எடப்பாடி பழனிசாமியிடம் ஏன் பேசினார் தினகரன்?’ – டெல்லி கொதிப்பின் பின்னணி

இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன், ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். ‘சசிகலா குடும்பத்தை முழுமையாக அப்புறப்படுத்திய தகவல் வந்தால்தான், டெல்லியின் இறுக்கம் குறையும். இணைப்பு முயற்சிக்கு அவர் தடையாக இருக்கிறார் என்ற சந்தேகம் வந்ததால்தான், கைது நடவடிக்கைக்கு ஆளானார்’ என்கின்றனர் பன்னீர்செல்வம் தரப்பினர்.

‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராகக் களமிறங்குகிறேன்’ என டி.டி.வி.தினகரன் அறிவித்த நாளில் இருந்தே, அவருக்கு நெருக்கடிகள் தொடங்கிவிட்டன. அடுத்து வந்த நாள்களில், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி வைத்தது தேர்தல் ஆணையம். இதையடுத்து, தொப்பிச் சின்னத்தில் களம் இறங்கினார். தொகுதிக்குள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த பணப்பட்டுவாடா புகார் காரணமாக, ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. ‘அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கரை நீக்குங்கள்’ என்ற கோரிக்கையோடு, போயஸ் கார்டனில் தினகரனை சந்தித்துப் பேசச் சென்றனர் கொங்கு மண்டல அமைச்சர்கள். இந்தப் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக, தினகரனையே ஒதுக்கி வைக்கும் வேலைகள் தொடங்கின.

‘அணிகள் இணைவதால் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்பதால், நான் விலகிக்கொள்கிறேன்’ என அறிவித்தார் தினகரன். ஆனாலும், இன்று வரையில் பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை. இன்று காலை தலைமைக் கழகத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டன. “அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் பேச்சுவார்த்தையைத் தொடங்காததன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சசிகலா குடும்பத்தை முழுமையாக அப்புறப்படுத்தாமல், அமைச்சர்கள் நாடகம் நடத்துகின்றனர். ‘நாங்கள்தான் தடையாக இருக்கிறோம்’ என வெளியில் பொய்யான தகவல் பரப்புகின்றனர். சசிகலா குடும்பத்தை நீக்கிவிட்டதாக அறிவிப்பு வெளியாகும் வரையில் பேச்சுவார்த்தைகள் நடப்பதில் தாமதம் ஏற்படும்” என விவரித்த பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளர் ஒருவர், 

“எடப்பாடி பழனிசாமி அரசைத் திரைமறைவில் நின்றுகொண்டு இயக்கும் முடிவில் இருந்தார் தினகரன். அதையொட்டியே தனது ஆதரவு எம்.எல்.ஏக்களையும் பழனிசாமி பக்கம் திருப்பினார். போயஸ் கார்டனில் இருந்தபடியே தீட்டப்பட்ட இந்த நாடகத்தை சந்தேகத்தோடுதான் கவனித்து வந்தோம். அமைச்சரவைக்குள் நடக்கும் விஷயங்களையும் கவனித்து வந்தோம். தினகரன் விவகாரத்தைப் பொறுத்தவரையில், ‘ஆர்.கே.நகர்த் தேர்தலில் போட்டியிடுவேன்’ என அவர் கூறியதில் இருந்தே தொடங்கிவிட்டது. ‘தேர்தலில் அவர் போட்டியிட வேண்டாம்’ என டெல்லி பா.ஜ.க தலைமை கூறியதை அவர் பொருட்படுத்தவில்லை. ‘ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதியில், போட்டியிடுவதன் மூலம் ஜெயலலிதா இடத்துக்கு வர முடியும். எம்.எல்.ஏக்கள் ஆதரவோடு முதலமைச்சர் பதவியை எட்டிப் பிடிக்கலாம்’ எனக் கணக்குப் போட்டார். இந்தக் கணக்கைப் புரிந்துகொண்டு தம்பிதுரை மூலம் எச்சரிக்கை விடுத்தனர். அதையும் அவர் பொருட்படுத்தாததால், சின்னத்தையும் முடக்கினர். இதையும் தாண்டி தொப்பிச் சின்னத்தில் நின்றார். இதனை பா.ஜ.க தலைமை சிறிதும் ரசிக்கவில்லை. தேர்தலை ரத்து செய்த கையோடு, லஞ்சம் கொடுத்த புகாரில் அவரைக் கைது செய்துவிட்டார்கள்.

டெல்லி விசாரணையில் நான்கு நாள்களாக இழுத்தடிக்கப்பட்டார் தினகரன். அங்கு இருந்தபடியே, எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இதனைக் கண்காணித்த மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள், ‘அப்படியானால் இணைப்பு முயற்சிக்கு இவர்தான் தடையாக இருக்கிறார்? இவர் தொலைபேசியில் கூறுவதைத்தான் எடப்பாடி பழனிசாமி ஃபாலோ செய்கிறார்’ என பா.ஜ.க தலைமையின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். கைதுக்கு முந்தைய இரண்டு நாள்கள், உற்சாகமான மனநிலையில் இருந்த தினகரன், கைதுக்குப் பிறகு ரொம்பவே தளர்ந்து போய்விட்டார். இனி ஜெயா டி.வி நிர்வாகத்தை வளைப்பதுதான் அடுத்தகட்டப் பணி” என்றார் விரிவாக.

இதுகுறித்து, தினகரன் ஆதரவாளர்களிடம் பேசியபோது, “கூவத்தூரில் எம்.எல்.ஏக்களைப் பாதுகாத்து வைத்ததால்தான், ஆட்சியைக் காப்பாற்ற முடிந்தது. அதற்கு ஒரே காரணம் தினகரன் கொடுத்த கவர்ச்சிகரமான வாக்குறுதிகள்தான். சசிகலா சிறைக்குச் சென்ற பிறகும் கட்சியைக் கட்டுக்கோப்பாக நடத்தி வந்தார். எந்த இடத்திலும் அதிகார போதையை அவர் காட்டவில்லை. ஆர்.கே.நகரில் போட்டியிட நிர்வாகிகள் யாரும் முன்வராத காரணத்தால்தான், அவர் போட்டியிட்டார். மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை சட்டரீதியாகவே அவர் எதிர்கொள்வார். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், 120 பி என்ற கூட்டுச் சதிப் பிரிவின்கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். எனவே, ஜாமீன் கிடைப்பதில் காலதாமதம் ஆகும் என நினைக்கிறோம்.அணிகள் இணையும் வரையில் தினகரனைச் சிறையிலேயே வைத்திருக்க விரும்புகிறது பா.ஜ.க. இதையொட்டியே, ஏழுநாள் போலீஸ்காவல் கேட்டு டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ‘நடப்பதை எதிர்கொள்வோம்’ 

என்ற மனநிலைக்கு அவர் வந்துவிட்டார்” என்கின்றனர்.

%d bloggers like this: