எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழுமா? எம்எல்ஏ-க்களின் கூட்டல், கழித்தல் கணக்கு!

அ.தி.மு.க. அம்மா அணியில் ஏற்பட்டுள்ள பிளவால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது, சசிகலா, டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க-விலிருந்து ஓரங்கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதால், அவர்களது விசுவாசிகளின் ஆதரவு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்குக் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரண்டு துருவங்களாக இருந்து செயல்பட்டுவருகின்றனர். சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனைக்குப் பிறகு, ஓரணியாக இணைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையில், இரட்டை இலைச் சின்னத்தை குறுக்குவழியில் மீட்டெடுக்க புரோக்கர் சுகேஷ் சந்திரசேகரிடம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன்பிறகு, அ.தி.மு.க. அம்மா (சசிகலா) அணியிலிருந்த அமைச்சர்களும், எம்எல்ஏ-க்களும் சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து ஒதுக்குவதாகத் தெரிவித்தனர். இது, சசிகலா குடும்பத்தினருக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல், சில அமைச்சர்களைக் கடுமையாக விமர்சித்தார். அடுத்து, டி.டி.வி.தினகரனைச் சந்தித்த அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் ஆலோசனை நடத்தினர். இதனால், சசிகலா அணியில் டி.டி.வி.தினகரன் என்ற அணி உருவாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், தான் கட்சியிலிருந்து நேற்றே ஒதுங்கி விட்டதாகத் தெரிவித்தார். இதன் பின்னணியில், அரசியல் சதுரங்கம் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம்
Advertisement

இதுகுறித்து நம்மிடம் பேசிய டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்எல்ஏ, “எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு 122 எம்எல்ஏ-க்கள் ஆதரவு அளித்தனர். தற்போது, ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைவதை கட்சியில் சிலர் விரும்பவில்லை. இதுதொடர்பாக அமைச்சர்களும் எம்எல்ஏ-க்களும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களில் சிலர், பயத்தின் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர். இந்தத் தகவல், டி.டி.வி.தினகரனுக்குத் தெரிந்ததும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களை அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் நீங்கள் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், நாங்களும் வேறு ஒரு முடிவை எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று டி.டி.வி.தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதையெல்லாம் அந்த அமைச்சர்கள் கண்டுகொள்ளவில்லை.
ஓ.பன்னீர்செல்வம், கட்சிக்கும் ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்தவர் என்று வாய்கூசாமல் சொன்னவர்கள் இப்போது, அந்த அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த முயல்வதில் உள்நோக்கம் உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளவர்கள், ‘சசிகலா குடும்பத்தினர் கட்சியில் இருக்கக்கூடாது’ என்று கோரிக்கை வைக்கின்றனர். அடுத்து, ஜெயலலிதா மரணத்தில் நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதை நாங்களும் வரவேற்கிறோம். அப்படியென்றால், சசிகலாவை  பொதுச் செயலாளராகவும் டி.டி.வி.தினகரனை துணை பொதுச் செயலாளராகவும் பதவிக்கு வந்தபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணையத் துடிப்பவர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறையினரின் சோதனையே தவறுசெய்த அமைச்சர்களுக்குப் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் ஆதரவிலிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்காக, இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. அடுத்து, வருமானவரித்துறை சோதனை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தம் என ஓ.பன்னீர்செல்வத்துக்கு உறுதுணையாக மத்திய அரசு செயல்பட்டுவருகிறது. எனவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் இணைந்தால், அவர்களுக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது. ஏனெனில் டி.டி.வி.தினகரனின் விசுவாசிகளாக 25-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களும் இருக்கின்றனர். அவர்கள் நிச்சயம் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் கைகோக்க மாட்டார்கள். அதையும் மீறி இரண்டு அணிகளும் இணைந்தால், அவர்களுக்குள் பதவிகளை பங்கிடுவதில் சிக்கல் ஏற்படும். ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருக்கும் முன்னாள் கல்வி அமைச்சர் மாஃபா க. பாண்டியராஜனுக்காக தற்போதைய கல்வி அமைச்சர் செங்கோட்டையன், அந்த பதவியிலிருந்து விலகுவாரா. அடுத்து, முதல்வர் பதவி, முக்கிய துறை அமைச்சர்கள் பதவி, கட்சிப்பதவி ஆகியவற்றைக் கைப்பற்றுவதில் நிச்சயம் பிரச்னை ஏற்படும். இதனால், அவர்களுக்குள் சண்டையிட்டு ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள். இதைத்தான் பா.ஜ.க-வும் விரும்புகிறது” என்றனர் ஆவேசத்துடன்.
டி.டி.வி. தினகரன்

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறுகையில், “பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பே எங்களது நோக்கத்தைச் சொல்லிவிட்டோம். அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டுதான் பேச்சுவார்த்தைக்கான முயற்சியில் அந்த அணியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, எங்களது நோக்கமான சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து விலக்க, அவர்கள் சம்மதித்துள்ளனர். இதுவே, எங்களின் தர்மயுத்தத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறோம். கட்சி, ஆட்சி எனப் பதவிகள் குறித்து பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்படும். எங்களைப் பொறுத்தவரைக்கும் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்தான் தமிழகத்தின் முதல்வராக இருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வராக இருக்கலாம். அதுபோல கட்சிப் பதவிகளிலும் சிலருக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவுசெய்துள்ளோம். மேலும், மத்திய அரசின் ஆதரவு எங்களுக்கு இருப்பதாகச் சொல்வதில் எந்தமுகாந்திரமும் இல்லை. இரட்டை இலைச் சின்னம் முடக்கம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துக்கு நாங்கள் காரணமல்ல. டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவுக்கு நாங்கள்தான் காரணம் என்று அவர்கள் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. விரைவில் இரண்டு அணிகளும் ஒருங்கிணைந்து, ஜெயலலிதா விரும்பிய நல்லாட்சி தமிழகத்தில் நடக்கும். ஆட்சி கவிழ வாய்ப்புக்கள் இல்லை” என்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. கட்சியினரும், பொதுமக்களும் சசிகலா குடும்பத்தினரை விரும்பவில்லை. இது, அந்தக் குடும்பத்தினருக்கும் தெரியும். இதனால், அவர்கள் தாமாகவே கட்சியிலிருந்து விலகிவிடுவார்கள். டி.டி.வி.தினகரன் பின்னால் செல்பவர்கள் விரல்விட்டு எண்ணும் நபர்களே. அவர்களால் நிச்சயம் ஆட்சி கவிழ வாய்ப்பில்லை. ஓ.பன்னீர்செல்வம் அணி, நாங்கள் என இரண்டு அணிகளும் இணைந்தாலே ஆட்சி அமைக்கும் மெஜாரிட்டி கிடைத்துவிடும். தி.மு.க.வைவிட டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் ஆட்சியைக் கவிழ்க்க அதிகம் முயற்சிக்கின்றனர். அவர்களது எண்ணம் நிச்சயம் வெற்றிபெறாது. ஏனெனில், பெருபான்மையான எம்எல்ஏ-க்கள் எங்களிடம்தான் இருக்கின்றனர்” என்றனர்.

%d bloggers like this: