சம்மர் கேம்ப் – பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் ஸ்மார்ட் டிப்ஸ்…

விளையாட்டு வகுப்பைக்கூட பாட ஆசிரியர்கள் அபகரித்துக்கொள்ள, வருடம் முழுக்கப் படித்துக் களைத்த குழந்தைகளுக்குக் கோடை விடுமுறை என்பது கொண்டாட்டம்தான்.
இரண்டு மாத விடுமுறையில் அவர்களை எப்படிச் சமாளிப்பது என்பது பெற்றோருக்குத் திண்டாட்டம்.

பிள்ளைகளின் சேட்டைகளில் இருந்து தப்பிக்க, பெற்றோர் தஞ்சமடைவது சம்மர் கேம்ப் என்கிற பெயரில் மூலைக்கு மூலை நடத்தப்படுகிற விதம் விதமான பயிற்சி வகுப்புகளில்!
உறவுகள் சூழ வாழ்ந்த அந்தக் காலங்களில் விடுமுறைகளில் சொந்தபந்தங்களின் வீடுகளுக்குப் போவதும், விளையாடிக் களிப்பதும் வழக்கமாக இருந்தது. இன்று அபார்ட்மென்ட் களுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள் குழந்தைகள். அந்தச் சிறையிலிருந்து அவர்களை விடுவிக்க, சம்மர் கேம்ப் பயிற்சிகள் கட்டாயம் தேவை. சம்மர் கேம்ப் பயிற்சிகளில் சேர்ப்பதற்கு முன் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி அலசுகிறார்கள் மருத்துவர்கள்.

ஸ்போர்ட்ஸ் மெடிசின் துறை நிபுணர் கே.ஏ.தியாகராஜன்
பொதுவாகவே விளையாட்டு என்பது விளையாடுபவருக்குப் புத்துணர்ச்சி, தேக ஆரோக்கியம், சீரான ரத்த ஓட்டம் போன்ற பாசிட்டிவ் மாற்றங்களைக் கொடுக்கக்கூடியது. விளையாடுவதால் எந்தவித நெகட்டிவ் மாற்றங்களும் ஏற்படுவதில்லை.

கோடை விடுமுறையில் பிள்ளைகளை விளையாட்டுப் பயிற்சி வகுப்புகளில் சேர்க்கும்போது, அவர்களின் ஆர்வங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.  அப்படி ஈடுபடுத்துவதன் மூலம்  அவையே பின்னாளில் அவர்களுக்கு வாழ்நாள் விருப்பமாக மாறும் வாய்ப்புகள் உண்டு.
விளையாட்டு என்பது உடலுக்கு மட்டும் உறுதியைத் தருவதில்லை; மனரீதியாகவும் குழந்தைகளிடம் நிறைய பாசிட்டிவான மாற்றங்களை ஏற்படுத்தும். அனைவரிடமும் சகஜமாகப் பேசிப் பழகுவது, வெற்றி தோல்விகளைச் சமமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், தன்னம்பிக்கை போன்ற நல்ல குணங்களை உருவாக்கும்.
ஒரே ஒரு விளையாட்டில் தொடர்ச்சியாக ஈடுபடுத்துவதைவிட, இரண்டு, மூன்று விளையாட்டுகளில் சேர்த்தால், எந்த விளையாட்டில் குழந்தையின் ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்பதை அறிந்து, அதில் அடுத்தகட்ட பயிற்சி தரமுடியும். மேலும், விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் மோகம் குறையும்.
எந்த ஒரு விளையாட்டிலோ, பயிற்சியிலோ சேர்க்கும் முன் அந்த விளையாட்டுக்கு உங்களின் குழந்தைகள் உடலளவிலும், மனதளவிலும் தகுதியாக உள்ளனரா என்று மருத்துவரிடம் ஒரு ஜெனரல் செக்கப் செய்துகொள்வது மிகவும் அவசியம். மிகவும் அதிக எனர்ஜி தேவைப்படும் விளையாட்டுகளான கிரிக்கெட், ஸ்கேட்டிங் போன்றவற்றில் பயிற்சி மேற்கொள்ளும் முன்பு ஒரு ஸ்போர்ட்ஸ் தெரபிஸ்ட் அல்லது  எலும்பு மருத்துவர் மற்றும் பிசியோதரபி நிபுணரிடம் ஆலோசனைகள் பெறலாம். 

விடுமுறைதானே என நாள் முழுவதும் பயிற்சியில் ஈடுபடுத்துவதும் தவறு. அது பிள்ளைகளை விளையாட்டு அடிமைகளாக மாற்றிவிடும்.  குறிப்பிட்ட அந்த விளையாட்டைக் குழந்தைகள் ரசிக்கத் தொடங்கும்போது அதை அவர்களே அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்வார்கள். அதேபோல அவர்களுக்குக் கொஞ்சமும் விருப்பமில்லாத விளையாட்டில் வற்புறுத்தி ஈடுபடுத்துவதையும் பெற்றோர் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் சிறப்பு மருத்துவர் சந்திரசேகர்
கோடைக்காலப் பயிற்சிகளில் குழந்தைகளைச் சேர்க்கும்போது, ஓவியம் மற்றும் கைவினை வேலைப்பாட்டு வகுப்புகளில் சேர்ப்பதைவிட நீச்சல் பயிற்சி, ஓட்டப் பயிற்சி என உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் பயிற்சிகளில் சேர்ப்பது மிகவும் நல்லது.
நீச்சல் பயிற்சி நிறைய நன்மைகளைக் கொண்டது.  மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் நீச்சல் பயிற்சியைத் தாராளமாக மேற்கொள்ளலாம். நீச்சல் பயிற்சி செய்வதன் மூலம் உடலுக்கு வைட்டமின்-டி சக்தி அதிகமாகக் கிடைக்கிறது. ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி மிகவும் நல்லது. இதனால் நுரையீரலின் செயல்திறன் அதிகரிக்கும்; சுவாசக் கோளாறுகள் சீராகும். 
நீச்சல் பயிற்சியில் திறந்தவெளி நீச்சல்குளம்  (ஓபன் ஸ்விம்மிங் பூல்) மற்றும் கட்டடங்களுக்குள் இயங்கும் மறைவான நீச்சல்குளம் (க்ளோஸ்டு ஸ்விம்மிங் பூல்) என இரண்டு வகைகள் உள்ளன.  திறந்த வெளி நீச்சல்குளங்களே  சிறந்தவை. சூரிய வெளிச்சத்தில் நீந்துவதால் சருமம் கறுத்துப் போவதைத் தவிர்க்க சிலர் வெயில் படாத உள்ளரங்கு நீச்சல்குளங்களைத் தேர்வு செய்கின்றனர்.  இதைத் தவிர்க்க வேண்டும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடும்போது குழந்தையின் ஒட்டுமொத்த உடல் தசைகளுக்கும் பயிற்சி அளிப்பதால், உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
சற்றே பருமனாக இருக்கும் குழந்தைகளை ஓட்டம் மற்றும் எனர்ஜி அதிகமாகத் தேவைப்படும் பயிற்சிகளான கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுத்துவது சிறந்தது. மேலும், இந்தப் பயிற்சிகளில் ஈடுபடும்போது துரித உணவுகள் மற்றும் எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். குழந்தை  குண்டாக இருப்பதால் ‘ஜிம்’முக்கு  அனுப்பலாமா என்று நினைப்பது  தவறு. ஏனெனில், சிறு வயதில் ஜிம்முக்குச் செல்வது மிகவும் இளம் வயதிலே மூட்டுவலியை ஏற்படுத்தும். ஸ்கேட்டிங் போன்ற பயிற்சிகளை ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பதின் பருவத்தினர் வரை கற்கலாம்.
பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை செஸ், அபாகஸ் போன்ற மூளைக்கு வேலை தரும் பயிற்சி வகுப்புகளில் சேர்ப்பது அவர்களின் கணிதத் திறமையை மேம்படுத்தும்.  நினைவாற்றலை அதிகரிக்கும்.
ஆண் குழந்தைகளைப் போலவே பெண் குழந்தைகளுக்கும் விளையாட்டு அவசியம். ஆனால், பொதுவாகவே பெண் குழந்தைகளை விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுத்துவதில் பெற்றோருக்குப் பெரும் தயக்கம் இருக்கிறது. பெண் குழந்தைகளின் உடலமைப்பு மாறும் என்றும்,  ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும் என்றெல்லாம் தவறாக நினைத்துப் பயப்படுகிறார் கள். விளையாட்டுப் பயிற்சிகள் பெண் குழந்தைகளின் எலும்புகளின் உறுதித்தன்மைக்கும் உதவும். பருமனைத் தவிர்க்கும். சரியான அளவில் பயிற்சியும் வழிகாட்டலும் இருக்கிறதா என்பதை மட்டுமே பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.

%d bloggers like this: