டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம்! – தவிர்ப்பது எப்படி?

‘நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை’ எனப் பாரதி பாடியிருப்பார். ஆனால், இன்று பெரும்பாலானோருக்கு நிமிர்ந்த நடையும் இல்லை; நேர்கொண்ட பார்வையும் இல்லை. அனைத்தும் செல்போனை நோக்கியே இருக்கிறது. பெரும் பாலானோருக்கு இருந்த நிமிர்ந்த நெஞ்சம், இன்றளவில் கூன் விழுந்துவிட்டது. காரணம் செல்போன்கள். மெசேஜ் செய்துகொண்டும், பேஸ்புக் பார்த்தபடியும், பாட்டு கேட்டபடியும் மக்கள் நடமாடத் தொடங்கிவிட்டனர். கழுத்து வளைந்து, செல்போனை நோக்கியபடி மாறியிருக்கிறது. இந்தப் பிரச்னைக்குப் பெயர் ‘டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம்’. இதைத் தவிர்க்கும் வழிகளைப் பற்றிப் பார்ப்போம்.

யாரை அதிகம் பாதிக்கிறது? காரணங்கள் என்னென்ன?

இன்று 50% மக்களுக்கு,  குறிப்பாக இளம் வயதினருக்கு இந்தப் பிரச்னை உள்ளது. இன்டர்நெட் அதிகமாக உபயோகிப்பதால் அவர்கள் தொடர்ந்து செல்போனையே பார்த்துக்கொண்டிருக்கின்றனர். விழித்திருக்கும் நிலையில் வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே செல்போன் பயன்படுத்தாமல் இருக்கின்றனர். மற்றபடி, பெரும்பாலான நேரத்தில் செல்போனில் மூழ்கியபடியே உள்ளனர். அதுபோல், கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது.

 

அறிகுறிகள்

*    கழுத்து, தோள்பட்டையில் இறுக்கம் ஏற்படுவது

*    நாள்பட்ட தலைவலி

*    கழுத்துப் பகுதியின் உட்புறத்தில் புண்கள் உருவாவது

*    நிற்கும், நடக்கும், உட்காரும் நிலைகளில் மாற்றம்

*    மரத்துப்போதல்

*    கழுத்து, முதுகு, தோள்பட்டை, புஜம், கை, விரல்கள், மணிக்கட்டு, முழங்கை ஆகியவற்றில் வலி வருவது.

கழுத்து வலி ஏன் வருகிறது?

நீண்ட நேரமாகக் கழுத்தை 30 டிகிரி அளவில் சாய்த்துக்கொண்டு இருந்தால், தசைகளில் ஏற்படும் அழுத்தம் மூன்று மடங்கு அதிகமாக மாறும். அதைப்போல, கழுத்துப் பகுதியை 60 டிகிரி அளவில் சாய்த்து வைத்திருப்பதால், தசைகளின் அழுத்தம் 30 மடங்காக மாறும்.

இயல்பான நிலையில் இல்லாமல், நீண்ட நேரம் மாறுபட்ட நிலையில் இருக்கும்போது தலைக்கும் கழுத்துக்கும் வேலை கொடுக் கப்படுகிறது. தோள்பட்டை, காதுகள் போன்றவற்றின் ஒருமிப்பும் மாறுகிறது. தோள்பட்டையின் எடையும் தலைக்குச் சேர்கிறது. இதனால் கழுத்து வலி வருகிறது.

தொடர்ந்து இந்த நிலையில் இருந்தால், கழுத்து மற்றும் தலைக்குச் சீரான ரத்த ஓட்டம் செல்லாமல் தடை ஏற்படுகிறது. பொதுவாக, எலும்புகள், தசைகள், கழுத்துத் தசைநார்கள் (Neck Ligaments) ஆகியவை பாதிக்கும்.

கழுத்துத் தசைநார்கள் ரப்பரின் தன்மை கொண்டவை. அவை ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு, அதிக அழுத்தம் கொடுக்கப்படும் போது, விரிவடைந்து பலவீனமாகிவிடுகின்றன. இதனால், 60 வயதில் வரக்கூடிய கழுத்துப் பிரச்னை 18-40 வயதுக்குள்ளேயே வந்துவிடுகிறது.

சி5, சி6, சி7 ஆகிய எலும்புகளுக்குப் பாதிப்பு அதிகம். அங்குள்ள தசைகளின் மீது அழுத்தம் ஏற்பட்டு வலி அதிகமாகி, மேலும் பல பிரச்னை களுக்கு வழிவகுக்கும் நிலை உண்டாகிறது.

அவரவர் வயதுக்கு ஏற்றாற்போல இந்த வலி மற்றும் பிரச்னைகள் மாறுபடும். தொடர்ந்து, தவறான பொசிஷனில் செல்போன், லேப்டாப் பயன்படுத்தும்போது, டீஜெனெரேடிவ் டிஸ்க் நோய் (Degenerative Disc Disease) வர வாய்ப்புகள் அதிகம்.

தீர்வுகள்

வலி, இறுக்கம் இருந்தால் தொடர் பயிற்சிகளைச் செய்வதன் மூலம் சரிப்படுத்திவிடலாம். அருகில் உள்ள யோகா நிபுணர் அல்லது பிசியோதெரப்பிஸ்ட்டிடம் கழுத்து வலிக்கான வொர்க்அவுட்களைக் கற்றுக்கொள்ளலாம். வலியும் பிரச்னையும் தீவிரமான நிலையில் இருந்தால் மருத்துவர் பரிந்துரைக்கும் ‘நெக் பெல்ட்’ போட்டுக்கொள்வது நல்லது. அதிதீவிர பிரச்னையில் இருப்பவர்கள் மட்டும், மருத்துவரிடம்  சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தவிர்க்கும் வழிகள்…

*    கண்களுக்கு நேராக இருக்கும்படி செல்போனை உயர்த்திப் பிடித்துப் பயன்படுத்துங்கள். அதாவது செல்போனும் கண்களும் நேராக இருக்க வேண்டும்.

*    கழுத்தை 90 டிகிரியில் வைத்தால் எந்த விதமான பிரச்னைகளும் வராது. காரணம், தசைகளுக்குச் சரியான அளவில் அழுத்தம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது; ரத்த ஓட்டமும் சீராகச் செல்லும்.

*    கம்ப்யூட்டர் பிரேக், செல்போன் பிரேக் எனத் தனித்தனியாகப் பிரேக் எடுங்கள்.

*    பஸ், ரயில் போன்ற பயணங்களில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

*    ஏதேனும் ஸ்டாண்ட், டேபிள் வைத்து டேப்லெட், லேப்டாப் ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் முதுகு வலி, கழுத்து வலி வராமல் தடுக்கலாம்.

*    கைகளை அதிக நேரம் தொங்கவிட்டால், தோள்பட்டையில் வலி ஏற்படும். கைகளைச் சேரின் மீது ஹோல்டு செய்து உட்கார வேண்டும். இதே நிலையில் கம்ப்யூட்டர் முன் வேலை செய்வது நல்லது.

*    ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கழுத்துத் தசைகளுக்குப் (நெக் வொர்க்அவுட்) பயிற்சிகள் கொடுக்க வேண்டும். இதனால், கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் ரத்த ஓட்டம் சீராகும்.

*    யோகா நிபுணரிடம் போஸ்சர் சரிசெய்யும் ஆசனங்கள், கழுத்து, முதுகுக்கான ஆசனங்களைக் கற்றுக்கொண்டு செய்யலாம். வலி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை யைக் கேட்ட பின் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.


`C’ வடிவத்தில் மாறும் குழந்தைகள்

குழந்தைகள் டிவியை விட செல்போனையே அதிகம் பயன்படுத்துகின்றனர். செல்போனை உபயோகிக்கும்போது, உடலை `C` வடிவத்தில் வளைத்துக் கொள்கின்றனர். இந்த நிலையில் நீண்ட நேரம் இருக்கும்போது, மொத்த அழுத்தமும் தசை நார்களில் விழுகிறது. இதனால், உடலின் போஸ்சரில் மாற்றம் ஏற்பட்டு கூன் விழும்; வளர்ச்சிகூடப் பாதிக்கலாம்.

டெம்பிள் ரன், கார் ரேஸ் போன்ற அதிவேக கேம்களால் குழந்தைகளுக்கு உணர்வுகளில் மாற்றம் உண்டாகும். விளையாட்டின் சுவாரஸ்யத்தால் கழுத்து, முதுகு வலி ஏற்பட்டாலும் கண்டுகொள்ளாமல் விளையாடிக் கொண்டிருப்பர். எனவே, பெற்றோர் இதைக் கவனித்து, செல்போனைப் பயன்படுத்தாத முறையில் பாதுகாப்பது நல்லது. குழந்தைகளை மற்ற உடலுழைப்பு தரும் விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும். அடம் பிடித்தாலும் குழந்தைகளுக்குக் கட்டாயமாகச் செல்போன், லேப்டாப், டேப்லெட் போன்றவற்றைத் தரக்கூடாது.

ரவி கிருபானந்தன், மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்

%d bloggers like this: