நேரத்தை மிச்சம் பிடிக்க கூடாத இடம்!

தமிழகத்தில் மட்டும், ஆண்டுதோறும், சாலை விபத்தில், 5,000 பேர், இறப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
தாங்கள் செய்த தவறுக்காகவோ, செய்யாத பிழைக்காகவோ, தங்கள் இன்னுயிரை இழக்கின்றனர் என்பது, எவ்வளவு பெரிய துன்பம்!
விலைக்கு கிடைக்கிற உரிமங்கள்; சாலை விதிகளை மீறுவதை, சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்வோர், அலட்சியம் மற்றும்

கவனக்குறைவு போன்றவை, உயிர்களை பறித்தபடி உள்ளன.
இவை தவிர, ஒரு பிரதான காரணம், நம்மவர்கள், சாலைகளில் நேரத்தை, மிச்சப்படுத்துவதில் காட்டுகிற முக்கியத்துவமே என்பேன்.
நான், இளைஞனாக இருந்த போது, ஒருமுறை, வாலிபன் ஒருவன் படு வேகமாக, மோட்டார் சைக்கிளில் பறக்க, நானும் துரத்தினேன். வேறு எதற்கு… ‘எதற்காக இவ்வளவு வேகத்தில் போகிறான்…’ என்று பார்க்கத் தான். வெகுதூரம் சென்ற பின், ஒரு பெட்டி கடையில் வண்டியை நிறுத்தி, சிகரெட் ஒன்றை வாங்கி, சாவகாசமாக ஊதினான் பாருங்கள்… வெறுத்து விட்டது;
‘இதற்காகவா இந்த விரட்டு விரட்டினாய்…’ என்று கேட்கத் தோன்றியது.
எத்தனை குடும்பங்கள், தங்களது அருமை வாரிசுகளை, இப்படி, சாலையில் மட்டுமே காட்டுகிற நேர உணர்வு காரணமாக இழந்திருக்கின்றனர்
தெரியுமா…
இளைஞர்கள் மட்டுமா, நடுத்தர வயதினரும், வயது கடந்தவர்களுமல்லவா இதே தவறை, திரும்பத் திரும்ப செய்கின்றனர்!
நேர உணர்வு பற்றி, காலங்காலமாக எழுதியும், பேசியும் வருகிற நான், ‘இந்த உணர்வு சாலையில் மட்டும் வேண்டவே வேண்டாம்…’ என்பேன்.
‘அதெப்படி… நாங்கள் வேகமாய் போகாமல் இருந்திருந்தால், அன்று, விமானத்தையோ, ரயிலையோ பிடித்திருக்க முடியாது…’ என்று சொல்வோருக்கு சில வார்த்தைகள்…
சாலையில், பயணத்திற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை, உத்தேசமாக கணக்கிடாமல், விபரம் தெரிந்தவர்களை கேளுங்கள். ஒருவேளை, உங்களுக்கே அனுபவம் இருந்தால், அதன் அடிப்படையில் முடிவிற்கு வந்து, அதைவிட, கால் மடங்கு நேரத்தை ஒதுக்கி புறப்படுங்கள். சென்னை – திருச்சிக்கு, ஆறு மணி நேரம் என்றால், ஒன்றரை மணி நேரம் கூடுதலாக ஒதுக்குங்கள்.
சிறு பயணமோ, பெரும் பயணமோ அனுபவித்து பயணியுங்கள். நெஞ்சு பட படக்க, உடம்பு தட தடக்க மேற்கொள்வதெல்லாம், ஒரு பயணமா… பயணத்தின் இனிமையையே பறித்து விட கூடிய செயல்கள் அல்லவா இவை!
ஒரு குறிப்பிட்ட நேரம் சொல்லி, அந்நேரத்திற்கு போக முடியாது என்று தெரிந்து விட்டால், உடனே, உரியவர்களிடம், ‘என்னை எதிர்பார்க்காதீர்கள்; நீங்கள் ஆரம்பித்து விடுங்கள்; புறப்படுங்கள்; ஆரம்பியுங்கள்…’ என்று, விடுதலை கொடுத்து, அவர்களுக்கு நிம்மதி சேருங்கள்.
குளியல் அறையில் பாட்டுப் பாடி, சாவகாச குளியல் போடுவது, தயாராகிறேன் பேர்வழி என்று, எதையாவது தேடியபடியே இருப்பது, சாவகாசமாக, ‘மேக் – அப்’ போடுவது என, கோட்டை விட்ட நேரத்தையெல்லாம், சாலைகளில் மிச்சம் பிடிக்க நினைக்கும் பேதமையை என்னவென்பது!
‘தமிழர்களுக்கு மட்டும், சாலையில் இருக்கிற நேர உணர்வு, பிற செயல்களில் இருந்து விட்டால் இவர்களை பிடிக்கவே முடியாது…’ என்று, அடிக்கடி எண்ணுவது உண்டு!

%d bloggers like this: