எல்லாமே அழகருக்காக!

துரை சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தம் என்பது நாமறிந்ததே! மீனாட்சியம்மையின் திருக்கல்யாணத்தைக் காணவும், ஆற்றில் இறங்கும் அழகரைத் தரிசிக்கவும் கூடும் பிரமாண்ட கூட்டம் நம்மை மலைக்கவைக்கும் எனில், விழாவையொட்டி பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் செய்யும் நேர்த்திக்கடன்களும், பிரார்த்தனைகளும் மெய்சிலிர்க்கவைக்கும். தொன்றுதொட்டு நம் மக்கள் கடைப்பிடித்து வரும் இந்தப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும், கிராமிய மணம் கமழும் நமது கலாசாரத்தின் சாட்சியாகத் திகழ்கின்றன. அவற்றில் சில உங்களுக்காக…

அழகருக்கு முடிக்காணிக்கை!
சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் மக்களை நேரில் சந்தித்து வரம் அருள்வதாக ஐதீகம். அப்படி பக்தர்களைத் தேடிவரும் கள்ளழகருக்கு நேர்த்திக்கடனாக, அவர் ஆற்றில் இறங்கும்போது குழந்தைகளுக்கு மொட்டை போட்டு முடிக்காணிக்கை செலுத்துவார்கள். ‘முதல் மொட்டை குல தெய்வத்துக்கு’ என்றொரு மரபு இருந்தாலும், அழகர் ஆற்றில் இறங்கும் தினத்தன்று வைகையின் கரையில், தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு முடிக்காணிக்கை செலுத்துவதைப் பக்தி சிரத்தையோடு கடைப்பிடிக்கிறார்கள், இப்பகுதி மக்கள்.
தண்ணீர் பீய்ச்சி அடித்தல்!
கள்ளழகர் மதுரைக்கு வரும்போது மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவையில் தொடங்கி, மீண்டும் அவர் மலைக்குச் சென்றடையும் வரை, பக்தர்கள் கள்ளழகர் வேடம் பூண்டு `தண்ணீர் பீய்ச்சி அடிக்கும்’ நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்.
இந்த நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், கள்ளழகர் சித்திரைத் திருவிழாவுக்காக முகூர்த்தக்கால் ஊன்றிய நாளில் மாலை அணிந்து விரதம் இருக்கத் தொடங்குவர். விழாவின்போது, தோல் பையில் தண்ணீரைச் சேகரித்து வந்து, துருத்தியின் மூலம் கள்ளழகர் மீதும், பக்தர்கள் மீதும் பீய்ச்சி அடிப்பார்கள். ராமராயர் மண்டபத்தில் அழகர் எழுந்தருளும்போது இந்த வைபவம் இன்னும் விசேஷமாக இருக்கும். இத்திருவிழா கோடைக் காலத்தில் நடைபெறுவதால் வெப்பத்தைக் குளிர்விக்கும் வகையில் இந்த நேர்த்திக்கடன் தொடங்கியதாக ஐதீகம். அதேபோல், ராமராயர் மண்டபத்தில் வேண்டுதலின் பொருட்டு, பெண்கள் அங்கப்பிரதட்சணம் செய்வதும் உண்டு.

திரிசுற்றி ஆடுதல்!
கள்ளழகர் திருவிழாவில் பெரிய பெரிய ராட்சதத் திரிகளைச் சுமந்துகொண்டு ஆடிவரும் நேர்த்திக்கடனும் உண்டு. மின்சார வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், மக்களுக்கு வெளிச்சத்தை வழங்குவதற்காக இந்த நேர்த்திக்கடன் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
சர்க்கரை ஆரத்தி!
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும்போது, மக்கள் குடத்தில் சர்க்கரை நிரப்பி, அதன் மீது கற்பூரம் ஏற்றிவைத்து ஆரத்தி எடுத்து வழிபடுவார்கள். பின்னர், அந்தச் சர்க்கரையைப் பிரசாதமாகப் பக்தர்களுக்கு வழங்குவர். இதனால் வருங்காலம் இனிப்பாக அமையும் என்பது நம்பிக்கை.
கள்ளழகர் வர்ணனை!
கள்ளழகர் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்தில் தொடங்கி, மீண்டும் அழகர் மலையில் எழுந்தருளும் வரை திருவிழா நிகழ்ச்சிகளில் கள்ளழகரை வர்ணித்துப் பாடும் குழுவினர் உண்டு. இவர்களால் உருவாக்கப்பட்ட கள்ளழகர் வர்ணனையாளர் மண்டபம், அழகர்மலை செல்லும் வழியில் உள்ளது. எவ்வித பேதமுமின்றி இந்த வர்ணனையாளர் குழுவினர் வழி வழியாகப் பாடல்கள் பாடி வருகின்றனர். அந்தப் பாடல்களில் ஒன்று…

`இரண்டு செவிகளுக்கும் வயிரக் கடுக்கன்
இசையும்படி தானணிந்து
கைதனிலே பாசிபந்து கரியாமால் வண்ணன்
கணையாழி தானணிந்து
இடுப்பிலே ஒட்டியாணம் என் அய்யனுக்கு
இருபுறமும் பொன்சதங்கை
காப்புக் கொலுசுமிட்டார் கரியமாலுக்கு
காலில் பாடகமிட்டார்…’

– இதுபோல் நூற்றுக்கணக்கான பாடல்களைக் குழுவாக இணைந்து பாடுவதைத் திருவிழாவின்போது காணலாம்.


எதிர் சேவை ஏன் தெரியுமா?
‘‘அந்தக் காலத்தில் தேனூர் மண்டபத்தில் தங்கிதான் கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவார். அழகரின் திருமேனி ‘அபரஞ்சி’ என்றழைக்கப்படும் எளிதில் உருகும் தன்மையிலான தங்கத்தால் ஆனது. ஒருமுறை, தேனூர் மண்டபத்தில் நெற்கதிர்களால் பந்தல் அமைக்கப்பட்டு, அதன் கீழ் அழகர் தங்கவைக்கப்பட்டிருந்தார்.
அப்போது, நேர்த்திக்கடன் செலுத்த வந்த பக்தர் ஒருவர் வேகமாக திரிசுற்றியதில், பந்தலில் தீப்பொறி தெறித்து, பெரும் தீ விபத்து ஏற்பட்டது. எல்லோரும் அழகரை மறந்துவிட்டு, தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அங்குமிங்குமாக ஓடினார்கள். ஒரே களேபரம். அப்போது, மதுரை தெற்காவணி மூலவீதியில் அமைந்திருக்கும் வீரராகவப் பெருமாள் கோயிலின்  பட்டர் அமுதர் என்பவர் மட்டும், தன்னுயிரை துச்சமாக மதித்து நெருப்பில் குதித்து, அழகரை வாரியணைத்தபடி வெளியே எடுத்து வந்தார். அத்துடன், அழகரின் திருமேனி உருகாதவண்ணம் ஆற்றங்கரையில் ஈர மணலில் புதைத்து வைத்தார்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட பாண்டிய மன்னர் நேரில் வந்து அமுதரைப் பாராட்டினார். அத்துடன், ‘இனி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும்போது முதல் மரியாதை உமக்கு அளிக்கப்படும்’ என்றும் அமுதரிடம் தெரிவித்தார். அமுதரோ, ‘எனக்கு முதல் மரியாதை வேண்டாம். அழகர் வரும்போது, என் ஐயன் வீரராகவப் பெருமாள் அவரை எதிர்கொண்டு அழைக்க வேண்டும்’  எனக் கேட்டுக்கொண்டார். மன்னரும் அதை ஏற்றுக்கொண்டார்.
அதன்படியே இன்றைக்கும் அழகரை எதிர்கொண்டு அழைக்கிறார் வீரராகவப் பெருமாள். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நாளில், அதிகாலையில் வீரராகவப்  பெருமாள் பச்சைப்பட்டு உடுத்தி மேல மாசி வீதி மற்றும் வடக்கு மாசி வீதி வழியாக வைகையாற்றை வந்தடைவார். அவர், கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும்போது ‘வையாழி’  எனப்படும் பெருமாளைக் குலுக்கும் நிகழ்வு நடைபெறும். வீரராகவப் பெருமாள் கள்ளழகரை மூன்று முறை வலம் வருவார். பின்னர் இரண்டு பெருமாளுக்கும் ஒரே நேரத்தில் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்படும். அன்றைய தினம் வீரராகவப் பெருமாளின் பட்டருக்கு கள்ளழகரின் சடாரியை தாங்கும் உரிமை காலங்காலமாக வழங்கப்பட்டு வருகிறது.’’

%d bloggers like this: