிகாரிகளை சோதனை செய்ய விடாமலும், பெண் அதிகாரியை மிரட்டியதோடு ஆபாசமாக பேசியதாகவும்பு கடம்பூர் ராஜு மீது புகார் எழுந்தது.

இதேபோல் தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அமைச்சர் காமராஜ் ஆகியோரும் பிரச்சினை செய்ததாக காவல் துறை ஆணையர் கரண் சின்ஹாவிடம் வருமான வரித்துறையினர் புகார் அளித்தனர். அவரது உத்தரவின் பேரில் சென்னை, அபிராமபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் மேற்கண்ட 3 அமைச்சர்களுடன் விஜயபாஸ்கரையும் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் அரசை காப்பாற்றிக் கொள்ளும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூத்த அமைச்சர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வந்தார்.

‘நான் மட்டும்தானா குற்றவாளி…உங்கள் கதையைச் சொல்லவா?’என கூறி, எடப்பாடியை மிரட்டும் வகையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிவருவதாகவும், அவரை பதவி விலக வைக்க, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாகப் போராடி வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மேற்கண்ட 3 அமைச்சர்கள், தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோரை பதவியிலிருந்து நீக்குமாறு எடப்பாடிக்கு மத்திய அரசு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. இது தொடர்பாக எடப்பாடியிடம் ஆலோசனை நடத்த தமிழக ஆளுநர் பொறுப்பு வித்யாசாகர் ராவ் தமிழகம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் விஜயபாஸ்கரின் மிரட்டலாலும், மறுபுறம் மத்திய அரசின் நெருக்கடியாலும் எடப்பாடி செய்வதறியாது திகைத்து வருகிறார்.

Source: tamil.oneindia.com

%d bloggers like this: