உடல் நலனுக்கு பசுமை கம்பளம்!

கீரை. இயற்கை கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் இது. எல்லா வகை கீரைகளிலும், உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் இருக்கின்றன. முளைக்கீரையில், கால்சியம் சத்துகள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன. சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால், எலும்பு வலுவடைவதோடு, உடல் வளர்ச்சியும் அதிகரிக்கும். வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால், ஆரோக்கியமும், வளர்ச்சியும் குறைவிருக்காது. கீரையை, தினசரி உண்டு வந்தால், மலச்சிக்கல் இருக்காது. நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் தேவையான சக்தியை அளிக்கும்.

கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச்சத்துக்கள், ரத்தத்தை சுத்திகரித்து, உடலுக்கு அழகு தரக்கூடியது. மணிச்சத்து, மூளை வளர்ச்சிக்கு நல்லது. சிறுகீரை, குடல், இருதயம், மூளை ஆகியவை பலம் பெற உதவுகிறது. அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால், இருதய நோய்கள் விலகிப் போகும்.
வலி பறந்து போகும்: அரைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர, பித்தம் தொடர்புடைய அனைத்து உபாதைகளும் குணமடையும். முடக்கத்தான் கீரையில், வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. தொடர்ந்து, உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், மலச்சிக்கல், மூல பாதவாதம் உட்பட்ட நோய்கள் குணமாகின்றன.
இக்கீரையை, விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால், மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய வலிகள் அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டால், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
கீரையின் சாறை, கட்டிகளில் வைத்து கட்டினால், அவை உடைந்து புண் ஆறும். வாய்வு தொல்லை உடையவர்கள், முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
சிறுபசலைக் கீரை, மலத்தை இளக்கி வெளியேற்றும் தன்மை கொண்டது. இதை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் தீரும். உடல் சூட்டைத் தணிக்கும். குளிர்ச்சியைத் தரக்கூடியது. சிறுநீர் தொடர்புடைய அனைத்து வியாதிகளையும் குணமாக்கும். வைட்டமின் “பி’ உயிர்சத்து அதிகளவில் உள்ளது.
பக்கம் வராது உபாதை: உடலில் வீக்கம் இருந்தால், மிளகு தக்காளி கீரையை உட்கொள்வதன் மூலம், அதை வாடச் செய்யும். வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை ஆற்றும். சொறி, சிரங்குகளை குணப்படுத்தும். பாண்டுரோகம், வெள்ளை வெட்டையை குணமாக்கும். தேகத்தில் உள்ள புண்களை ஆற்றும். அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், குடல் தொடர்புடைய எந்த வியாதிகளும், பக்கம் வராது.
சாணக்கீரை, மகோதரம் என்னும் வியாதியை, பூரணமாக குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது. இது, குழிப்புண், ஆறாப்புண்கள், புழுவைத்த புண்களைக் கூட அகற்றிவிடும். நெஞ்சில் கபம் கட்டியிருக்கும் போது, இக்கீரையை சமைத்து சாப்பிட்டால், கபம் உடைந்து, நிம்மதியான சுவாசத்துக்கு வழி வகுக்கும். லட்சக்கெட்டை கீரையை, தொடர்ந்து சாப்பிட்டு வர, வாதம் தொடர்புடைய வியாதிகளும் குணமடையும்.
வாய்வு தொடர்புடைய நோய்கள் தீரும். கீரைகளிலுள்ள கரோடின்களை பாதுகாக்க, நீண்ட நேரம் வேக வைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதால், கீரைகளில் உள்ள கரோடின் எனும் சத்துப்பொருள் இழப்பு ஏற்படுகிறது. கரோடின் எனும் பொருளானது உடலில் வைட்டமின் “ஏ’ வாக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது. வாரத்துக்கு, இரு முறை எடுத்துக் கொள்வது நல்லது.

%d bloggers like this: