வருகிறது வெப்ப புயல்!

அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே அனல் காற்று வீசத் தொடங்கி விட்டது. மணிக்கு இத்தனை கி.மீ. வேகம் என வானிலை மையம் அறிவித்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஏனெனில் வானிலை ஏரியாவில் இதுவரை வடமேற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளே ஹீட் வேவ் ஸோன் எனக் குறிப்பிடப்பட்டு வந்த நிலையில் இப்போது தென்னிந்தியா குறிப்பாக தமிழகமும் அந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.

என்ன காரணம்? இந்தாண்டு கோடை எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரனிடம் பேசினோம்.
பூமியோட வெப்பநிலை அதிகரிக்கிறது. உலக அளவுல நடக்கற நிகழ்வு குளோபல் வார்மிங் கேள்விப்பட்டிருப்பீங்கதானே? அதனால் தமிழ்நாட்டுல மட்டும்தான் வருஷத்துக்கு வருஷம் வெயில் அதிகரிச்சுட்டு இருக்குன்னு நினைக்க வேண்டியதில்லை. தவிர, ஒரு இடத்தோட வெப்பநிலை, அந்த இடம் நிலநடுக்கோட்டுக்கு எவ்வளவு தூரத்துல இருக்கு அங்கு நிலவுகிற காற்றின் ஈரப்பதம் உள்ளிட்ட சில விஷயங்களை வச்சே தீர்மானிக்கப்படுது. அதனால எல்லா இடத்துலயும் ஒரே மாதிரியான வெப்பநிலையும் இருக்காது.
இருந்தாலும் தொடர்ந்து சில வருடங்களாக வெப்பம் அதிகமாகவே இங்க (தமிழ்நாட்டுல) பதிவாகிட்டு வருது. 2016ம் ஆண்டு பதிவான வெப்பம் இயல்பை விட 136 டிகிரி செல்சியஸ் அதிகம். கடந்த 50 ஆண்டுகள்ல மூணு தடவை (1976, 2005, 2007) தொடர்ந்து 15 நாட்களாக மிக அதிக அளவிலான வெப்பம் பதிவானது. இந்த வருஷம் இந்த மூணு வருஷத்தை பீட் பண்ற மாதிரியும் பதிவாக வாய்ப்பிருக்கு மே மாதத்தில் அந்த நாட்களைக் கடக்கிறபோது அதிக வேகத்திலான அனல் காற்று வீசக் கூடும். அந்தக் காற்றை வெப்ப புயல்னே நாங்க குறிப்பிடுகிறோம் என்கிற பாலசந்திரன், சென்னையின் வெப்பநிலையைப் பொறுத்தவரை ஏறி இறங்கும்; 1908 ஏப்ரல் 27ம் தேதி 42.8 டிகிரி செல்சியஸ் என்று பதிவானதே அதிகபட்சம். இந்தாண்டு இநதளவும் கூடலாம் என்கிறார். தென் தமிழகத்தில் 1 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாம்.
சம்பந்தப்பட்ட இடத்தின் பூகோள அமைப்பு தாண்டி வெப்பமாதலுக்கு வேறு ஏதேனும் காரணம்?
சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகமாக அடிக்கிற வெயிலுக்கு வங்கக் கடலில் உருவான மாருதா புயல்தான் காரணம். மழைக்குதான் புயல் காரணமாகும்னு இல்லை. காற்றுல இருக்கற ஈரப்பதத்தை எல்லாம் உறிஞ்சுட்டு எதிர்த் திசையில கரையைக் கடந்துச்சுன்னா அந்த இடத்துல வெப்பம் அதிகமாகிடும். மாருதா இப்படித்தான் வெயிலைத் தந்துட்டுப் போயிடுச்சு.
மே மாதம் வெப்பப் புயல் வீச வாய்ப்பிருக்கு. அப்படி வீசினா, அதுக்கு 2016 கடைசியில வந்து போன வர்தா முக்கியக் காரணமா இருக்கும். நிறைய மரங்களை சாய்ச்சுட்டுப் போயிடுச்சே. காடுகள், மரங்கள் அழிக்கப்படுகிறபோது வெயிலோட அளவு ஆட்டோமேட்டிக்கா கூடும் என்கிறார் பாலசந்திரன்.
தமிழகத்தில் கோடை காலம் என்பது மார்ச் முதல் மே வரை ஆனால் வெயில் தாக்கம் ஜூலை பாதிவரை இருக்கும் . ஜூனில் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கினாலும் தமிழகம் அப்போது மழை மறைவுப் பிரதேசமே எனவே காற்று மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஏறி தமிழகத்தின் பகுதிகளில் இறங்குகிறபோது, அந்த அழுத்தமும் சூட்டையே கிளப்பும் என்றும் கூடுதல் தகவல் தருகிறது வானிலை ஆய்வு மையம்.

%d bloggers like this: