கொஞ்சம் நீரிழிவு… கொஞ்சம் கல்லீரல் கொழுப்பு

முன்பு நல்லெண்ணெயும், தேங்காய் எண்ணெயும்தான் நம் சமையல் எண்ணெயாக இருந்து வந்தது. தேங்காயை அதிகம் பயன்படுத்தினால் மாரடைப்பு வரும்… நல்லெண்ணெயால் கொலஸ்ட்ரால் கூடும் என்றெல்லாம் வதந்திகளைப் பரப்பி அவற்றை நம் சமையலறையில் இருந்தே அப்புறப்படுத்திவிட்டார்கள். அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சுத்திகரிக்கப்பட்ட பருத்தி எண்ணெய், பாம் ஆயில்(Palm oil) போன்றவற்றை அறிமுகப்படுத்தினார்கள். இந்த பாம் ஆயில் பற்றித்தான் இப்போது சர்ச்சை எழுந்திருக்கிறது.

தொடர்ந்து பாமாயிலை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது உடலில் இன்சுலின் உணர்திறன் குறைவதாகவும், நாளடைவில் கல்லீரல் கொழுப்பு நோய்(Fatty liver disease) ஏற்படுவதாகவும் German diabates centre மற்றும் Helmholtz centre என்ற இரண்டு ஜெர்மன் நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்து கூறியிருக்கின்றன. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமையல் எண்ணெயான பாமாயில் பற்றிய இந்த சர்ச்சை பற்றி நீரிழிவு மற்றும் எடை மேலாண்மை சிறப்பு மருத்துவர் சாதனாவிடம் கேட்டோம்…
‘‘பனை மரம், பேரீச்ச மரம் போன்று பால்ம்(Palm) என்பதும் ஒரு மரம். இந்த பால்ம் மரத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயையே பாமாயில் என்று சொல்கிறோம். இந்த பாமாயில் சமையலுக்கு ஏற்ற தரமான எண்ணெய் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இந்த எண்ணெயைத் தயார் செய்யும் முறையினால்தான் இப்படி ஒரு சர்ச்சை வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ஒவ்வோர் ஆண்டும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 70 ஆயிரம் கோடி மதிப்பில் பாமாயில் எண்ணெயை இறக்குமதி செய்கிறோம். இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பாமாயிலை Cooling process செய்துதான் பயன்படுத்த வேண்டும். Hot process முறையில் பராமரிக்கும்போதுதான் அது தரமில்லாத எண்ணெயாக மாற வாய்ப்பு இருக்கிறது.
இதில் முதல் பிரச்னை கல்லீரல் கொழுப்புதான். உடலில் சேரும் கல்லீரல் கொழுப்பை இரண்டு வகையாகச் சொல்லலாம். அதிகம் மது அருந்துவதால் கல்லீரல் வீங்குவதை Alcoholic fatty liver disease என்கிறோம். உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், உணவில் அதிகம் கொழுப்புச்சத்து சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு, கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை Non Alcoholic fatty liver disease என்கிறோம். பாமாயில் காரணமாக இந்த இரண்டாவது வகை கல்லீரல் கொழுப்பு பிரச்னை ஏற்பட வாய்ப்பு அதிகம்.
உடல் பருமன் குறியீட்டில் 2-8க்கு மேல் இருக்கும் அனைவருக்குமே கல்லீரல் கொழுப்புநோய் வருகிறது. நோயின் தீவிரத்தை வைத்து 1, 2, 3 என தரவரிசைப்படுத்துகிறோம். பல வருடங்களாக இருக்கும்பட்சத்தில் வருடங்களைப் பொறுத்து 1-லிருந்து 2, அடுத்து 3 என்று தரம் மாறுகிறது. நீண்ட வருடங்களாக கிரேட் 3-ல் இருப்பவர்களுக்குத்தான் அதிகபட்சமாக கல்லீரல் செயலிழப்பு நிலைக்கு கொண்டுவிடும்.
தற்போது நிறையபேருக்கு பஜ்ஜி, சிப்ஸ் போன்ற எண்ணெயில் செய்த உணவுப்பொருட்களையும், கொழுப்பு நிறைந்த பீட்சா, பர்கர், போன்றவற்றையும் சாப்பிடும் பழக்கமும் இருக்கிறது. தவிர, ஐ.டி. போன்ற துறைகளில் கம்ப்யூட்டர் முன்பு அதிகநேரம் அமர்ந்த நி்லையில் வேலை பார்க்கும் சூழலில் உள்ளவர்கள், உடற்பயிற்சியும் இல்லாமல் தவறான உணவுப்பழக்கமும் இருப்பதால் இந்தநோயால்அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
குறிப்பிட்ட வயது என்றில்லாமல் தற்காலத்தில் 20 வயதுக்கு உட்பட்டவர்கள்கூட உடல்பருமனாக இருப்பதால் எல்லோருக்குமே கல்லீரல் கொழுப்பு நோய் வருகிறது. உடல் பருமன் வந்துவிட்டால் நீரிழிவும் தானாகவே வந்துவிட சாத்தியம் உண்டு.
அலட்சியமாக இருந்தால் கல்லீரல் செயலிழப்பு வரை செல்லும் அபாயமும் ஏற்படும். தக்க நேரத்தில் மருத்துவரின் ஆலோசனை பேரில் சிகிச்சை மேற்கொள்ளும் அதே சமயம் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மேற்கொண்டால் கிரேடு 3-லிருந்து படிப்படியாக கிரேடு 1-க்கு மாறி நார்மலுக்கு கொண்டுவர முடியும். அதன்பின்னர் எண்ணெய் பொருட்கள், கொழுப்பு அதிகம் இல்லாத உணவுகளை எடுத்து வரும்போது மீண்டும் வராமல் பாதுகாக்க முடியும்’’ என்கிறார்.
எண்ணெயால் ஏற்படும் கல்லீரல் கொழுப்பு பற்றி கல்லீரல் சிறப்பு மருத்துவர் ஜாய் வர்கீஸிடம் கேட்டோம்,‘‘மது அருந்துபவர்களுக்கு மட்டும்தான் கல்லீரல் கொழுப்பு நோய், கல்லீரல் புற்றுநோய் வரும் என்றில்லை.  எந்தவிதமான கெட்ட பழக்கங்கள் இல்லாதவர்களுக்கும் இந்த நோய்கள் வரலாம். நீண்ட நாட்களாக கல்லீரல் செல்களில் படியும் கொழுப்பானது செல்களை இறக்கச்செய்து கல்லீரலை வீங்கச் செய்யும்.
இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. ஆசிய நாடுகளில் உணவில் அரிசியை அதிகம் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. ஒருவரின் எடை, உயரம், உடல் உழைப்பை பொறுத்துதான் கார்போஹைட்ரேட் எடுத்துக் கொள்ள வேண்டும் என இருக்கிறது. ஆனால், நாமோ மூன்று வேளையும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவையே எடுத்துக் கொள்கிறோம். அளவுக்கு அதிகமாக உடலில் செல்லும் கார்போஹைட்ரேட்டானது கொழுப்பாக மாறிரத்தநாளங்கள், கல்லீரல், மூளையின் செல்களிலும் படிகிறது.
மேலும், இந்தியாவில் சமையலுக்கு அளவுக்கு அதிகமாக எண்ணெயை உபயோகிக்கிறோம். உயர்செறிவூட்டப்பட்ட கொழுப்பு அதிகம் உள்ள பாம் ஆயில் போன்ற எண்ணெய்களை உபயோகிப்பதும் உடலில் கொழுப்பு படிவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இதேபோல் நீரிழிவு உள்ளவர்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்காதபோது கல்லீரல் பாதிப்படைகிறது.
மூன்றாவதாக ரத்த கொழுப்பு அதிகமாக இருப்பவர்களுக்கும் கல்லீரலில் கொழுப்பு படியக்கூடும். இவையெல்லாம் தவிர, தைராய்டு நோய் உள்ளவர்களுக்கும் கல்லீரல் கொழுப்பு நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இப்போதெல்லாம் குழந்தைகள் கூட அதிக பருமனாக இருப்பதைப் பார்க்கிறோம்.
நாங்கள் மேற்கொள்ளும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளில் 30 சதவீதம் பேர் கல்லீரல் கொழுப்பு நோயால் (Fatty liver) பாதிக்கப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். இந்தநோய் இப்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது. இதைப்பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே வேண்டும் என்று நினைக்கிறேன்.
முக்கியமாக ஒவ்வொருவரும் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொண்டாலே இந்த நோய் வராமல் தவிர்க்கலாம். உதாரணமாக, ஒருவரின் உயரம் 160 செ.மீ என்று வைத்துக் கொண்டால் அதிலிருந்து 100 கழித்தால் வரும் 60 கிலோதான் அவரது எடையாக இருக்க வேண்டும்.. இந்த எளிய கணக்கீட்டைப் பின்பற்றி எடையை பராமரிக்கலாம்’’ என அறிவுறுத்துகிறார்.
எண்ணெய் பயன்பாட்டில் கவனம் தேவை!
ஊட்டச்சத்து நிபுணர் வர்ஷா‘‘பால்ம் பழத்திலிருந்து எடுக்கப்படு–்ம் 1 டேபிள் ஸ்பூன் பாமாயிலில் 120 கலோரிகள் இருக்கின்றன. 13.6 கிராம் கொழுப்பு இருக்கிறது. ஒரு நாளைக்கு 5 முதல் 7 டீஸ்பூன் அளவுக்கு மேல் நாம் சேர்த்துக்கொள்ளும் பாதாம், முந்திரி போன்ற பருப்புகளில் உள்ள எண்ணெய் உட்பட எந்த ஆயிலும் சேர்க்கக்கூடாது என American heart association பரிந்துரைக்கிறது. பாமாயில் உயர் செறிவூட்டப்பட்ட கொழுப்பு அதிகமாக உள்ளதால் ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக்கக்கூடும்.
இதில் உள்ள பால்மிடிக் கொழுப்பு அமிலத்தினால் உடல்பருமன் அதிகரிக்கும். மேலும் ரத்தக் கொழுப்பு அளவையும், இன்சுலின் எதிர்ப்பையும் அதிகரிக்கச் செய்யும். மேலும் பாமாயிலில் உள்ள உயர் செறிவூட்டப்பட்ட கொழுப்பானது ரத்தத்தில் எல்.டி.எல் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். LDL கொழுப்பானது இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயிலும், கல்லீரலிலும் படியும்போது மாரடைப்பு, கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படக் காரணமாகிறது.
அதனால், ஒரே எண்ணெயை மறுபடியும், மறுபடியும் சூடு செய்து பயன்படுத்துவது, அளவுக்கதிகமாக எண்ணெயை சமையலில் சேர்த்துக் கொள்வது போன்ற பழக்கங்களைத் தவிர்த்தாலே பாமாயில் உள்பட எந்த எண்ணெயாலும் பிரச்னை வராமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்!’’

%d bloggers like this: