ஆண்களும் நகைகளும்!

சும்மா பொண்ணுங்க தான் அலங்காரம் பண்ணிப்பாங்க. அவங்களுக்குதான் ஆடை ஆபரணம் கலெக்ஷன் அதிகம்னு சொல்றதெல்லாம் சும்மா போங்கு.

இவங்களுக்கும் ஆசைதான் போட முடியாத சூழ்நிலைக்கைதி பாதிப்பேர் பெருசா கலெக்ஷன் கிடைக்காததால மீதிப்பேர்.
வேணும்னா பாருங்க…
வரையறழ் மார்பின் வையகம் விளக்கும்
விரவு மணி யொளிர் வரும்
அரவுறாழார மொடு
புரையோன் மேனிப் பூந்துகிற் கலிங்கம்
உரைசெல அருளினோன்
– புறநானூறு 398
(மலை போன்ற மார்பில் அணிந்த, உலகமெல்லாம் விலைமதிக்கத் தக்க பலமணிகள் கோர்க்கப்பட்டு, ஒளிவிளங்கும் பாம்பு போல வளைந்து கிடக்கும் ஆரமும் பூ வேலை செய்யப்பட்ட ஆடையும் தன்புகழ் எங்கும் பரவ நல்கினான்) என்று புறநானூற்றுச் செய்யுள் ஆடவர் அணிந்த அணிகளைப் பற்றி சொல்றதை பார்த்தீங்கன்னா புரியும்.
அதுக்கும் முன்பே விலங்கு நிலையில் இருந்து காட்டு மிராண்டியாக மாற்றமடைந்து, பின் வேட்டைச் சமூகமாகவும் மேய்ச்சல் சமூகமாகவும் மாறி வளர்ந்து மானத்தை மறைத்துக் கொள்ள முற்பட்டு முனைந்த போதும் இயற்கையில் கிடைத்த பொருள்களான இலை தழைகளால் மாலை, கண்ணி முதலியவற்றைத் தொடுத்து கழுத்திலும் மார்பிலும் தலையிலும் அணிந்து கொண்டான். தோலை ஆடையாக அணிந்த மனிதன். இலை தழை மலர் முதலியவற்றைத் தொடுத்து மாலையாகவும், கண்ணியாகவும் அணிந்தான்.
காட்டு விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்த கற்காலத்தில் நம்மாட்கள் புலிப்பல், யானை தந்தம் என மிருகங்களின் நரம்புகளில் கோர்த்து கழுத்து, இடுப்பு கைகளில் என அங்கிங்கெனாதபடி எல்லாம் அலங்காரம் பண்ணிட்டுதான் இருந்தாங்க.
முந்தைய காலத்தில், மக்கள் ஒரு செயலைச் செய்ய உறுதி பூணும்போது அதன் நினைப்பு எப்போதும் தமக்கிருக்க வேண்டும் ஒரு வகை வளையத்தை அணிவார்கள் இன்றும் கூட ஒரு காரியத்தை முடித்தே தீருவேன் என்று இருப்பவர்களை கங்கணம் கட்டிக் கொண்டு அலையறான்ப்பா என்று சொல்வது இதில் இருந்து வந்ததுதான்.
காப்பு, கடகம், வளையல், வங்கி என வரிசையாய் இருக்கின்றன கையில் அணியும் ஆபரணங்கள்.
காட்டுப் பாதைகளில் படுத்து உறங்கும் பாம்பு போன்ற நச்சுப் பிராணிகள் அரவம் கேட்ட விலகவும், புள்ளினங்கள் காலடியோசை கேட்ட மாத்திரம் பறந்தோடவும் ஆண்கள் பெண்கள் என இருவரும் கால்களில் அணிந்திருக்கும் அணிகலன் சுழலும், தண்டையும், சிலம்பும்.
அரச குடும்பத்தாரும், அரச கட்டளையை நிறைவேற்றும் அமைச்சர், தளபதி, தூதர், ஒற்றர் போன்ற பொறுப்பான பதவியினரும் மட்டுமே கணையாழி அணிவர். ஆழி என்பதற்கு சக்கரம் என்று அர்த்தம்.
விஷ்ணுவின் சக்கராயுதம் போல அரசனின் ஆணைச் சக்கரம் அவனது ஆட்சி எல்லைக்குள் விரைந்து பாயும் என்பதால், மன்னனின் ஆணையை செயல்படுத்தும் அதிகாரிகள் இன்றைய அடையாள அட்டைகள் போல அவற்றை பயன்படுத்தினர். பின்னாளில் விரலுக்கு அழகு சேர்க்க விரும்பிய எல்லோருமே அணியத் தொடங்கியதும் அது மோதிரமாகி விட்டது.
சொல்லப் போனால் உடம்பில் சட்டை அணிவதை அநாகரிகமாக அக்காலத்தில் கருதினார்கள். அரசர்களிடம் ஊழியம் செய்தவர்களே சட்டை அணிநதனர். உடைக்க மேலாக ஆண்களும் பெண்களும் பல நகைகளால் தம்மை அலங்காரம் செய்து கொண்டார்கள். (பெருசா பெருமூச்சா சத்தம் கேட்குதோ)
பண்டைய தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
வீரக்கழல் வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைஞான், பவளவடம், தொடி கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம், கொலுசு, காப்பு, பதக்கம், வாகுவலயம், கழுத்தணி, வண்ணசரம், முத்து வடம், கடுக்கண், குண்டலம், நெற்றிப் பட்டம், மூக்குத்தி, கடுக்கண், தொங்கட்டான், சங்கிலி, அட்டியல் இதெல்லாம் ஆண்கள் ஆபரணம் மட்டும்தான்.
ஹி..ஹி… வழக்கம் போல பெண்களுக்கான லிஸ்ட் இன்னும் பெருசு. இப்போ பாவம் தங்கமே வைரமேன்னு காதலியையோ, மனைவியையோ கூப்பிடறதோடு நிறுத்திக்க வேண்டியிரக்கு. ஆண்கள் நிலைமை, கடைசியா எனக்க நகைன்னு ஒண்ணு எடுத்துக் கொடுத்தது என் கல்யாணத்துக்குதான்னு பெருமூச்சு விடறது பெண்களைவிட ஆண்கள்தான்.
இப்போவும் போட்டுக்கற ஒத்தை செயின் நல்லா இருந்தாலே இந்த செயின் நல்லா இருக்கே. நான் போட்டுக்கறேன்னு ஊட்டுக்காரம்மா உரிமையா எடுத்துப் போட்டுப்பாங்களேன்னு பயம்தான். அதுக்கு மட்டும் தான் பயம், மத்தபடி எங்களுக்கு நகைன்னா பிடிக்கும்ங்க. கோஷ்டிதான் மெஜாரிட்டி.
ஆட்டுக்கு மாலை, மரியாதை மஞ்சத்தண்ணீ போல தான் மச்சான் போடற மோதிரமும் மாமனார் செயினும்.

%d bloggers like this: