பெரியகுளத்தில் விழுந்த குருவும் சிஷ்யனும்!

மக்கு முன்பாகவே ஆபீஸுக்கு வந்து காத்திருந்த கழுகார், தன் லேப்டாப்பில் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார். எழுத்தாளர் மாதவ ராஜ், தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்ததைக் காட்டினார். 

‘அந்த சதுரங்க ஆட்டத்தின் ஒரு பக்கம் ஒன்றிரண்டு காய்களே இருந்தன. ராஜாவே இல்லை. மறுபக்கம் ஒன்றிரண்டு காய்கள் மட்டும்தான் இல்லை. ராஜா, ராணி, குதிரைகள், யானைகள் என படை பட்டாளங்களோடு இருந்தன. முடிந்த விளையாட்டை வைத்து ஒரே ஆள் யோசித்துக் கொண்டு இருந்தான். இரண்டு பக்கமும் அவனே காய்களை நகர்த்தினான். சிரித்துக்கொண்டான். வெட்டினான். கைதட்டிக்கொண்டான். எல்லாக் காய்களும் கருப்பு நிறத்திலேயே இருந்தன. இதையும் ஒரு விளையாட்டு என ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.’ என அந்தப் பதிவு நடப்பு அரசியலை விளாசியிருந்தது.
‘‘அமைச்சர் கே.சி.வீரமணி, ‘மத்திய அரசு, அ.தி.மு.க அரசைக் கலைக்கத் திட்டமிட்டது. ஒரு குடும்பத்துக்காக கட்சியையும் ஆட்சியையும் இழக்க விரும்பவில்லை. அதனால்தான், அமைச்சர்கள் எல்லோரும் சேர்ந்து, அந்தக் குடும்பத்தை விலக்கி வைத்துவிட்டோம்’ என ஜோலார்பேட்டையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். உண்மைநிலையை இதைவிட அப்பட்டமாக சொல்லமுடியாது’’ என்றார் கழுகார். 
‘‘ஆனால், அ.தி.மு.க-வில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகப் பேசுகிறார்களே?”
‘‘ஆமாம்! கட்சியினருக்கே தலை சுற்றுகிறது. ‘அ.தி.மு.க-வுக்குள் என்ன நடக்கிறது? என்னவெல்லாம் நடக்கும்? யார் பேசுவது நிஜம்? யாருக்கு யார் விசுவாசமாக இருக்கிறார்கள்? யார் எங்கெங்கு போட்டுக் கொடுக்கிறார்கள்’ என்றே தெரியவில்லை. இது எங்கே போய் நிற்கும் என்றும் தெரியவில்லை. உடைந்த கட்சி ஒட்டிக்கொள்ளுமா, இந்த ஆட்சி தொடர்ந்து நிலைக்குமா? என்ற கேள்விகளுக்குப் பதிலே இல்லை!” 
‘‘தினகரன் எப்படி திடீரென்று அவராகவே பின்வாங்கினார்?”
‘‘அவராக விலக தினகரன் என்ன அப்பாவியா? வேகமாக சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கி, அதைவிட வேகமாக அவரை சிறைக்கு அனுப்பியதில் காரண கர்த்தாவாக தினகரன் இருக்கிறார். சசிகலா சிறைக்குப் போகும் நேரத்தில், தன்னையும் தனது மச்சான் வெங்கடேஷையும் மட்டும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ள கையெழுத்துப் போட வைத்தவர் தினகரன். துணைப்பொதுச்செயலாளர் ஆன கோதாவில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். ‘போட்டியிட வேண்டாம்’ என சசிகலா சொன்னதை மீறித்தான் அவர் நின்றார். இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதும், உடனடியாக முதலமைச்சர் ஆவதும்தான் தினகரனின் திட்டம். அதில் மொத்தமாக மண் விழுந்துவிட்டது. இப்படி பதவிக்கு மேல் பதவிகளை அடைய பச்சையாகக் கிளம்பிய தினகரன், திடீரென்று, ‘நான் விலகிக்கொள்கிறேன்’ என்று சொன்னால் நம்ப முடியுமா என்ன?”

‘‘நம்ப முடியாதுதான். நீர் சொல்லும்… ஏன் இந்த முடிவாம்?”
‘‘வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, டெல்லி போலீஸ், தேர்தல் கமிஷன் என நாலாபுறமும் சாட்டைகள் சுழல, சுருண்டுவிட்டார் தினகரன். ‘ஏற்கெனவே ஃபெரா வழக்குகள் உள்ளன. இரட்டை இலையை வாங்க லஞ்சம் கொடுத்தார் என்று புது வழக்கும் பதிவாகி சம்மனும் வந்துவிட்டது. இதிலிருந்து மீள்வதற்கே பல ஆண்டுகள் ஆகிவிடும். அ.தி.மு.கவை கைப்பற்றுவது, முதலமைச்சர் ஆவது என தொடர்ந்து பிடிவாதம் காட்டினால், வழக்குகளை இன்னும் இறுக்கி விடுவார்கள் என தினகரன் பயந்தார். அதனால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்தார்’ என்று சொல்கிறார்கள். இன்னொரு முக்கியக் காரணம்…”
‘‘அது என்ன?”
‘‘ஏப்ரல் 14-ம் தேதி தினகரன் வீட்டில் என்ன நடந்தது என்பதை கடந்த இதழில் உமது நிருபர் எழுதி இருந்தார். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட பலரும் தனக்கு எதிராக இருப்பதை உணர்ந்தார் தினகரன். அவருக்கு ஆதரவாக இருந்த அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், உடுமலை ராதா கிருஷ்ணன் ஆகியோர் மட்டும்தான். எம்.எல்.ஏ-க்களில் எத்தனை பேர் தன் பக்கம் வருவார்கள் என கணக்கெடுத்தார் தினகரன். முதல் பட்டியலில் தனக்கு அறிமுகம் ஆன 40 எம்.எல்.ஏ-க்கள் பெயரை எழுதினார். அவர்களிடம் ஆட்கள் மூலமாக பேசத் தொடங்கியபிறகு 21 பேர் மட்டுமே லைனில் வந்தார்களாம். மற்றவர்கள் ‘என்ன ஏது’ என்றுகூட கேட்கவில்லையாம். ஒரு கட்டத்தில், ‘தன் பக்கம் நிற்பதற்கு பத்துப் பேருக்குமேல் தேறுவது கஷ்டம்’ என்பதும் அவருக்குத் தெரியவந்ததாம். இப்படியே போனால் தன்னை, கட்சியை விட்டே விலக்கி விடுவார்கள் என்று பயந்தாராம்!”
‘‘ஓஹோ!”
‘‘அவரே சில அமைச்சர்களுக்கு போன் போட்டு, ‘நான் வேண்டுமானால் விலகி விடுகிறேன்’ என்று சொல்லிப் பார்த்துள்ளார். ‘வேண்டாம்’ எனத் தடுப்பார்களா என்று ரியாக்‌ஷன் பார்ப்பதற்காகச் சொன்னாராம். ‘இவர் எப்படா சொல்வார்’ என்று காத்திருந்தது போல, ‘ஓகே’ என்றார்களாம். தினகரனின் குடும்பத்தினரும், ‘நீங்கள் எந்தப் பதவியிலும் இருக்க வேண்டாம். வெளியில் இருந்தால் போதும். இப்போது சுதாகரன் குடும்பம் அனுபவிக்கும் கஷ்டம் நமக்கும் வந்துவிடக் கூடாது’ என்றார்களாம். தினகரன் இதனால் குழப்பத்தில் இருந்தார்.’’
‘‘அப்படியா?”
‘‘இந்த நேரத்தில்தான், அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் கூடினார்கள். ‘தினகரன் குடும்பத்தினர் ஆதிக்கம் இருக்கக் கூடாது’ என்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் சொல்லச் சொன்னார்கள். அவர் தயக்கத்தில் சொல்லவில்லை. மறுநாள் காலையில் தினகரனை அமைச்சர்கள் செங்கோட்டையனும் திண்டுக்கல் சீனிவாசனும் போய் பார்த்தார்கள். அப்போது இவர்கள் இருவரும் தன்னிடம் மனம்விட்டுப் பேசவில்லை என்பதை தினகரன் உணர்ந்தார். அதுவரை தங்கமணி, வேலுமணி கோஷ்டியில் இவர்கள் இருவரும் சேரவில்லை. ஆனால் அமைச்சர்கள் அனைவரிடமும் செங்கோட்டையனும் திண்டுக்கல் சீனிவாசனும் பேசியபோது, எல்லோருமே தினகரனுக்கு எதிர்ப்பாக இருப்பதை உணர்ந்தார்கள். மரியாதை நிமித்தமாகப் போய் தினகரனிடம் நைஸாகச் சொல்லவே இவர்கள் போனார்கள். ஆனால் சொல்லவில்லை. ஆனால், அனைத்தையும் உணர்ந்தவராக தினகரன் இருந்தார். இவர்கள் இருவரும் சொல்லாமலே, அமைச்சர்கள் மனதில் நினைப்பது தினகரனுக்குப் புரிந்தது. மோதல் வேண்டாம் என்று இறுதி முடிவை எடுத்தார்!”
‘‘தினகரன் விலகினாலும், எடப்பாடியும் பன்னீரும் சேருவது அவ்வளவு ஈஸியான விஷயம் போலத் தெரியவில்லையே?”
‘‘உண்மைதான். தினகரனை நீக்குவதோடு எல்லாப் பிரச்னையும் முடிந்துவிடுமா என்ன? பிரச்னையே முதலமைச்சர் பதவியை வைத்துத்தான் நடக்கிறது. ‘இணைப்புக்குத் தயார், எனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும்’ என்பதுதான் பன்னீர்செல்வத்தின் கோரிக்கை. ‘முதல்வர் பதவியை விட்டுத்தர மாட்டேன்’ என்கிறார் எடப்பாடி பழனிசாமி. பிறகு எப்படி இணைப்பு சாத்தியம் ஆகும்?”
‘‘ம்!”
‘‘தற்போது அதிகாரம் பொருந்தியவராக ஆகிவிட்டார் எடப்பாடி. அனைத்து அமைச்சர்களும் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க் களும் அவர் பக்கம்தான் இருக்கிறார்கள். அதனால், ‘யாருடைய உதவியும் இல்லாமல், தாங்களாகவே ஆட்சியை நடத்திச் செல்லலாம்’ என நினைக்கிறார். ‘இனி, பன்னீர் எதற்கு? எக்காரணம் கொண்டும் அம்மா ஆட்சியை அவர் கவிழ்க்கமாட்டார். ஏதாவது குழப்பினால், அவரது கோஷ்டி எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் பதவிக்காக நம் பக்கம் தாவிவிடுவார்கள். அதுவரை பொறுப்போம். பிறகு பார்க்கலாம்’ என எடப்பாடி கோஷ்டி அமைச்சர் ஒருவர் தலைமைச் செயலகத்தில் பகிரங்கமாகப் பேசியதாக தகவல். இது பன்னீர் காதுக்கு வந்து சேர்ந்ததும் பதற்றம் ஆகிவிட்டாராம். பன்னீர்செல்வத்திற்கு மீண்டும் நிதி அமைச்சர் பதவி தருவதாகவும், அவருடன் இருக்கும் மாஃபா பாண்டியராஜனுக்கு மீண்டும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவி தரத்தயார் என்றும் அரசல்புரசலாக சொல்லி அனுப்பினார்கள். மற்றபடி, முதல்வர் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியெல்லாம எதிர்பார்த்தால்… ஒரு கும்பிடுதான் என தீர்மானமாகச் சொல்லி விட்டார்கள். இது பன்னீர் அணியினரை டென்ஷன் ஆக்கியது. ‘நாங்கள் நினைத்தால், இரட்டை இலையை முடக்கி விடுவோம். மக்கள் மன்றத்தில் நீதி கேட்டால், அவர்கள் பன்னீர்செல்வத்தைத்தான் ஆதரிப்பார்கள். தொண்டர்களும் அப்படித்தான். இது புரியாமல் ஆடினால் தக்க பதிலடி தருவோம்’ என சொல்ல ஆரம்பித்தார்கள்!”
‘‘ஈகோ போட்டி களை கட்டுகிறதோ?”
‘‘தினகரன் விலகுவதாகச் சொன்னதை, ‘இது எங்களின் தர்ம யுத்தத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி’ என்றார் பன்னீர். இது அமைச்சர் ஜெயக்குமாரை கோபப்படுத்தியது. ‘இப்படியே போனால் அமெரிக்காவில் ட்ரம்ப் ஜெயித்ததற்கும் தான்தான் காரணம் என்று பன்னீர் சொல்வார்’ என்று கிண்டல் அடித்தார். இது பன்னீரை எரிமலை ஆக்கியது. ‘ஏதோ நம்ப வைத்து கழுத்தறுக்கப் பார்க்கிறார்கள்’ என்று பன்னீருடன் இருக்கும் கே.பி.முனுசாமி கொதித்தார். ‘இன்னமும் அவர்கள் சசிகலாவை நீக்கவில்லை, தினகரனை நீக்கவில்லை, அவர்களை நீக்காமல் எந்த இணைப்பும் சாத்தியம் இல்லை. எங்களைப் பொறுத்தவரையில், இரண்டு நிபந்தனைகளை அவர்கள் முதலில் நிறைவேற்றவேண்டும். ஒன்று, ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைக் கடிதம் அனுப்பவேண்டும். மற்றொன்று, தினகரன், சசிகலா… இருவரிடமும் அதிகாரபூர்வமாக ராஜினாமா கடிதம் வாங்கி அதை அறிக்கையாகத் தரவேண்டும். இந்த இரண்டையும் செய்தால்தான், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு நாங்கள் வருவோம். ஏனென்றால், சசிகலா குடும்பத்துக்குள் நடக்கும் குடுமிப்பிடி சண்டையில் தினகரனை வெளியேற்ற திவாகரனும், நடராசனும் எடப்பாடி கோஷ்டியினரை பகடைக்காயாக பயன்படுத்தி யிருப்பார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. தினகரன் வெளியேற்றமே ஒரு நாடகமாக இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது. யாரோ ஒருவர் பாதுகாப்பில் விஜயபாஸ்கர் இருந்துவருகிறார்’ என வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்தார் கே.பி.முனுசாமி. இப்படி வார்த்தைகள் இரண்டு பக்கமும் தடிப்பதால், ‘இணைப்பே சாத்தியம் இல்லை’ என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.”
‘‘அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எடப்பாடியை ஆதரிக்க ஆரம்பித்தது எப்படி?”
‘‘ரெய்டு அஸ்திரம்தான் காரணம். ‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான பணப் பட்டுவாடா பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பிடமிருந்து எடுத்தார்கள் அல்லவா? அதில் விஜயபாஸ்கர் முழிபிதுங்கி நிற்கிறார். அந்தப் பட்டியலில் பல அமைச்சர்களின் பெயர்கள் இருக்கின்றன. அனைத்து அமைச்சர்கள் வீடுகளுக்கும் வருமானவரித் துறை ரெய்டு வரப்போவதாக மிரட்டப்பட்டார்கள். ஐ.என்.எஸ் சென்னை போர்க்கப்பலைப் பார்வையிட வந்த எம்.எல்.ஏ-க்களிடம், ‘கூவத்தூரில் நடந்த  பின்னணி விவகாரங்களின் ஆதாரங்களை வருமான வரித்துறை எடுத்துவிட்டது. அதனால் ஒரே நேரத்தில் தமிழ்நாட்டில் அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வீட்டிலும் ரெய்டு வரப் போகிறார்கள்’ என்று யாரோ வதந்தி கிளப்பினார்கள். தப்பிக்க என்ன வழி என்று உஷாரான ஒருவர் கேட்டாராம். ‘தினகரனை ஆதரிக்கக் கூடாது’ என்றாராம் அமைச்சர் ஒருவர். ‘அதனால் என்ன? நாம் தினகரனை ஆதரிக்க வேண்டாம்’ என்று அனைவரும் தலையாட்டினார்கள். அவ்வளவுதான். மொத்தமும் ஒரே ஒரு மிரட்டலில் முடிந்து விட்டதாம்!”
‘‘ம்!”
‘‘இதேபோல, ‘அமைச்சர்கள் பலரின் ஊழல் விஷயங்களைத் தோண்டி எடுத்துவிட்டார்கள். டெல்லி பி.ஜே.பி மேலிடத்துடன் இணக்கமாகப் போகவில்லை என்றால், நமக்கு அதோ கதிதான். இதில் யாருமே தப்ப முடியாது’ என்று படிப் படியாக ப்ரெய்ன் வாஷ் நடந்ததாம். அதையடுத்து தான், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடியை கோரஸாக ஆதரிக்க ஆரம்பித்தார்கள்!”
‘‘திவாகரன் பங்கு இதில் இருப்பதாகச் சொல்கிறார்களே?’’
‘‘திவாகரன்தான் இந்த ஒட்டுமொத்த ஆபரேஷனையும் நடத்திவருவதாக டெல்டா ஏரியா அ.தி.மு.க பிரமுகர்கள் சொல்லி வருகிறார்கள். டெல்டா ஏரியாவில் கணிசமான எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் அவர் பேச்சைக் கேட்பார்கள். அதேநேரம், தஞ்சாவூரைச் சேர்ந்த எம்.பி. வைத்திலிங்கமும் முக்குலத்தோர் சமூகத்தில் செல்வாக்கு உள்ள தலைவர்தான். இவர் வசம் 9 எம்.எல்.ஏ-க்கள் 6 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் சசிகலா குடும்பத்தினருடன் இவருக்கு மோதல் இருந்துவந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, திவாகரனுடன் சமரசம் ஆகிவிட்டார் வைத்திலிங்கம்.’’

‘‘இவர் எப்படி எடப்பாடி பக்கம் வந்தார்?”
“எடப்பாடி கோஷ்டியினருக்கு டெல்டா ஏரியாவில் ஆதரவு இல்லை. இதை மனதில் கொண்டு, அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் வைத்திலிங்கத்தையும், அவரது சமூகத்தைச் சேர்ந்த திருச்சி எம்.பி-யான குமாரையும் தொடர்புகொண்டனர். அவர்கள் ஓகே சொன்னவுடன், எடப்பாடி கோஷ்டிக்கு ஆதரவு தேடும் படலம் சூடு பிடித்தது. வைத்திலிங்கத்துக்குப் பொதுச் செயலாளர் பதவி உண்டு என வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறதாம். தினகரன் விலகியதாக அறிவித்ததும், கட்சியின் இரண்டு கோஷ்டியினரும் ஒரே அணியில் சேரப்போவதை சுட்டிக்காட்டிய திவாகரன் மகன் ஜெயானந்த், தன் ட்விட்டர் பக்கத்தில் இதை வரவேற்று ட்வீட் போட்டிருந்தார். இந்த நிலையில், ‘சசிகலா தவிர வேறு யாரும் எங்கள் குடும்பத்தில் இருந்து நேரடி அரசியலுக்கு வரமாட்டார்கள். தினகரன் இதை மீறிவிட்டார். சசிகலாவின் ஆலோசனையைக் கேட்காமல் ஆர்.கே. நகரில் அவர் போட்டியிட்டதே தவறு. அவருக்கு உரிய பாடம் கற்பிப்போம்’ என்கிற ரீதியில் திவாகரன் சொன்னாராம். திவாகரன் பச்சைக்கொடி காட்ட… வைத்திலிங்கம் களத்தில் குதிக்க.. எடப்பாடி கோஷ்டிக்கு ஆதரவு குவிந்தது.”
‘‘இப்போது பி.ஜே.பி-யின் செல்லப்பிள்ளை ஓ.பி.எஸ்-ஸா… ஈ.பி.எஸ்-ஸா?”
‘‘பன்னீர்செல்வத்தால் தினகரனை விரட்ட முடியவில்லை. அதைச் செய்தது எடப்பாடி பழனிசாமி என்பதால், இப்போதைக்கு எடப்பாடிதான் பி.ஜே.பி-யின் செல்லப்பிள்ளை. பி.ஜே.பி தலைவர் அமித் ஷா, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த செல்வாக்கான பக்கத்து மாநிலப்பதவியில் இருக்கும் பிரமுகர் ஒருவர்… இவர்களின் ஆலோசனைப்படி எடப்பாடி கோஷ்டி செயல்படுகிறது. பிரதமர் மோடிக்கு வேண்டப்பட்ட சென்னையை சேர்ந்த ஆடிட்டர் ஒருவரின் ஆலோசனைப்படி ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டி செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் பன்னீரை டெல்லி பி.ஜே.பி தலைவர்கள் ஆதரித்தனர். ஆனால், பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் அவர்பக்கம் இல்லை என்ற உண்மையை டெல்லி உணர்ந்துகொண்டிருக்கிறது. எடப்பாடி, பி.ஜே.பி-யின் எண்ண ஓட்டத்தை நன்றாகப் புரிந்துகொண்டு அரசியலில் காய் நகர்த்துகிறார். அது அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. சமீபத்தில் நடந்திருக்கும் இரண்டு விஷயங்களைப் பார்த்தால் இதைப் புரிந்துகொள்ளலாம். தமிழக அரசு கேபிளுக்கு டிஜிட்டல்  உரிமை, கடந்த வாரம் கிடைத்திருக்கிறது. ஜெயலலிதா கேட்டே கிடைக்காத விஷயம் இது. பிரதமர் மோடி தன் காரில் சிவப்பு விளக்கை அகற்றிய அடுத்த நாளே, தன் காரிலிருந்து சிவப்பு விளக்கை அகற்றுகிறார் எடப்பாடி. இதெல்லாம் பன்னீர் தரப்பை காய்ச்சலில் தள்ளி இருக்கிறது.”
‘‘இனி என்ன ஆகும்?”
‘‘குரு தினகரனைப் போலவே சிஷ்யர் பன்னீரும், அரசியல் காய் நகர்த்தலில் தாக்குப் பிடிக்க முடியாமல், பெரியப்குளத்தில் விழுந்து விட்டார். ‘நீயும் பொம்மை… நானும் பொம்மை…’ என இருவரும் சோக கீதம் இசைக்க வேண்டியது தான்!” என்ற கழுகார், சட்டென பறந்தார்.

%d bloggers like this: