Advertisements

கோடநாடு கொலையும் அலைபேசி தொடர்பும்… கதிகலங்கும் முக்கிய அரசியல் புள்ளிகள்

கோடநாடு பங்களாவில் நடந்த கொலை வழக்கில், மனோஜ் சாமியார் கூறிய தகவல்களின் அடிப்படையில், கனகராஜ், சயான் ஆகியோரின் மொபைல் போன் எண்களை வைத்து நடத்திய விசாரணையில், பல முக்கிய அரசியல் புள்ளிகளும் விசாரணை வளையத்துக்குள் வரப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு எஸ்டேட் காவலாளி, ஓம்பகதுார் கொலை வழக்கு தொடர்பாக, தமிழக போலீசார் இதுவரை, ஐந்து பேரை கைது செய்துள்ளனர்; இருவர் கேரள சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், வாளையாறு பகுதியில் கைதான, மனோஜ் என்ற சாமியாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. நீலகிரி எஸ்.பி., தலைமையிலான போலீசார், கோவை, மதுக்கரை, வாளையாறு, சேலம், பகுதிகளில் விசாரணை நடத்த வருகின்றனர். ‘விக்ரமாதித்தன் கதை’ போல நீளும் இந்த வழக்கு குறித்து,போலீசார் கூறியதாவது:

மனோஜிடம் நடந்த விசாரணையில், கனகராஜ், சயான் குறித்த தகவல்கள் மட்டுமே போலீசாருக்கு அதிகளவில் கிடைத்துள்ளன. கனகராஜ், சயான் ஆகியோரின் மொபைல் போன் எண்களை வைத்து, ‘சைபர்கிரைம்’ போலீசார், அவர்களுடன் தொடர்புடைய, நபர்கள் குறித்த விபரங்களை சேகரிக்க துவங்கி உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் மட்டுமல்லாமல், கோவை, திருப்பூர், சேலம், சென்னை ஆகியவற்றில் உள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்த சில முக்கிய நபர்களின் எண்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த நபர்கள் இவர்களிடம் பேசிய தகவல்கள் குறித்து இன்னும் சேகரிக்க முடியவில்லை.
மேலும், 24ம் தேதி அதிகாலை, கூடலுாரில் பிடிபட்ட குற்றவாளிகளை விடுவிக்க, போலீசாருக்கு உத்தரவிட்ட ஒரு நபர் குறித்தும், அதே காரில், மாநில எல்லைவரை சென்று, அவர்களை அனுப்பி வைத்தவர் குறித்தும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், தற்போதைக்கு இந்த வழக்கும் முடியாது. குற்றவாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு, போலீசார் கூறினர்.

Advertisements
%d bloggers like this: