பண்ணை வீட்டு மர்மம்… கான்ட்ராக்டர் சுப்பிரமணி மரணம்!

மிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை ரெய்டு நடந்த அதே தினத்தில், நாமக்கல் நகரின் மோகனூர் ரோட்டில் உள்ள கான்ட்ராக்டர் சுப்பிரமணி வீட்டிலும் சோதனை நடந்தது. அங்கே ரெய்டு நடத்திய எட்டு பேர்கொண்ட குழு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியது. இந்த நிலையில், சுப்பிரமணி மோகனூர் அருகே உள்ள செவிட்டுரங்கன்பட்டியில் இருக்கும், பண்ணை வீட்டில் கடந்த 8-ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் பரவின.
சுப்பிரமணியின் ஃப்ளாஷ்பேக் இதுதான்…

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்குச் செல்லும் வழியில் உள்ள காளப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். டிப்ளமோ முடித்துவிட்டு, தன் கிராமத்துக்குப் பக்கத்தில் உள்ள நடுக்கோம்பையைச் சேர்ந்த பிரபல கான்ட்ராக்டர் பெரியசாமியின் பி.எஸ்.கே குரூப்ஸில் பணியாற்றினார். பெரியசாமி மிகச் சாதாரண மனிதரைப் போல இருப்பார். ஆனால், இவர்தான் தமிழகத்தின் மிக முக்கியமான கான்ட்ராக்டர். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவருடைய தொழிலுக்கு நலிவு ஏற்பட்டதில்லை. எந்தத் துறையின் கீழ் கான்ட்ராக்ட் எடுக்க முயற்சிக்கிறாரோ, அந்தத் துறை அமைச்சருக்குத் தனிப்பட்ட முறையில் நண்பராகிவிடுவார். அந்த அமைச்சரை ‘கல்வித் தந்தை’ கனவில் மிதக்கவைத்து, அந்தத் துறையின் அனைத்து கான்ட்ராக்ட் பணிகளையும் அள்ளிக்கொள்வார். அப்படிப்பட்ட பி.எஸ்.கே குரூப்ஸ் பெரியசாமியிடம் தொழில் பயின்றவர் கான்ட்ராக்டர் சுப்பிரமணி.

பி.எஸ்.கே. குரூப்ஸில் வேலைக்குச் சேர்ந்ததும் சுப்பிரமணி, தன் சொந்த ஊரான காளப்பநாயக்கன் பட்டியில் இருந்து நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள ஆசிரியர் குடியிருப்புக்குப் பின்புறம் குடியேறினார். மனைவி சாந்தி. சபரீஸ் என்ற மகனும், அபிராமி என்ற மகளும் இருக்கிறார்கள்.
பி.எஸ்.கே-வில் பணியாற்றியபோது தமிழகத்தின் அதிகாரப் புள்ளிகளோடும், அமைச்சர்களோடும் நேரடித் தொடர்பில் இருந்துவந்தார். சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கரோடும் அப்போதுதான் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் இருவரையும் நெருங்கிய நண்பர்களாக  ஆக்கியது. விஜயபாஸ்கரின் ஆலோசனைப்படி, இரண்டு வருடங்களுக்்கு முன்பு பி.எஸ்.கே குரூப்ஸை விட்டு வெளியேவந்து, தனியாக ‘அபிராமி கன்ஸ்ட்ரக்‌ஷன்’ நிறுவனத்தைத் தொடங்கினார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம், தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறையின் கீழ்வரும் பெரும்பாலான கட்டுமானப் பணிகள் அபிராமி கான்ஸ்ட்ரக்‌ஷனுக்கு வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியைக் கட்டி முடித்திருக்கும் இவர்களுக்கே, இப்போது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரியைக் கட்டும் ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. விஜயபாஸ்கரின் கல்லூரிகளுக்கும் பெருமளவு கட்டடப் பணிகளை இவர் கவனித்து வந்தார்.

‘‘இப்படி விஜயபாஸ்கரின் கட்டுமானப் பணிகளைக் கவனிப்பதோடு இல்லாமல், அவருடன் பல டீலிங்குகளும் வைத்திருந்தார். ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பிளான் போடப்பட்டது அல்லவா? அது சம்பந்தமான பேப்பர்களை ரெய்டின்போது வருமானவரித் துறை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். அதற்கு சில நாட்களுக்கு முன்பு,  சுப்பிரமணியின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் இரண்டு கோடி ரூபாய் எடுக்கப்பட்டு விஜயபாஸ்கர் தரப்புக்கு போய்ச் சேர்ந்தது. இதையெல்லாம் தெரிந்துகொண்ட வருமானவரித் துறையினர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். அதே நேரத்தில், நாமக்கல்லில் சுப்பிரமணி வீட்டிலும் ரெய்டு நடத்தி, பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றார்கள். விஜயபாஸ்கரை வசமாகச் சிக்க வைக்கும் ஆதாரங்களாக அவை இருக்கின்றன” என்கிறார்கள் நாமக்கல் அ.தி.மு.க-வினர்.

ரெய்டு நடந்தபோது சுப்பிரமணி சுவிட்சர்லாந்தில் இருந்தார். அதன்பிறகு ஊர் திரும்பியதும் வருமானவரித் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். ‘‘அந்த விசாரணை நடைபெற்ற நாள்முதலே விரக்தியான மனநிலையில்தான் சுப்பிரமணி இருந்தார். விஜயபாஸ்கரோடு டீலிங்குகள் வைத்திருந்ததுதான் இவரை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இவருடைய மரணத்தில் மர்மம் இருக்கிறது. முறையாக விசாரித்தால் அனைத்து உண்மைகளும் தெரியவரும்’’ என்கிறார்கள் அவரின் நண்பர்கள்.
சுப்பிரமணி, குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் பரவியது. அவரது குடும்பத்தினர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாகக் கூறினார்கள். கணவர் இறந்த சோகத்தில் இருந்த சாந்தி, ‘‘என் வீட்டுக்காரர் தங்கமானவர். விடியற்காலை காரில் எங்கள் தோட்டத்துக்குப் போனார். தோட்டத்தில் உள்ள வீட்டில் படுத்தவர் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென இறந்ததாக வேலையாட்கள் சொன்னார்கள். வேறு எதுவும் எனக்குத் தெரியாது’’ என்று சொல்லி அழுதார்.
இதுதொடர்பாக விளக்கம் கேட்பதற்கு அமைச்சர் விஜயபாஸ்கரைத் தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்புகளைத் தவிர்த்துவிட்டார்.

%d bloggers like this: