மும்மூர்த்திகளின் ‘க்ளீன் தமிழ்நாடு’ ஆபரேஷன்! சிக்கலில் அமைச்சர்கள்

குழம்பிய குட்டையில்தான் மீன் பிடிக்கமுடியும் என்பது மற்றவிஷயங்களுக்கு எப்படியோ இன்றைய தமிழக அரசியல் நிலவரத்துக்கு கனக் கச்சிதமாக பொருந்துகிறது.

முடக்கப்பட்ட கட்சிச் சின்னத்தை மீட்க தேர்தல் கமிஷனிடம் ஐம்பதுகோடி ரூபாய் பேரம் பேசிய வழக்கில் 3 நாள் விசாரணைக்குப்பின் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார் அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன். உறுதியான ஆதாரங்கள் கிடைத்ததன் அடிப்படையில் தினகரன் கைது செய்யப்பட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பின் கட்சியின் பொதுச்செயலாளரானார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைசெல்ல நேர்ந்ததால் தன் அக்கா மகன் தினகரனை அவருக்கு அடுத்த இடத்தில் துணைப் பொதுச்செயலாளராக்கிச் சென்றார். ஓ.பி.எஸ்ஸின் தனி ஆவர்த்தனத்திற்கிடையே இவ்வளவும் நடந்தது. அதிமுக தனது இரட்டை இலைச் சின்னத்தை இழக்கவேண்டியதுமானது.
அதிமுக என்ற யானையின் காதில் புகுந்த கட்டெறும்பு போல் ஓ.பி.எஸ் அணி கொடுத்த இந்த அதிர்ச்சி தினகரனுக்கு ஈகோ பிரச்னையானது. கட்சியில் ஒரு தத்தளிப்பான சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில் தனது சாகசத்தால் இரட்டை இலையை மீட்டு கட்சியினர் மத்தியில் கதாநாயகனாக கனவு கண்ட தினகரனை டெல்லி போலீஸ் இரண்டு செட் உடை, ஒரு வாட்டர் பாட்டிலுடன் சிறைக்கு அனுப்பிவைத்திருக்கிறது இப்போது.
கதாநாயகனாகவேண்டியவரை கைதியாக்கிய டெல்லி இத்துடன் தனது ஆட்டத்தை நிறுத்திக்கொள்ளாது என்கிறார்கள். டி.டி.வி தினகரனை ஜெயிலுக்கு அனுப்பியதன்மூலம் அதிமுக இணைப்புக்கு நல்ல சமிக்ஞை கொடுத்திருப்பதாக ஓ.பி.எஸ் அணி கருதினாலும் இனிமேல்தான் மத்திய அரசு, அடுத்தடுத்து பல பரபரப்பான ஆட்டத்தை துவங்க உள்ளதாக சொல்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

மோடி

இதுபற்றி நம்மிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத பாஜக பிரமுகர் ஒருவர், “மத்திய அரசுக்கு தமிழக அரசுக்கு தொல்லை தருவது நோக்கமில்லை. கடந்த ஒரு சில வருடங்களாக தமிழகம் குறித்து அவருக்கு வந்த தகவல்கள் ரசிக்கக்கூடியதாக இல்லை. குறிப்பாக வேறு எந்த மாநிலத்தைவிடவும் தமிழகத்தில் அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் கைகோத்துக்கொண்டு செய்துவரும் அதிகார துஷ்பிரயோகங்கள் அவர் காதுக்கு வந்தபோது எரிச்சலானார். இதன் உச்சகட்டமாகத்தான் ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பின் அன்றைய தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் அலுவலகத்திலேயே ரெய்டு நடத்தும் அளவுக்குப் போனது. ரெய்டின்போது ‘ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்குமா?’ என அவர் கொந்தளித்தார். 

உண்மையில் ஜெயலலிதா காலத்திலேயே அமைச்சர்கள்  மற்றும் அதிகாரிகளை மத்திய அரசு கண்காணிக்கத் துவங்கிவிட்டது. கடந்த 2016 செப்டம்பரில் நத்தம் விஸ்வநாதன், மேயர் சைதை துரைசாமி மற்றும் சில அதிமுக புள்ளிகளுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களிலும் அப்போதே வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது.
ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பின், மரணம் தொடர்பான சர்ச்சைகளும் டெல்லித் தலைமைக்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது. இறுதி அஞ்சலியின்போதே இதை சசிகலா தரப்பிடம் வெங்கய்ய நாயுடு மூலம் மறைமுகமாக தெரிவித்த டெல்லித்தலைமை, “ஜெயலலிதாவின் காரியத்துக்குள் கட்சி மற்றும் ஆட்சியிலிருந்து முற்றாக உங்கள் குடும்பத்தின் தலையீட்டை நிறுத்திக்கொண்டு கட்சிக்கு உரிய தலைமையை அமர்த்திவிட்டு விலகிவிடவேண்டும்” என எச்சரிக்கையாகவே தெரிவித்தது. ஆனால் இதை பொருட்படுத்தாமல் அடுத்தடுத்து ஆட்சி மற்றும் கட்சியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சிகளில் சசிகலா இறங்கியதை டெல்லி மேலிடம்  ரசிக்கவில்லை.

ஓ.பன்னீரசெல்வம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அடைந்தபிறகும் தனது இடத்தில் தினகரனை அமர்த்தியது இன்னும் கோபத்தை தந்தது. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களை தலைமையாகக் கொண்ட ஒரு கட்சி ஆளும் அதிகாரத்தில் இருப்பதை விரும்பாத டெல்லி மேலிடம் இதன்பிறகுதான் அதிமுக மீது இன்னமும் கூடுதலான கவனம் எடுத்தது. தமிழக அமைச்சர்கள் பற்றிய ஒரு விரிவான அறிக்கையை ரகசியமாக கேட்டுப்பெற்றது.

தனக்கு நெருக்கமான தமிழக பத்திரிகையாளர் மூலமும் தமிழக நிலவரங்களைக் கேட்டுப்பெற்றது. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நடந்த அத்துமீறலால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்ட கையோடு அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில பிரமுகர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தி அதிர்ச்சி கொடுத்தது.
ஊழல் பிரமுகர்களை வெளியேற்றி கட்சியை க்ளீன் செய்ய நினைத்த மத்திய அரசுக்கு ஒருசில அமைச்சர்கள் ஒத்துவராத அதேசமயம், தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி மத்திய அரசுக்கு சங்கடத்தை தந்ததன் பின்னணியில் தினகரன் இருப்பதாக மத்திய அரசுக்கு ஒரு அறிக்கை சென்றது. இதுவே  அவர் விவசாயிகளை சந்திக்க மறுக்கக் காரணம்.  இந்த நேரத்தில் கட்சி சின்னம் தொடர்பாக பேசப்பட்ட பேரம் வெளியாகி, பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் தினகரன் சிறை செல்லும் நிலை உருவானது. இதன்மூலம் கடந்த 4 மாதங்களாக டெல்லித் தலைமை நடத்திய நாடகம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துவிட்டது. டெல்லித் தலைமை நினைத்ததுபோலவே இனி அதிமுகவில் சசிகலா மற்றும் தினகரன் ஆகிய இருவரது ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது.” என்றார்.
“தமிழகத்தின் மீதான நிஜமான அக்கறையில் மோடி சில சட்டத்துக்குட்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு உள்நோக்கம் கற்பிக்கத்தேவையில்லை. கடந்த தமிழக பட்ஜெட்டில் மூன்றில் 2 பங்கு இலவசங்களுக்கு செலவிடப்பட்டது. இலவசங்களை வெறுக்கும் மோடி மக்களின் பணத்தை இப்படி தமிழக அரசு தேவையின்றி செலவிடுவதை விரும்பவில்லை. ஜெயலலிதாவிடமே சிலமுறை இதை விமர்சித்திருக்கிறார். ‘திராவிட இயக்கத்தினரின் இந்த இலவசங்களால் நிதி தேவையின்றி செலவு செய்யப்பட்டதுதான் விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட அவசியமான பிரச்னைகள் தீராததற்கு காரணம்’ என்ற எண்ணம் மோடிக்கு வலுவாக உண்டு. திமுக, அதிமுக என்றில்லாமல்  பொதுவாக தமிழக கட்சிகளின் இந்த ‘இலவச ‘மனநிலை மோடிக்கு பிடிக்கவில்லை.

மோடி

இதனால் தமிழகத்தில் தெளிவான உறுதியான ஒரு தலைமை ஆளும்கட்சிக்கு வேண்டும் என அவர் நினைக்கிறார். ஜெயலலிதா காலத்துக்குப்பின் அப்படி ஓர் தலைமையைத்தான் அவர் எதிர்பார்த்தார். ஆனால் சசிகலா  அதிகாரத்துக்கு வர விரும்பியது அவருக்கு அதிர்ச்சி தந்தது. கட்சி எல்லையைத்தாண்டி ஜெயலிதாவுக்கும் மோடிக்கும் எல்லா காலத்திலும் ஓர் நல்ல நட்பு உண்டு. அந்த நம்பிக்கையில் கடந்தகாலத்தில் அவர் சசிகலா பற்றி பகிர்ந்துகொண்ட சில விஷயங்களால் ஊழல் புகாரில் சிக்கிய ஒருவர் மீண்டும் அதிமுகவுக்கு தலைமையேற்பதை விரும்பவில்லை. இதனாலேயே ‘ஆபரேஷன் க்ளீன் தமிழ்நாடு’ வை கையிலெடுத்தார் என்கிறார்கள். இதற்காக மத்திய மந்திரிகள்  அருண் ஜெட்லி, வெங்கய்ய நாயுடு மற்றும் தமிழக பத்திரிகையாளர் ஒருவர் என 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள்தான் ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்தவர்கள்.
சொத்துக்குவிப்பு வழக்கு முதல் நேற்று தினகரன் கைது வரை எந்த ஓர் இடத்தில் கவனக்குறைவாக இருந்தாலும் தங்கள் பணபலத்தால் அதிகாரத்துக்கு மீண்டும் வந்து ஊழலை அரங்கேற்றுவார்கள் என்பதால் சசிதரப்பு சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிவிடாதவாறு இந்த குழு பார்த்துக்கொண்டது. 

ஜெட்லிக்கும் சுப்ரமணியன்சுவாமிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் என்பதால் குழுவில் உள்ள ஜெட்லியின் முயற்சியை முறியடித்து அவரை வெறுப்பேற்றும் விதமாகவே சசிதரப்புக்கு ஆதரவாக சில நடவடிக்கைகளை சுவாமி எடுத்தார். இதன்பிறகே தினகரன் தரப்புடன் அவர் நெருக்கமானார். கடந்த வாரம் திடீர்ப் பயணமாக தமிழகம் வந்த சுவாமி, முக்கிய மடாதிபதிகளை சந்தித்துப் பேசினார். மூத்தவரை தவிர்த்து டெல்லி அரசியலை நன்கு அறிந்த இளைய மாடாதிபதியுடன் அதிக நேரம் செலவிட்ட அவர், தினகரனின் கைதை தவிர்க்கவே அவர்கள் மூலம் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதனிடையே ஓ.பி.எஸ் உடன் இணைந்து செயல்பட மூத்தஅமைச்சர் ஒருவரின் கருத்துக்கு மற்ற அமைச்சர்கள் மற்றும் சில எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர்கள் அனைவருக்கும் கடந்த 18-ம் தேதி சென்னையில் இருந்த  ஐ.என்.எஸ் போர்க் கப்பலை காண வருமாறு ரகசிய உத்தரவு ஒன்று வந்தது. அதன்படி, தரைதளத்தில் அமைச்சர்களுடன் மத்திய அரசுப் பிரதிநிதியாக ஒருவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக சொல்கிறார்கள். ‘கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு ஒத்துழைக்கவேண்டுமென’ கறார் குரல் வெளிப்பட்டதாம் அப்போது. தொடர்ந்து மேல்தளத்தில் எம்.எல்.ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடந்ததாம். இதைத்தொடர்ந்தே அமைச்சர்கள் தரப்பு ஓ.பி.எஸ் அணிக்கு இணைப்பு குறித்த சமிக்ஞையை அனுப்பியதோடு மறுதினம் தினகரனை ஒதுக்கிவைப்பதாக ஓ.பி.எஸ் அணிக்கு சாதகமான கருத்துகளை சொல்ல ஆரம்பித்தார்கள்.
ஆனாலும் ஓ.பி.எஸ் அணியினரின் பிடிவாதமான நிபந்தனைகள்தான் இப்போது இரு அணிகளும் இணைவதில் முட்டுக்கட்டையாக உள்ளன. இருப்பினும் சீக்கிரத்தில் இது நடக்கவேண்டும் என்பதில் மேலிடம் உறுதியாக இருப்பதால் ஆபரேஷன் க்ளீன் தமிழ்நாட்டை முடிக்க அவசரம் காட்டிவருகிறார்கள் மும்மூர்த்திகள் குழு” என்று முடித்தார் பா.ஜ.க பிரமுகர்.
ஹைலைட் என்னவென்றால் அதிமுக இணைவதோடு ‘ஆபரேஷன் க்ளீன் தமிழ்நாடு’ முடியப்போவதில்லையாம். இரு அணிகளிலும் சில ‘முன்னாள்கள்’ இன்றுவரை 24 மணிநேரமும் மத்திய அரசின் கண்காணிப்பில் இருக்கிறார்களாம். அதிமுக ஒன்றிணைந்தபின் அவர்களுக்கு சிக்கல் வரும் என்கிறார்கள். அதற்குப்பிறகு மத்திய அரசு திமுக பக்கம் தன் பார்வையை திருப்பும் என கிலி கொடுக்கிறார்கள் மோடியின் எண்ண ஓட்டத்தை நன்கறிந்தவர்கள்.

%d bloggers like this: