தினகரன் கதை! போயஸ் கார்டன் என்ட்ரி முதல் டெல்லி கைது வரை…

மாதிகளின் பூமி’ என்றழைக்கப்படும் டெல்லியில் டி.டி.வி.தினகரனின் அரசியல் வாழ்க்கை அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. இரட்டை இலையை மீட்கத் துடித்த தினகரன் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம், அ.தி.மு.க-வில் அவருக்கிருந்த கொஞ்சநஞ்ச ஆதிக்க சக்தி, ஆட்சியில் அவருக்கு இருந்த எச்சசொச்ச செல்வாக்கு, சமீபமாக அவருக்குள் வளர்ந்திருந்த அரசியல் கனவுகள் அனைத்தும் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன்பு போயஸ் கார்டனுக்குள் நுழைந்தபோது தொடங்கிய தினகரனின் அரசியல்… டெல்லியில் அவர் கைது செய்யப்பட்டதில் ‘அஸ்தமனம்’ ஆனது வரையிலான கதை… 

தினகரனின் போயஸ் கார்டன் ‘என்ட்ரி’!

சசிகலாவின் உடன்பிறந்த அக்கா வனிதாமணி. அவருடைய கணவர் டி.விவேகானந்தன். வனிதாமணி-விவேகானந்தன் தம்பதியின் மூத்த மகன்தான் டி.டி.வி.தினகரன். இவர், சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் அனுராதாவை திருமணம் செய்துள்ளார். அனுராதாவின் உடன்பிறந்த சகோதரர்தான் டாக்டர் வெங்கடேஷ். 1987-ல் எம்.ஜி.ஆர் மறைந்ததற்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு ‘ஆல்-இன்-ஆல்’ ஆக இருந்தவர்கள் சசிகலாவும் அவரது கணவர் நடராசனும். அவர்கள் தயவில், சசிகலாவின் தம்பி திவாகரனும் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தார். அவர் தலைமையில் இயங்கிய பூனைப்படைதான் ஜெயலலிதாவுக்கு அந்தக் காலகட்டத்தில் பாதுகாப்புக் கொடுத்தது. திவாகரனைத் தொடர்ந்து தினகரனும் கார்டனுக்குள் அடியெடுத்து வைத்தார். ஜெயலலிதா செல்லும் பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் மெல்ல தினகரனின் தலையும் தென்பட ஆரம்பித்தது. அதன்பிறகு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பார்வையிடுவது, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது என்று தினகரனும் பரபரப்பானார். 1991-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ஒட்டுமொத்தமாக மன்னார்குடி குடும்பத்தின் செல்வாக்கு கட்சியிலும் ஆட்சியிலும் கொடிகட்டிப் பறந்தது. அதில், தினகரனின் செல்வாக்கும் உயர்ந்தது. ஜெயலலிதா-சசிகலாவின் வெளிநாட்டு முதலீடுகள், நிறுவனங்கள் தொடங்கும் வேலைகள், வெளிநாடுகளில் இருந்து ஜெயலலிதா கணக்குக்கு வந்த பணம் மற்றும் பரிசுப்பொருள்கள் என்று ஜெயலலிதாவின் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை மேலாளராகவே தினகரன் திகழ்ந்தார். 

குறிப்பாக, ஜெயலலிதாவின் வங்கிக் கணக்கில் அமெரிக்க டாலர்கள் வரவு வைக்கப்பட்டது, லண்டனில் ‘காப்ஸ் கிராப்ட்’ என்ற ஹோட்டலை வாங்கியது, சசிகலா பங்குதாரராக இருந்த ‘பரணி பீச் ரிசாட்ஸ்’ நிறுவனத்தில் அமெரிக்க டாலர்கள் வரவு வைக்கப்பட்டது, ஜெ.ஜெ.தொலைக்காட்சிக்கு அப்லோடிங் கருவிகளை வெளிநாட்டில் இருந்து வரவழைத்தது என்று அனைத்திலும் தினகரனின் தலையீடு இருந்தது. 1995-ம் ஆண்டு இறுதியில், இந்த விவகாரங்களில் உள்ள வில்லங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை ‘பெரா’ வழக்குகளாக தினகரனை வளைத்தன. 1996-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஜெயலலிதா, சசிகலா மீது தொடரப்பட்ட மிக முக்கியமான வழக்கு சொத்துக்குவிப்பு வழக்கு. அதில், தினகரன் பெயரில் லண்டனில் வாங்கப்பட்ட ‘காப்ஸ் கிராப்ட்’ ஹோட்டலும் சேர்க்கப்பட்டது. ஆனால், அதையும் சேர்த்து அந்த வழக்கை விசாரித்தால், இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் அந்த வழக்கை முடிக்க முடியாது என்பதை தி.மு.க உணர்ந்தது. இதையடுத்து, லண்டன் ஹோட்டல் விவகாரத்தை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து பிரித்தது. அதனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தினகரனின் தலை தப்பியது. 

ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்ற தினகரன்!

1996 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதாவும் தோல்வி அடைந்தார். வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க வென்றது. அந்த மாபெரும் தோல்விக்குக் காரணம், சசிகலாவின் குடும்பமும், அவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் செய்த தலையீடுகளும்தான் என கடுமையான விமர்சனம் எழுந்தது. இதையடுத்து ஜெயலலிதா சசிகலாவின் குடும்பத்தில் பலரை ஒதுக்கி வைத்தார். நடராசன், சுதாகரன், பாஸ்கரன் உள்ளிட்டவர்கள் ஓரம்கட்டப்பட்டனர். ஆனால், ஜெயலலிதாவின் கோபப் பார்வைக்குள் தினகரன் அப்போது சிக்கவில்லை. அதனால், 1999-ம் ஆண்டு  நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தினகரனுக்கு ஜெயலலிதா வழங்கினார்.

பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் போய் தினகரன் போட்டியிட்டார். அப்போது, ஜெயலலிதாவே பெரியகுளத்துக்கு நேரில் சென்று தினகரனை மேடையில் வைத்து அறிமுகப்படுத்தினார். “நான் இங்கு போட்டியிடுவதாகக் கருதி தினகரனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கட்சிக்காரர்களுக்கு  கட்டளையிட்டார். அந்தத் தேர்தலில் தினகரனுக்காக தேர்தல் வேலை பார்க்க வந்தவர்தான் ஓ.பன்னீர் செல்வம். அப்போது தினகரனின் நம்பிக்கையைப் பெற்ற பன்னீர் செல்வத்துக்கு, அடுத்து எம்.எல்.ஏ சீட்டும், அமைச்சர் பதவியும், முதல்முறை முதல் அமைச்சராகும் வாய்ப்பும் கிடைப்பதற்கு தினகரன் மிக முக்கியமான காரணம். 1999 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற தினகரனுக்கு தொகுதிக்குள் ஒரளவுக்கு நல்லபெயரே கிடைத்தது. அந்தத் தொகுதியில் இருக்கும் கட்சிக்காரர்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை வாங்குவது, தொகுதிக்குள் நடக்கும் கோயில் விழாக்கள், சமய நிகழ்ச்சிகளுக்கு நன்கொடை வழங்குவது, மாணவர்களுக்கு உதவிகள் செய்வது என்று வலம் வந்தார். அதனால், 2004 நாடாளுமன்றத் தேர்தலிலும் தினகரனுக்கே பெரியகுளம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை ஜெயலலிதா வழங்கினார். ஆனால், அப்போது அந்தத்தொகுதியில் தி.மு.க கூட்டணியில் இருந்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆருண் வெற்றி பெற்றார். தினகரன் 21 ஆயிரத்து 155 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆனாலும், அதன்பிறகும் ஜெயலலிதா தினகரனைக் கைவிடவில்லை. ராஜ்யசபா எம்.பி. பதவியைக் கொடுத்து டெல்லிக்கு அனுப்பி வைத்தார். 

2011-ல் ஓரம்கட்டப்பட்ட தினகரன்!

2011-ல் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. அதேநேரத்தில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கும் வேகமெடுத்துக் கொண்டிருந்தது. தீர்ப்பின் முடிவு பாதகமாக வந்தால், கட்சியையும் ஆட்சியையும் யார் கட்டுப்படுத்துவது? என்று மன்னார்குடி குடும்பம் மொத்தமாக ஆலோசனையில் இறங்கியது. தஞ்சாவூரிலும் இந்த ஆலோசனை நடந்தது. பெங்களூருவிலும் அந்த ஆலோசனை தொடர்ந்தது. இதை மோப்பம் பிடித்த உளவுத்துறை ஜெயலலிதாவுக்கு ‘ரிப்போர்ட்’ அனுப்பியது. மன்னார்குடி குடும்பத்தின் நம்பிக்கைத் துரோகத்தால் கொதித்துப்போன ஜெயலலிதா… வெறுத்துப்போய் சசிகலா உள்பட அனைவரையும் கார்டனை விட்டுத் துரத்தினார். கட்சியை விட்டு நீக்கினார். ‘மன்னார்குடி குடும்பத்தோடு அ.தி.மு.க-வினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது’ என்று அறிக்கைவிட்டு எச்சரித்தார். ஜெயலலிதாவின் அந்த ஆவேசத்தில் தினகரனும் அடித்துச் செல்லப்பட்டார். அதன்பிறகு, 2017-வரை தினகரன் எங்கிருந்தார்… என்ன செய்து கொண்டிருந்தார்… என்ற சுவடே பதிவாகாமல் போனது. ஜெயலலிதாவின் உயிர் அவர் உடலைவிட்டுப் பிரியும்வரை அந்த நிலையே தொடர்ந்தது.

அப்போலோவில் ஐக்கியம்!

2016 செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் சிகிச்சைக்காக அப்போலோ ‘அட்மிட்’ ஆனார். அந்தச் சாக்கில் சிதறியிருந்த மன்னார்குடி குடும்பம் மீண்டும் ஐக்கியமானது. நடராசன் தவிர்த்து தினகரன், திவாகரன், பாஸ்கரன், சுதாகரன், மஹாதேவன் தலைகள் அப்போலோ மருத்துவமனை வளாகத்துக்குள்ளும், வேதா நிலையம் இருக்கும் போயஸ் கார்டன் தெருவுக்குள்ளும் தென்பட ஆரம்பித்தன. அப்போலோ மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை நடந்தது. மூன்றாவது தளத்தில் மன்னார்குடி குடும்பத்தின் ஐக்கியம் நிகழ்ந்தது. டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். டிசம்பர் 6-ம் தேதி அவருடைய உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்தது. அவர் உடலைச் சுற்றி அ.தி.மு.க அமைச்சர்களோ… எம்.எல்.ஏ-க்களோ நிற்கவில்லை. சசிகலா, திவாகரன், மகாதேவன், டாக்டர் சிவக்குமார், இளவரசி, பிரியா, நடராசன், பாஸ்கரன், தினகரன் ஆக்கிரமித்து இருந்தனர். ஆனால், அந்தக்கூட்டத்தில்கூட தினகரன் பிரதானமாக நிற்கவில்லை. ஆனால், அதன்பிறகு என்ன நடந்தது… எப்படி நடந்தது என்பது தெரியவில்லை; கட்சிக்காரர்களுக்கும் புரியவில்லை. நடராசன், திவாகரன், மகாதேவன் எல்லாம் சத்தமில்லாமல் ஒதுங்கி இருந்தனர். தினகரனும், டாக்டர் வெங்கடேஷ் மட்டும் போயஸ் கார்டனில் சசிகலாவின் நிழலாக வலம் வர ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில் சசிகலாவையே இவர்கள் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வந்தனர். 

சசிகலாவை கட்டுப்படுத்திய தினகரன்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஊருக்குப் போகும் யோசனையில் இருந்த சசிகலாவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை திவாகரன் வாங்கிக் கொடுத்தார். ஆனால், அவருக்கு முதல் அமைச்சராகும் ஆசையைக் கொடுத்தது தினகரன்தான் என்கின்றனர் அ.தி.மு.க பின்னணி அறிந்தவர்கள். தஞ்சாவூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நடராசன், “பன்னீர் செல்வம் தலைமையில் நல்லாட்சிதான் நடக்கிறது; அதனால், முதலமைச்சரை மாற்றத் தேவையில்லை” என்றுதான் குறிப்பிட்டார். ஆனால், தினகரனுக்கு அதில் உடன்பாடு இல்லை. “பன்னீர் செல்வம் தி.மு.க-வினரோடு நெருக்கமான உறவு வைத்துள்ளார். அவர் தலைமையில் ஆட்சி நடப்பது கட்சிக்கும் நல்லதல்ல… நமது குடும்பத்துக்கும் நல்லதல்ல…” என்று எதையோ சொல்லி சசிகலாவை மாற்றினார்கள். திடீரென ஒருநாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்தையும், மற்ற அமைச்சர்களையும் போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைத்தனர். பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்யச் சொல்லி நிர்பந்தம் கொடுத்தனர். பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். சசிகலா சட்டமன்ற ஆளும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

அ.தி.மு.க துணைப்பொதுச் செயலாளர் தினகரன்!

பன்னீர் செல்வம் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டதை அடுத்து, அவர் ஜெயலலிதா சமாதியில் தியானம் இருந்துவிட்டு, அ.தி.மு.க-வை இரண்டாக உடைத்தார். அதேநேரத்தில் சசிகலா முதல் அமைச்சர் நாற்காலியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கவர்னரிடம் முறையிட்டார். அப்போது சசிகலாவோடு கவர்னரைச் சந்திக்கச் சென்றது தினகரன்தான். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டுத்  தீர்ப்பு சசிகலாவின் கனவைக் கலைத்தது. அந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள்தான் என்று வெளியான தீர்ப்பு, சசிகலாவை பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அனுப்பியது. ஆனாலும் அசரவில்லை தினகரன். சசிகலா சிறைக்குப் போகும் முன், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை கேட்டு வாங்கினார். சசிகலாவும் தினகரனை அந்தப் பதவியில் நியமித்துவிட்டுப் போனார். “ஜெயலிதா உயிரோடு இல்லை; சசிகலா சிறைக்குச் சென்றுவிட்டார்; குடும்ப உறவுகளை ஒதுக்கிவிட்டோம்” என்று நினைத்த தினகரனின் அரசியல் ஆட்டம் ‘டாப் கியரி’ல் வேகமெடுத்தது. அவர் கையில் துணைப் பொதுச் செயலாளர் பதவியும் இருந்ததால், கட்சியிலும் பெரிதாக எதிர்ப்புகள் கிளம்பவில்லை. அதன் தொடர்ச்சியாக ஆட்சியைக் கைப்பற்ற நினைத்த தினகரன் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். ஒரு காலத்தில் தினகரனால் எம்.எல்.ஏ சீட் வாங்கி, அமைச்சர் பதவியை வாங்கி, முதல்முறை முதலமைச்சராகும் வாய்ப்பையும் பெற்ற பன்னீர் செல்வம் தினகரனை எதிர்த்து மதுசூதனனைக் களமிறக்கினார். கட்சி இரண்டாகப் பிளவுபட்டு நிற்பதால், இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. தினகரனுக்கு சின்னமாக தொப்பி கிடைத்தது. மதுசூதனனுக்கு இரட்டை மின்கம்பம் கிடைத்தது. தேர்தல் சூடு தொடங்கியது. ஆரம்பத்தில் ஆர்.கே.நகரில் தினகரனுக்கு ஆதரவே இல்லை. ஆனால், கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஆனால், தேர்தல் தேதி நெருங்க. நெருங்க நிலைமை மாறியது. தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை விநியோகம் செய்யப்பட்டது. தினகரனுக்கு இருந்த கடுமையான எதிர்ப்பு, கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவாக மாறுவதுபோல் தோன்றியது. அவர் வெற்றி பெற்றுவிடுவார் என்று பரவலாகக் கணிக்கப்பட்டது. உளவுத்துறையும் அதையே அறிக்கையாக டெல்லிக்கு அனுப்பியது. 

விறுவிறுப்பான சறுக்கல்கள்!

இரட்டை இலையைப் பறிகொடுத்ததில் தினகரனுக்கான சறுக்கல் தொடங்கியது. ஆர்.கே.நகர் தேர்தல் களேபரங்களில் தினகரனின் சறுக்கல்கள் வேகமெடுத்தன. தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன், தினகரனின் ஆதரவாளரான அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமானவரித்துறை நுழைந்தது. சிட்லபாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார் வீடுகளிலும் ஐ.டி.துறையில் அதிரடி ரெய்டு நடந்தது. அந்த ரெய்டுகளில் ஆர்.கே.நகர் வாக்களார்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின. இதையடுத்து தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்தது. தினகரனின் திட்டம் தகர்ந்தது. ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற அவரது எண்ணம் தள்ளிப்போனது. தேர்தல் ரத்து செய்யப்பட்ட  நேரத்தில் மற்றொரு அடியும் தினகரன் தலையில் விழுந்தது. தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டை இலைச் சின்னத்தை மீண்டும் பெறுவதற்காக தினகரன் லஞ்சம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டை டெல்லி போலீஸ் கிளப்பியது. அந்த வழக்கில் சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டார். “இரட்டை இலையை மீட்பதற்காக தினகரன் 60 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கத் தயாராக இருந்தார். அட்வான்ஸ் தொகையாக ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்” என்று சொன்னதாக டெல்லி போலீஸ் சொன்னது.  

சிறைக்கு அனுப்பிய சின்னம்!

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தானபோதே, அ.தி.மு.க-வில் இருந்த அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக அணி திரளத் தொடங்கிவிட்டனர். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்ததும், “தினகரனை கட்சியில் இருந்தும் ஆட்சி அதிகாரங்களில் தலையீடுவதில் இருந்தும் முற்றிலும் ஒதுக்கி வைப்பதாக” அ.தி.மு.க-வின் மூத்த அமைச்சர்கள் அறிவித்தனர். அந்த நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த தினகரன், “நான் நேற்றே ஒதுங்கிவிட்டேன்” என்று சொல்லி சரண்டர் ஆனார். அதோடு தினகரனின் அரசியல் அத்தியாயம் முடிந்தது. ஆனாலும், அவருக்கு ஆதரவாகச் சிலர் கட்சியிலும் ஆட்சியிலும் பேசிக் கொண்டுதான் இருந்தனர். சாதாரணமாக இப்படி ஒதுங்கக்கூடியவர் இல்லை தினகரன் என பன்னீர் அணியும் சந்தேகத்தோடுதான் இருந்தது. ஆனால், இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், டெல்லி போலீஸ் நடத்திய விசாரணைக்கு சென்றார் தினகரன். 4 நாட்கள் 37 மணி நேரம் நடந்த விசாரணையின் இறுதியில், தினகரன் குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்று சொல்லி டெல்லி போலீஸ் அவரைக் கைது செய்தது. இன்று(26-ம் தேதி) தினகரனையும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் ‘தீஸ் ஹசாரி’ நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் ஆஜர்படுத்த உள்ளது. அதன்பிறகு தினகரன் திஹார் சிறைக்கு அனுப்பப்படுவார். சில நாட்கள் கழித்து அவர் ஜாமீனில் வெளிவரலாம். ஆனால், அவருடைய அரசியல் கனவுகள் என்பது சமாதிகளின் பூமியில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. மீண்டும் அவர் அரசியல் செய்ய நினைத்தாலும் அது எதிர்காலமற்ற செத்துப்போன அரசியலாகத்தான் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

%d bloggers like this: