Advertisements

எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோம்!’ பெற்றோரைத் தாக்கும் புதிய பிரச்னை

ம்மாவின் முந்தானையைப் பிடித்து வளர்ந்த மகனாக இருந்தாலும் அவன் மேல்படிப்புக்காக வெளிநாடு போக வேண்டிய சூழல் ஏற்படும்போது ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும்? தந்தையின் மடியில் படுத்து… செல்லமாய் சிணுங்கி… அடம் பிடித்து அழுது ஐபோன் வாங்கிய மகளுக்குத் திருமணமானதும் அவள் கணவன் வீடு

செல்வதுதானே வாழ்வின் யதார்த்தம்?  இத்தனை நாள்கள் தன்னுடன் இருந்தவனை/இருந்தவளை எப்படிப் பிரிவது என்கிற தவிப்பு அதிகரிக்கும்போது பெற்றோருக்கு  மனரீதியாக ஒருவித பிரச்னை உண்டாகும். அதற்குப்பெயர்தான் `எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோம்.’

குழந்தை தன்னை விட்டுப் பிரியும்போது மனதில் ஒருவிதமான பாரம் உண்டாவது இயல்பான ஒன்றே. ஆனால், அந்த பாரம் ஒரு கட்டத்தைத் தாண்டும்போது  நோயாக மாறுகிறது.

குழந்தைகளுக்கு முக்கிய அடையாளமே அவர்களது பெற்றோர்தான்.  திருமண வாழ்க்கை சரியில்லை என்றாலும் சரி, குடும்பத்தில் ஏற்படும் எத்தகைய பிரச்னையாக இருந்தாலும் சரி… பெற்றோர் தம் குழந்தைகள்மீது பாசமும், நேசமும் வைக்கத் தவறுவதில்லை. ஒரு கட்டத்தில் அந்தக் குழந்தை பிரிந்து செல்லும் தருணத்தில், பெற்றோருக்கு ஏற்படும் மனரீதியான பிரச்னையே இந்த `எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோம்.’ ஆண்கள் தங்கள் வேலைகளில் அதிகக் கவனம் செலுத்துவதால் அவர்களுக்கு  பிரிவால் ஏற்படும் பிரச்னை பெண்களைக் காட்டிலும் குறைவே. காரணம், பெண்கள்தாம் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவர். ஆக, அவர்களுக்கு இந்தத் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இதுபோன்ற சூழலில் அவர்களிடம் சில மாற்றங்கள் ஏற்படும். எப்போதும் எந்நேரமும் தங்கள் குழந்தைகளைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் தனிமைச்சூழலில் இருக்கவே விரும்புவார்கள். அவர்கள் முகத்தில் கவலை மட்டுமே இருக்கும். வெறித்த பார்வையுடன் காணப்படுவார்கள். குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்களா, இல்லையா என்ற சந்தேகம் அவர்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.  வெளியே  எங்கும் செல்லாமல், வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பார்கள். மனஅழுத்தம் அதிகமாக இருக்கும். குழந்தை வீட்டில் இருக்கும்போதே இதைச் செய்திருக்கலாமே, அதைச் செய்திருக்கலாமே என்ற எண்ணம் மேலோங்கி, அதற்காக வருத்தப்படுவார்கள்.

எப்படிச் சமாளிப்பது?

நாம் நம் குழந்தைகள்மீது நியாயமான எதிர்பார்ப்புகளை மட்டுமே வைத்திருக்க வேண்டும். மற்ற குழந்தைகளுடன் தன் குழந்தையை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. குழந்தைகளின் நிலைமையும், அவர்கள் எந்த வயதில், எப்படி இருப்பார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். நம் குழந்தை நம்மைக் கண்டுகொள்ளவில்லை என்ற எண்ணத்தை அறவே விட வேண்டும். இத்தகைய சூழலில் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். தகவல் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியால் இன்று எந்த நேரமும் குழந்தைகளுடன் தொடர்பில் இருக்கலாம். அவற்றுக்குப் பழக வேண்டும்.

மற்ற உறவினர்கள், நண்பர்களுடன் நேரத்தைச் செலவழிக்க வேண்டும்.

குழந்தைகளுடன் பிஸியாக இருந்த நாள்களில் உங்களால் செயல்படுத்த முடியாமல் போன ஆர்வங்களில், பொழுதுபோக்குகளில் நேரத்தைச்  செலவிடுங்கள்.

உங்களைப் போன்றே பிள்ளைகளைப் பிரிந்து வாழும் பெற்றோருடன் நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். பிரிவுத் துயரத்திலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்கிற அனுபவம் உங்களுக்கு உதவக்கூடும்.

உணவுப் பழக்கவழக்கம் சரியான முறையில் இருக்க வேண்டும். தியானம், யோகா போன்றவற்றைச் செய்து மனதைக் கட்டுப்படுத்தலாம்.


வரும் முன் தடுக்க என்ன வழி… 

* `எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோம்’ வராமலிருக்கவும் அவை வரும்முன் தடுக்க வும் சில எளிய வழிகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

* குழந்தைகள் நம்மை விட்டுப் பிரிந்து போகும்  நிலை ஏற்பட்டால், அது தன் வாழ்வின் அடுத்த இன்னிங்க்ஸ் என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

* சரியான முறையில் உணவு உண்பதோடு சில உடற்பயிற்சிகளைச் செய்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.

* குழந்தைகளின் வாழ்வில் அளவுக்கு அதிகமாகத் தலையிடக்கூடாது.

* அவர்கள் நம்மை விட்டுப் பிரியப்போவதை அறிந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பே நம் மனதை வேறு வழியில் செலுத்தத் திட்டமிடல் வேண்டும்.

* குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்குத் தேவையான சுதந்திரம் கொடுக்க வேண்டும்.

* தனிமையைத் தவிர்க்க ஏதேனும் வகுப்புகள் எடுக்க ஆரம்பிக்கலாம்.

* கணவர் மற்றும் உறவினர்களுடன் சுற்றுலா செல்லலாம்.

* மனதில் ஏற்படக்கூடிய பயத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்வதன்மூலம் எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோம் பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ள இயலும்.

சங்கீதா சங்கரநாராயணன், மனநல மருத்துவர்

Advertisements
%d bloggers like this: