Advertisements

சேகர் ரெட்டி டைரி… செக் வைக்கும் பி.ஜே.பி! – கமிஷன் பட்டியலில் 18 அமைச்சர்கள்

ற்சாகமாக நுழைந்த கழுகார், ஸ்டைலாக நாற்காலியில் அமர்ந்தார். ‘‘கடந்த இதழில்தான் ‘ரஜினி இடத்தில் ஓ.பி.எஸ்!’ என சொன்னீர். உடனே, ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கப் போவதாக செய்தி வெளியாகி இருக்கிறதே?” என்றோம்.

‘‘ஆமாம்! பத்தாண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களைச் சந்திக்கப் போகிறார். கடந்த ஏப்ரல் மாதம் இந்தச் சந்திப்பு நடப்பதாக இருந்து, பிறகு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது மே 15-ம் தேதியிலிருந்து 19-ம் தேதி வரை 15 மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளார். ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் ரெடி. ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் முதலில் ஒட்டுமொத்தமாகப் பார்க்கிறார். அவர்களோடு சிறிது நேரம் பேசிவிட்டு, அதன் பிறகு தனித்தனியாக அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்கிறார். ஒரு மாவட்டத்துக்கு 250 பேரை சந்திக்கிறார். மதிய விருந்தை ரசிகர்களுடன் அமர்ந்து சாப்பிடுகிறார்!”
‘‘எதற்காக இந்த சந்திப்பாம்?’’
“அரசியல் என்ட்ரி குறித்து பேசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தாலும், அதற்கு வாய்ப்பில்லை. ‘மனஅழுத்தத்தில் இருக்கும் நான் இப்போது ரசிகர்களைப் பார்த்தால் கொஞ்சம் உற்சாகமாக இருக்கும்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ரஜினிகாந்த் சொல்லியுள்ளார். இந்தச் சந்திப்பை பி.ஜே.பி உற்று நோக்குகிறது. காங்கிரஸ் பக்கமிருந்து நக்மா வந்து ரஜினியைப் பார்த்துவிட்டுப் போனது காரணமாக இருக்கலாம்.’’
‘‘கோட்டையில் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை மிரண்டு போய் இருக்கிறார்களாமே?’’
‘‘ஆம். தமிழகத்தின் மொத்த அதிகார வர்க்கமும் அரண்டு போய் இருப்பதற்கு காரணம், சேகர் ரெட்டியின் ஒற்றை டைரிதான். இப்போது அமலாக்கப் பிரிவு வழக்கால் சிறையில் இருக்கும் இந்தக் கைதியின் டைரி, தமிழக அதிகார வர்க்கத்தின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது. 2016 டிசம்பர் 7-ம் தேதி சேகர் ரெட்டி, அவரது தொழில் கூட்டாளிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிரடி சோதனை நடத்தியது. 131 கோடி ரூபாய் பணமும், கிலோ கணக்கில் தங்கமும் சோதனையில் சிக்கியது. இதையடுத்து சேகர் ரெட்டி மீது சி.பி.ஐ ஒரு பக்கமும், அமலாக்கத்துறை இன்னொரு பக்கமும் வழக்குப் பதிவு செய்தன. சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி, ஜாமீனில் விடுதலையானார். அடுத்த இரண்டே நாட்களில் அமலாக்கத்துறை கைது செய்து, மீண்டும் சிறைக்கு அனுப்பியது.

சேகர் ரெட்டியிடம் நடத்திய விசாரணை, அவர் வீடுகளில் நடத்திய ரெய்டுகளின் மூலம் அமலாக்கத்துறைக்கும் சி.பி.ஐ-க்கும் ஏகப்பட்ட ஆதாரங்கள் சிக்கின. அதில் மிக முக்கியமான ஆதாரம்தான், சேகர் ரெட்டியின் டைரி. அந்த டைரியில் சேகர் ரெட்டியிடம் ஒவ்வொரு மாதமும் கமிஷன் பணம் வாங்கிய அரசியல்வாதிகள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என்று பலரின் விவரங்கள் சிக்கி உள்ளன. இவர்களுக்கு எவ்வளவு, எந்தத் தேதியில் கொடுக்கப்பட்டது என சேகர் ரெட்டி படு துல்லியமாகக் கணக்கு எழுதி வைத்திருக்கிறார். இதைக் கைப்பற்றிய வருமானவரித் துறை அதிகாரிகள், ‘ரமணா’பட ஸ்டைலில் பட்டியல் தயாரித்து அதை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.’’
‘‘பட்டியலில் யார் யார் இருக்கிறார்கள்?’’
‘‘68 பேர் அந்தப் பட்டியலில் இருக்கிறார்கள் என வருமானவரித் துறை தரப்பில் உறுதியாகச் சொல்கிறார்கள். அவர்களில் 18 பேர் அமைச்சர்கள். இரண்டு பேர், முன்பும் இப்போதும்  ஆட்சி செய்தவர்கள். அவர்கள் மூன்றெழுத்து இனிஷியல்காரர்கள்.அதிகாரிகளைப் பொறுத்தவரை 25 பேருக்கும் மேல் உள்ளனர்.’’
‘‘இந்த எண்ணிக்கையைக் கூட்டினால் சரியாக 63 பேர் வரவில்லையே?’’
‘‘வருமானவரித் துறை தமிழக அரசுக்கு அனுப்பிய பட்டியலில், சேகர் ரெட்டி டைரியில் சிக்கியவர்களின் பெயர்கள் மட்டுமல்ல… பான்பராக், குட்கா விவகாரத்தில் கோடிக்கணக்கில் சம்பாதித்த அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.’’
‘‘கணக்கை மட்டும் சொன்னால் எப்படி? பெயர்களைச் சொல்லும்?’’
‘‘தமிழகத்தின் மிக முக்கியமான முகவரியாகக் கருதப்படும் அந்த கார்டனுக்கு மாதம் 60 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகத் தகவல்கள் இருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கும் சேகர் ரெட்டிக்கும் இருந்த நெருக்கத்தை யாரும் புதிதாக இனி சொல்லத் தேவையில்லை. அந்தத் தொடர்பை கையில் வைத்துக்கொண்டுதானே மத்தியில் இருக்கும் பி.ஜே.பி அரசு, அ.தி.மு.க-வுக்குள் தன் ஆட்டத்தையே ஆரம்பித்தது! ‘ஓ.பி.எஸ். தான் தமிழ்நாட்டுக்கு சேகர் ரெட்டியை அறிமுகம் செய்தார். ஓ.பி.எஸ் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது சேகர் ரெட்டிக்கு ஏராளமான கான்டிராக்ட்களைக் கொடுத்தார். ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, சேகர் ரெட்டியை திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினராக ஆக்கியவர் ஓ.பி.எஸ்தான். அவரும் சேகர் ரெட்டியும், வில்லன் நடிகர்கள் அசோகனும் நம்பியாரும் போல போஸ் கொடுத்தது தெரியாதா?’ என அமைச்சர் சி.வி.சண்முகம் சொன்னது அர்த்தமுள்ளது…’’
‘‘ஓ!
‘‘ஓ.பி.எஸ் பொதுப்பணித் துறையைக் கையில் வைத்திருந்தபோது, அவரோடு முக்கியமாக இருந்த பொறியாளர்கள் 6 பேர் பெயர்கள் இருக்கின்றன.  அதுபோல தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறையைக் கையில் வைத்திருந்தபோது அவருக்கு நெருக்கமாக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இரண்டு பேர். அப்போது தலைமைப் பொறியாளராக இருந்து இப்்போது ஓய்வு பெற்றுள்ள ஒருவர், இப்போது ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஒருவர், எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பு உதவியாளராக இருந்த ஒருவர்… ஆகியோர் பெயர்கள் அந்தப் பட்டியலில் இருக்கின்றன.  முதல்வர் அலுவலத்தில் சிறப்பு ஆலோசகராக இருந்த ஒரு அதிகாரி – அவரைக் கேட்காமல் ஜெயலலிதா எதையும் செய்ததில்லை. அந்த அதிகாரிக்கும் சேகர் ரெட்டி டைரியில் முக்கியமான இடம் இருக்கிறது. சேகர் ரெட்டியைத் தொடர்ந்து ரெய்டில் சிக்கிய இன்னொரு வி.ஐ.பி-க்கும் இந்த லிஸ்டில் இடம் உண்டு. வருமானவரித் துறை தந்த பட்டியலில், சுகாதாரத் துறையில் உயர் பதவியில் உள்ள ஒரு அதிகாரியின் பெயரும் வருகிறது.’’
‘‘சேகர் ரெட்டி டைரியில் சுகாதாரத்துறை அதிகாரிக்கு என்ன தொடர்பு?”
‘‘தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா ஆகியவை சென்னைக்கு அருகில், கிடங்கில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. குட்கா வியாபாரிகள் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித் துறைக்குத் தகவல்கிடைக்க, வருமான வரி துறை சோதனை போட்டது. இந்த சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு  நடந்தது. அப்போது யார் யாருக்கு மாமூல் தரப்பட்டது என்கிற லிஸ்ட் அடங்கிய டைரி ஒன்று சிக்கியது. அதில் காக்கி உயர் அதிகாரிகள் பெயர்கள் இருந்ததாக சர்ச்சைகள் எழுந்தன. அப்போது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ், தமிழக அரசுக்குக் கடிதம் எழுதினார். இதுபற்றிக்கூட உம்ம நிருபரும் ஏற்கனவே எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் ‘சென்னை காவல்துறையில் உயர் பொறுப்பில் இருக்கும் பல அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு பான்பராக், குட்காவை அனுமதித்தனர். அதில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.  அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில்தான் சுகாதாரத்துறை அதிகாரியின் பெயர் மாட்டியது. அதுபோல, தமிழக காவல்துறையின் முக்கியப் பொறுப்பை வகிக்கும் இரண்டு அதிகாரிகளின் பெயரும் லிஸ்ட்டில் இருந்தன. ஜார்ஜ் அனுப்பியது போலவே பான் பராக், குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் அதிகாரிகள் பட்டியலை, வருமானவரித் துறையும் அப்போது தமிழக அரசுக்கு அனுப்பியிருந்தது.  இப்போது சேகர் ரெட்டி டைரி விவகாரத்தோடு பான்பராக் விவகார லிஸ்ட்டையும் அனுப்பி, ‘லஞ்சப் புகார் தொடர்பான இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுங்கள். இது எங்கள் வரம்பிற்குள் வராது’ என பொறுப்பை தமிழக அரசிடம் தள்ளிவிட்டார்கள்!”
‘‘அதுசரி… சேகர் ரெட்டி டைரியில் எந்தெந்த அமைச்சர்கள் இடம்பிடித்துள்ளனர்?’’
‘‘தற்போது அமைச்சரவையில் இருப்பவர்கள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் ஒரு சுற்று வந்தவர்கள் என்று எல்லோரையும் சேகர் ரெட்டி சகட்டு மேனிக்குக் கவனித்துள்ளார். பலரும் கடந்த தேர்தலில் தங்கள் தொகுதிக்குச் செலவழித்த பணம், சேகர் ரெட்டியின் கஜானாவில் இருந்தே வந்திருக்கிறது. குறிப்பாக, சமீபத்தில் ‘வில்லேஜ் விஞ்ஞானி’ பட்டம் பெற்ற ஒரு அமைச்சர், கொங்கு மண்டலத்தின் செல்வாக்கான இரட்டையர்களாக அடையாளம் காட்டப்பட்டவர்கள், தினகரன் விவகாரத்தில் ‘உடும்பு’ பிடியாக மத்திய அரசின் கண்காணிப்பில் இருக்கும் கொங்கு வட்டார அமைச்சர், எப்போதும் சர்ச்சைகளில் சிக்கித் தவித்து விசாரணைக்கு ஓடிக்கொண்டிருக்கும் அமைச்சர், ‘சசிகலாவை முதல்வர் ஆக்க வேண்டும்’ என முதலில் பேசிய தென் மாவட்ட அமைச்சர், ‘சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க நான்தான் காரணம்’ என மார்தட்டிக்கொண்ட ‘வீர’ அமைச்சர்… என பலர் இருக்கிறார்கள். ‘சேகர் ரெட்டி டைரி குறித்து விசாரிக்க வேண்டும்’ என மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், அந்த டைரியின் ஹைலைட், கடந்த தி.மு.க ஆட்சியில் முக்கியமான அமைச்சராக இருந்து, இப்போது கட்சியின் முதல்வரிசைத் தலைவராக இருக்கும் ‘உணர்ச்சிமயமான’ பிரமுகரின் பெயரும் இருப்பதாகத் தகவல். சேகர் ரெட்டியின் சொந்த ஊரான வேலூர் பகுதியில் இதை ஆச்சர்யத்தோடு பேசிக்கொள்கிறார்கள்.”
‘‘மற்ற அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்களும் அடிபடுகிறதே…’’
‘‘கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் பெயர்களைத் தவிர அநேகமாக பெரும்பாலான கட்சி பிரமுகர்கள் பெயர்களும் இருக்கின்றன. இதில் தேசியக் கட்சிகள், சாதிக்கட்சிகள் என வித்தியாசமே இல்லை. மணல் குவாரிகள் உள்ள மாவட்டங்களில், எல்லாக் கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் பெயர்களும் உள்ளன. சில நேரங்களில் ஆட்கள் மூலமாக பணத்தை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் பிரமுகர்கள். அந்த ஆட்கள், ‘பணம் பெற்றுக் கொண்டேன்’ எனக் கையெழுத்தும் போட்டிருக்கிறார்கள்.’’
‘‘இந்த விவகாரம் இனி என்ன ஆகும்?”
‘‘சேகர் ரெட்டியின் டைரிக் குறிப்புகளைத் துருப்புச் சீட்டாக எடுத்துக்கொண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு மட்டுமில்லை… தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கும் செக் வைத்திருக்கிறது பி.ஜே.பி.  பான் பராக் விவகாரம் தொடர்பான லிஸ்டை முன்பே தமிழக அரசுக்கு வருமானவரித்துறை அனுப்பியிருந்தது. அதன் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில்தான் சேகர் ரெட்டி டைரி சிக்கி, வருமானவரித்துறை தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்பியது. அதன்மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. நடவடிக்கை எடுக்காத இந்த இரண்டு விஷயங்களையும் குறிப்பிட்டு, மத்திய அரசுக்கு வருமானவரித்துறை கடிதம் அனுப்பியிருக்கிறது. இந்த பின்னணியில்தான் பி.ஜே.பி. தமிழக அரசுக்கு செக் வைக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறது.’’
‘‘ம்’’
‘‘இந்த நெருக்கடியான சூழலிலும் தமிழ்நாட்டில் கரன்ஸி மழைக்குக் குறைவில்லை. கூவத்தூரில் செய்துகொண்ட ஒப்பந்தப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தவணை தர வேண்டுமாம். இந்தத் தவணையில் அமைச்சர்கள் தவிர மற்ற எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வொருவரும் கவனிக்கப்பட்டார்கள். ‘சி’றப்பான கவனிப்பு அது. எம்.பி-களுக்கு மூன்று கிலோ தங்கப் பரிசு வழங்கப்பட்டதாம். இதில் சிலருக்கு மனவருத்தம். ‘சாதாரண எம்.பி-க்கும் சீனியருக்கும் ஒரே பரிசா? நாங்கள் விசுவாசமாக இருக்கிறோமே’ என்று முகத்தைச் சுளிக்க… அவர்களையும் குளிர வைத்துவிட்டார்கள். ‘ஐயா பன்னீர்செல்வம்… உங்க புண்ணியத்துல நாங்க வளமா இருக்கோம். தயவுசெய்து, இணைந்திடாதீங்க. இப்படியே விட்டாத்தான் எங்களை அடிக்கடி கவனிப்பார்கள்’ என்கிறார்களாம். அ.தி.மு.க இணைப்பு நடக்காமல் தடுக்க, ஓ.பி.எஸ் குரூப்பை இவர்களே தனியாகக் கவனிப்பார்கள் என்கிற அளவுக்கு நிலைமை தாறுமாறாகக் கிடக்கிறது.’’
‘‘பட்… இந்த டீலீங் நன்றாக இருக்கிறதே?’’
‘‘வடிவேலு மீம்ஸ் போல இருந்தாலும் இதுதான் நிலவரம்.’’ என்றவர் அடுத்த சப்ஜெக்ட் தாவினார்.

‘பி.ஜே.பி பிரமுகர் வானதி சீனிவாசன், தலைமைச் செயலகத்துக்குப் போய் திடீரென முதல்வர் எடப்பாடியை சந்தித்தார். எடப்பாடி கோஷ்டியைத் தாங்கிப் பிடிப்பவர் பக்கத்து மாநில வி.வி.ஐ.பி. ஒருவர்தான் என்று உம்மிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். அந்த வி.வி.ஐ.பி-க்கும் டெல்லி பி.ஜே.பி மேலிடத்துக்கும் இணைப்புப் பாலமாக விளங்குபவர் வானதி சீனிவாசன் என்கிறார்கள். அந்த வகையில், தலைமைச்செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. ‘வெளியுலகத்துக்கு அவர்கள் சந்திப்புக்கு வேறு காரணம் சொல்லப்பட்டது. உண்மையில், அவர்கள் பேசியது முழுக்க முழுக்க அரசியல்’ என்கிறார்கள். ‘எடப்பாடி அரசுக்கு மத்திய அரசால் ஆபத்து இருக்காது. இந்த கோஷ்டி எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களின் ஓட்டுக்களை ஜனாதிபதி தேர்தலில் பி.ஜே.பி வேட்பாளருக்குச் சிந்தாமல் சிதறாமல் செலுத்த வேண்டும்’ என பேசி இருக்கிறார்கள்.’’
‘‘விஜயபாஸ்கருக்கு நெருக்கமான நாமக்கல் கான்ட்ராக்டர் சுப்ரமணியம் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்துக்கு என்ன ரியாக்‌ஷனாம்?’’
‘‘கடிதத்தை வைத்துக்கொண்டு எடப்பாடி, முக்கிய அமைச்சர்களோடு ஆலோசனை நடத்தியுள்ளார். கடிதத்தில் சுட்டிக்காட்டிய அந்த வருமான வரித்துறை அதிகாரிதான் விஜயபாஸ்கரையும் அவர் மனைவியையும் விசாரித்தவர் என்பதால் அதுகுறித்த சில தகவல்களையும் விஜயபாஸ்கர் முதல்வரிடம் விளக்கியுள்ளார். ‘இதை மத்திய அரசு கவனத்துக்குக் கொண்டுபோகலாம்.’ என எடப்பாடி சொல்லியிருக்கிறார்.  சுப்ரமணியம் தற்கொலை விவகாரம், சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப் பட்டிருக்கிறது. இதைவைத்து, அடுத்தடுத்த வருமானவரித் துறை அதிரடிகளுக்கு பிரேக் போடலாம் என்ற யோசனையில் இருக்கிறார்களாம்.’’
‘‘அப்படியா?”
‘‘சுப்ரமணியம் கடிதம் வேறொரு விவகாரத்தையும் புதிதாகக் கிளப்பியிருக்கிறது. தனது போட்டி கான்டிராக்ட் நிறுவனம் ஒன்றுக்கு, முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பழனியப்பனும், சில அதிகாரிகளும் செய்த உதவிகள் பற்றி குறிப்பிட்டு இருந்தார் சுப்ரமணியம். அந்தப் பிரமுகர்கள்மீது இப்போது வருமான வரித்துறை பார்வையைக் குவித்திருக்கிறதாம்” என்ற கழுகார், சிறகை விரித்துப் பறந்தார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: