சரத்குமாருக்காக நடந்த சடுகுடு ஆட்டம்!

ருமானவரித் துறை ரெய்டு சூறாவளி, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலையே போட்டுத்தாக்கிவிட்டது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி போன்றவர்களுடன் நடிகர் சரத்குமாரும் கடும் சேதத்துக்கு ஆளாகி உள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் ரெய்டு நடந்தபோது, அவரிடம் அதிகமாகக் கேட்கப்பட்ட கேள்வி, ‘நடிகர் சரத்குமாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்?’ என்பதுதான். அதைத்தான், தன் பேட்டியில் குமுறித் தீர்த்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

அந்த அளவுக்கு சரத்குமாரை வருமானவரித் துறை அதிகாரிகள் குறிவைக்கக் காரணம் என்ன? ‘‘ சரத்குமார்  தனது வழக்கமான ஆட்டத்தை, மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யோடும் ஆடிப் பார்த்தார். அதன்விளைவுதான், ரெய்டு சூறாவளியில் வசமாக சிக்கிக்கொண்டார்” என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.
பல ஆண்டுகளாக சரத்குமாருக்குப் பட வாய்ப்புகள் இல்லை. நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பும் போய்விட்டது. கட்சியில் இருந்த வசதிபடைத்தவர்களும் தொழிலதிபர்களும் அவரைவிட்டு விலகிவிட்டனர். இந்த நிலையில், அடுத்த வாய்ப்பை  எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார் சரத்குமார். 

மும்முனைப் பேச்சுவார்த்தை!
முதலில் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்தார் சரத்குமார். இருவருக்கும் இடையே, பன்னீர்செல்வம் வீட்டில் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பிறகு, “பன்னீர்செல்வத்துக்குச் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது” என்று சொல்லிவிட்டுப் போனார். அந்த நேரத்தில், டெல்லி உத்தரவின்பேரில், பி.ஜே.பி சார்பிலும் சரத்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. “சமத்துவ மக்கள் கட்சியை பி.ஜே.பி-யோடு இணைத்துவிடுங்கள்” என்பதுதான் முக்கியமான பேரம். அதற்கு ஒப்புக்கொண்ட சரத்குமார், அதற்கான பேரத்தை தொடங்கினார். அதில், கொஞ்சம் இழுபறி இருந்தது. இந்த நேரத்தில், வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் தரப்பு களமிறங்கி, சரத்குமாரைக் தினகரனுக்கு ஆதரவாகக் கொண்டுவரும் வேலையைச் செய்தது. அங்கும் சரத்குமார் பேரம் பேசினார். எப்படியும் ஜெயித்தாக வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்த தினகரன், அந்த பேரத்துக்கு ஒப்புக்கொண்டார். சில கொடுக்கல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது சம்பந்தமாக ஒரு நிறுவனத்தின் முக்கியப் புள்ளிக்கு, சரத்குமார் மெசேஜ் அனுப்பினார். வில்லங்கம் அங்குதான் ஆரம்பித்தது. சரத்குமார் அனுப்பிய அந்த மெசேஜை அந்த நிர்வாகி பத்திரமாக வைத்திருந்தார்’’ என்கிறார்கள்.
வி.வி.மினரல்ஸ் vs தமிழக அரசு
அ.தி.மு.க-வின் ‘பிசினஸ் பார்ட்னர்’ வி.வி.மினரல்ஸ் என்று சொல்லும் அளவுக்கு ஆரம்பத்தில் இரண்டு தரப்புக்கும் உறவு இருந்தது. பிறகு, ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும், வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனோடு உரசல் ஏற்பட்டது. வைகுண்டராஜனை ஜெயலலிதா ஒதுக்கிவைத்தார். அவரின் குவாரிகளில் ரெய்டு நடத்தப்பட்டு, அவருடைய தொழில் முடக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்து, சசிகலா சிறைக்குப்போன பிறகு, மீண்டும் இரண்டு தரப்புக்கும் உறவு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். வைகுண்டராஜனை அழைத்து வந்து தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கவைத்தார். ஆனால், அதன்பிறகுதான் வைகுண்டராஜனின் குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் கொதித்துப்போன வைகுண்டராஜன், சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
அப்போதுதான், இந்த மெசேஜ் சிலரின் கைகளில் மாட்டியது. அதை அப்படியே வருமானவரித் துறை அதிகாரிகளிடம் கொண்டுபோய் கொடுத்தார்கள்.  ஏற்கெனவே, அமைச்சர் விஜயபாஸ்கரின் தொலைபேசி உரையாடல்கள், இ-மெயில் விவரங்கள், செல்போன் குறுஞ்செய்திகள் உள்ளிட்ட விவரங்கள் ஐ.டி துறையிடம் இருந்தன. இதை எல்லாம் வைத்து தினகரனை முடக்க டெல்லி நடத்திய ரெய்டில் சரத்குமார் சிக்கிக்கொண்டது அவருடைய விதி வசம்.

அள்ளப்பட்ட ஆவணங்கள்…
சரத்குமாரின் வீட்டில் ரெய்டு நடந்தபோது, அங்கு ரொக்கமாக எதுவும் சிக்கவில்லை. அதையடுத்து, அவரிடம் பண விவகாரம் குறித்து துருவித் துருவி விசாரணை நடத்தப் பட்டது. ராதிகாவுக்குச் சொந்தமான ராடன் நிறுவனத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது. அங்கும் பணம் சிக்கவில்லை. ஆனால், அதற்கு மாறாக, ராடன் நிறுவனம் நடத்திய வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரி அதிகாரிகள் சொல்கிறார்கள். ‘‘நான்கு கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்ததை சரத்குமாரும் ராதிகாவும் ஒத்துக்கொண்டுள்ளனர்” என்று செய்தி பரப்பி வருகிறார்கள்.
இந்த ரெய்டுகள் மூலம் பி.ஜே.பி அரசு மற்றவர்களுக்கு உணர்த்த விரும்புவது, “எங்களுக்கு ஆதரவாக வரவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், தினகரனுக்கு ஆதரவாக யாரும் போகக்கூடாது” என்பதுதான். மீறிப் போனால், இப்படிப்பட்ட சோதனைகளைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்பதே இதனால் சொல்லப்படும் செய்தி.
நொந்துபோன தினகரன்…
வருமானவரித் துறை அதிகாரிகளின் சோதனை,  ஆர்.கே. நகர் தேர்தல் தள்ளிப்பு, குறிவைக்கப்படும் அமைச்சர்கள் எனப் பல்முனைத் தாக்குதல்களால் நொந்துபோய் உள்ளார் தினகரன். ‘வைகுண்டராஜனை நம் பக்கம் இழுத்துவந்ததுதான், அத்தனைப் பிரச்னைகளுக்கும் ஆரம்பம்’ என்று புலம்பும் தினகரன், யாரையும் சந்திக்காமல் தவிர்த்துவருகிறார். தினகரனை நம்பிய வைகுண்டராஜனுக்கும் தீர்வு கிடைக்கவில்லை. வைகுண்டராஜனை நம்பிய சரத்குமாரால் ராதிகாவும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். இவர்களால், தன் அரசியல் எதிர்காலத்தை ஏறத்தாழ இழந்துவிட்டு நிற்கிறார் தினகரன்.

%d bloggers like this: