Advertisements

பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி!’ – தினகரனை ஓரம்கட்டிய ‘கொங்கு லாபி’

அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னத்தைக் காக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் ஒன்றிணைய முடிவெடுத்துள்ளனர். ‘சசிகலா குடும்பத்தைத் தவிர்த்த அ.தி.மு.கவைத்தான் தொண்டர்கள் விரும்புகின்றனர். நேற்று அமைச்சர்கள் நடத்திய கூட்டத்திலும், தினகரனை ஓரம்கட்டியே வைத்திருந்தனர். சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியை பன்னீர்செல்வத்துக்கு கொடுக்கும் முடிவில் முதல்வர் இருக்கிறார்’ என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, நேற்று தலைமைச் செயலகத்துக்கு இரண்டு முறை வருகை தந்தபோதே, அரசியல் மேகங்கள் மாறத் தொடங்கிவிட்டதை அ.தி.மு.க தொண்டர்கள் உணர்ந்து கொண்டனர். ‘தொகுதிப் பிரச்னை தொடர்பாகத்தான் முதல்வரை சந்தித்தேன்’ என நழுவியவர், என நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்குத் தொடக்கப் புள்ளி கொடுத்துவிட்டுச் சென்றார். இதையடுத்து, முதல்வர் பழனிசாமியும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் சண்முகம் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. இதன்பின்பு விமான நிலையத்தில் பேசிய தம்பிதுரை, ‘ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் வருந்திய நிலையிலும், மக்களை சந்தித்து இந்த ஆட்சியை மலர வைத்தார். அதைத் தக்கவைப்பது மிகவும் முக்கியம்’ என்றார். பன்னீர்செல்வமும், ‘யார் வந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்’ என்றார்.

இதன்பின்னர் நேற்று விடிய விடிய கொங்கு மண்டல அமைச்சர்கள் தீவிர ஆலோசனையில் இறங்கினர். “இரு அணிகளுக்குள்ளும் இந்த மாற்றம் தென்படுவதற்கு முக்கியக் காரணமே எடப்பாடி பழனிசாமிதான். மௌனமாக இருந்து கொண்டே இரு அணிகள் இணைப்பு குறித்து மூத்த அமைச்சர்களிடம் விவாதித்து வந்தார். ‘தேர்தல் ஆணையத்துக்குப் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இனியும் நாம் அமைதியாக இருந்தால் சின்னம் மட்டுமல்ல, கட்சியே காணாமல் போய்விடும்’ எனக் கவலை தெரிவித்தார். இதுகுறித்து, தினகரனிடம் வலியுறுத்தியபோது, ‘பன்னீர்செல்வம், பாண்டியராஜன் தவிர யார் வந்தாலும் வரவேற்போம்’ என்ற கருத்தில் உறுதியாக இருந்தார். இதனால் எரிச்சலான எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ‘தொடர்ச்சியான வழக்குகளால் கட்சிக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இனியும் நாம் பிடிவாதம் பிடிப்பது நல்லதல்ல’ என எடுத்துச் சொல்ல, கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கர் சிலைக்கு மாலை போட்ட பிறகு பேசிய தினகரன், ‘கட்சியின் நன்மைக்காக யார் வந்தாலும் வரவேற்போம்’ என்றார். ஆனாலும், சசிகலா-தினகரன் தலையீடு இல்லாத அ.தி.மு.கவைத்தான் பா.ஜ.க மேலிடம் விரும்புகிறது. அதை நோக்கியே கொங்கு மண்டல அமைச்சர்கள் பயணிக்கின்றனர்” என விவரித்த அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்,

“அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவதில் சில நிபந்தனைகளை தினகரன் விதித்தார். இதை மூத்த அமைச்சர்கள் பலரும் விரும்பவில்லை. ஒருகட்டத்தில், ‘முதலில் இணைப்பை வலியுறுத்துவோம். பிறகு தினகரனை ஒதுக்கி வைப்போம்’ என்பதுதான் கொங்கு லாபியின் முக்கிய நோக்கம். கடந்த 12-ம் தேதி பிரதமர் மோடியை தம்பிதுரை சந்தித்துப் பேசியபோது, ‘இனியும் அந்தக் குடும்பத்தோடு ஒட்டிக் கொண்டிருப்பதை விட்டுவிடுங்கள். அவர்கள் தொடர்புடைய யாரையும் நாங்கள் விட்டு வைக்க மாட்டோம். அவர்களோடு இணக்கம் காட்டுகிறவர்களுக்கும் சேர்ந்தே சிக்கல் வரும்’ எனக் கோடிட்டுக் காட்டினார். தினகரனுக்காக சமசரம் பேசப் போன தம்பிதுரைக்கு டெல்லியின் நோக்கம் தெளிவானதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்பு கொண்டு விரிவாகப் பேசியிருக்கிறார். இப்படியொரு முயற்சி நடப்பதை அறிந்து, கொங்கு மண்டல அமைச்சர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் தினகரன். இதுபற்றி பா.ஜ.க மேலிடத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர். இதையடுத்தே, இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் சிக்கினார் தினகரன்.

‘இணைப்பு முயற்சிக்கு இடையூறு வரலாம் என்பதை அறிந்து, தினகரனின் ஒவ்வொரு காய் நகர்த்தல்களையும் டெல்லியின் கவனத்துக்குக் கொண்டு சென்றது பன்னீர்செல்வம் தரப்பு. இதற்குப் பதில் கொடுத்த பா.ஜ.க நிர்வாகிகள், ‘டெல்லி போலீஸ் வர இருக்கிறது. தினகரனை கைது செய்யப்பட இருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கோடு சசிகலாவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது போல, இந்த வழக்கின் மூலம் தினகரனின் பதவி ஆசையும் முடிவுக்கு வந்துவிடும். கட்சிப் பொறுப்புக்கு பன்னீர்செல்வத்தையும் ஆட்சிப் பொறுப்பை எடப்பாடியும் கவனித்துக் கொள்ளட்டும். ஒன்றுபட்ட அ.தி.மு.கவை உருவாக்குவதன் மூலம் கட்சியின் எதிர்காலமும் காப்பாற்றப்படும்’ என டெல்லித் தலைமை சமசரம் பேசியது. இதனை பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் ஏற்றுக் கொண்டனர். நேற்று நடந்த அமைச்சர்கள் கூட்டத்திலும், தினகரனை ஓரம்கட்டியே வைத்திருந்தனர். அவருக்கு நெருக்கமான கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்பட சிலர் மட்டும் தனிக் கூட்டம் போட்டனர். தினகரனுக்கு நெருக்கமான விஜயபாஸ்கரும் கொங்கு மண்டல அமைச்சர்கள் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்றதுதான் ஆச்சரியம். தினகரனை ஒதுக்கும் வேலைகள் தீவிரமடையத் தொடங்கிவிட்டன” என்றார் விரிவாக.

” நிபந்தனையற்ற பேச்சு என்பது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. சசிகலா குடும்பம் அ.தி.மு.கவில் இருக்கக் கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கிடைக்கும் வரையில் ஓய மாட்டோம்” என இன்று மதியம் அளித்த பேட்டியில் கூறியிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். இதனால் தினகரன் தரப்பு ஆதரவு அமைச்சர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ‘இந்த ஒரு காரணத்தால் மீண்டும் பிளவு ஏற்பட்டுவிடுமோ?’ என்ற அச்சமும் அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது.

ஐ.என்.எஸ் போர்க் கப்பலை சென்னைக்கு அர்ப்பணித்துவிட்டுப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து நாட்டு மக்களையும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தையும் முப்படைகள்தான் காக்கின்றன என்பதில் பெருமை அடைகிறேன்’ என்றார். அதேநேரம், அ.தி.மு.கவைச் சூழ்ந்துள்ள போர் மேகங்களை விலக்கி வைக்கும் வித்தையையும் தினகரனுக்கு சுட்டிக் காட்டிவிட்டார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: