157 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை வளாகம் சுற்றுலா தலமாகிறது: பொதுமக்கள் பார்வையிட அனுமதி

அடர்ந்த வனப்பகுதி, அரிய வகை மரங்கள், தாவரங்கள், மான்கள், நட்சத்திர ஆமைகள் என இயற்கையின் கொடையாக அமைந் திருக்கும் தமிழக ஆளுநர் மாளிகையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களின் அழகை இனி பொதுமக்கள் பார்த்து ரசிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள சரித்திர முக்கியத் துவம் வாய்ந்த இடங்களில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையும் ஒன்று. முக்கியப் பிரமுகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட இந்த மாளிகைக்குள் சாதாரண மக்களும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒருவர் நினைத்த மாத்திரத்தில் உள்ளே போய் பார்க்க முடியாது. ஆளுநர் மாளிகையின் இணையதளத்தில் பதிவு செய்து, நபர் ஒருவருக்கு ரூ.25 வீதம் ஆன்-லைனில் செலுத்தினால் மட்டுமே ஆளுநர் மாளிகைக்குள் செல்ல முடியும். இதன்படி ஆளுநர் மாளிகையை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பேட்டரி காரில் சென்று பார்வையிடலாம்.

சுமார் 157 ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ள ஆளுநர் மாளிகையில், மரங்கள், தாவரங்கள், மலர்கள், மான்கள், வாத்துகள், லவ் பேர்ட்ஸ், பராம்பரியக் கட்டிடங்கள் என பல்வேறு விஷயங்கள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. அங் குள்ள சுற்றுச்சூழலும் இனிமையாக உள் ளன. இனி சென்னைக்கு சுற்றுலா வரு வோரை ஆளுநர் மாளிகை வெகுவாகக் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

ஆளுநர் மாளிகையின் வரவேற்பு அறை யில் இருந்து பேட்டரி காரில் செல்லும் மக்கள், முதலில் பச்சைப் பசேலென காட்சியளிக்கும் நாற்றங்காலைப் (நர்சரி) பார்க்கலாம். 283 மரங்களுடன் தென்னந் தோப்பு, 284 மரங்களுடன் மாந்தோப்பு, காய்கறி சாகுபடி ஆகியன கிராமங்களுக்கு சென்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குளத்தில் வாத்துகள் நீந்துவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. செம்மரம் உள்ளிட்ட அரியவகை மரங்களும் இங்கு நிறைந்துள்ளன.

அதையடுத்து கொலு மண்டபம் என அழைக்கப்படும் தர்பார் ஹாலின் அழகை ரசிக்கலாம். இங்குதான் முதல்வர், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைப்பார். அதனருகே இரண்டரை ஏக்கரில் அமைந்துள்ள பிரதான புல்வெளி, பச்சைப் போர்வையைப் போர்த்தியது போல காட்சியளிக்கிறது. இந்த புல்வெளியில் மான்கள் உலவுவதும், துள்ளித் திரிவதும் கண்களைக் கொள்ளை கொள்ளும். அடுத்ததாக இளம்பச்சை வண்ண மேற் கூரையுடன் கூடிய பெரிய கூண்டில் 25 வகையான 40 ஜோடி லவ் பேர்ட்ஸ்களைக் காணலாம். ஆஸ்திரேலியா நாட்டு லவ் பேர்ட்ஸ்களும் இதில் அடங்கும்.

கொலு மண்டபத்துக்கு எதிரே ‘GAZEBO’ எனப்படும் மண்டபம், முட்டை வடிவிலான தோட்டம், மூலிகைத் தோட்டம், சுதந்திர பொன்விழா தோட்டம் என நாலாபுறமும் பச்சைப் பசேலென பரந்து விரிந்து காணப்படும் தோட்டங்களுக்கு மத்தியில் 100 ஆண்டுகளைக் கடந்த பராம்பரியக் கட்டிடங்கள், முக்கியப் பிரமுகர்களுக்கான மாளிகை ஆகியன கம்பீரமாய் காட்சியளிக்கின்றன.

பேட்டரி கார், காப்புக்காடு (அடர்ந்த வனப்பகுதி) வழியாகச் செல்லும்போது நரிகள், குரங்குகள் கண்ணில் பட வாய்ப் புள்ளது. விதவிதமான பறவைகளையும் பார்த்து ரசிக்கலாம். ஆளுநர் மாளிகை வளாகத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 158 மரங் கள் உள்ளன. இதில் வார்தா புயலின் போது 440 மரங்கள் சாய்ந்து விட்டன. எனினும் ஆளுநர் மாளிகை வளாகத்தில் பசுமை போர்வை பாதிக்கவில்லை.

தமிழக சுற்றுலாத்துறை வழிகாட்டி கே.பி.கணேஷ் கூறும்போது, “இயற்கை எழில் சூழ்ந்த ஆளுநர் மாளிகையைக் காண்போர் அனைவருக்கும், அது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவ மாக இருக்கும்” என்றார்.

சுற்றிப் பார்ப்பது எப்படி?

ஆளுநர் மாளிகையை சுற்றிப் பார்ப்பதற்கு http://www.tnrajbhavan.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, நபர் ஒருவருக்கு ரூ.25 வீதம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். தற்போது ஏப்ரல், மே மாதத்துக்கான முன்பதிவு முடிந்துவிட்டது. வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் மட்டுமே அனுமதி உண்டு. நாள் ஒன்றுக்கு 20 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால் பலரும் முன்பதிவு செய்ய முடியவில்லை. எனவே, இந்த எண்ணிக்கையை 50 அல்லது 100 என்று அதிகரிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

%d bloggers like this: