சிறுநீரகக் கல் கரைக்கும்… மாதவிடாய்க் கோளாறு நீக்கும் சிறுபீளை!

சிறுபீளை! இதை சிறுகண்பீளை, கற்பேதி, கண்பீளை, சிறுபீளை, கண்ணுப்பூளை, பொங்கல்பூ ஆகிய பெயர்களாலும் அழைப்பார்கள். இதன் பூக்கள் வெண்மை நிறத்தில் காணப்படுவதால் சிலர் தேங்காய்ப்பூ என்றும் சொல்வார்கள். இது, நீர்நிலைகளையொட்டிய பகுதிகளிலும் தரிசு நிலங்களிலும் வளரக் கூடியது.

சிறுபீளை

பொங்கல் போன்ற விழா நாள்களில் காப்பு கட்டவும் தோரணம் கட்டவும் இதை பயன்படுத்துவார்கள். இதன் நோக்கமே ஆபத்தான நேரங்களில் நம்மைப் பாதுகாக்க நாம் வெளியில் மருந்தைத் தேடி அலையக் கூடாது என்பதற்காகத்தான். அப்படி இதிலென்ன மருத்துவக் குணம் இருக்கிறது என்பது பற்றி சித்த மருத்துவர் இரா.கணபதியிடம் கேட்டோம். அதற்கு அவர் அளித்த தகவல்களின் தொகுப்பு இது.

சிறுபீளையின் வேர், இலை, பூ, தண்டு என அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் நிறைந்தவை.சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள 99 வகை மலர்களில் சிறுபீளைப் பூவும் ஒன்று. இது கைப்புச்சுவை மற்றும் வெண்மைத் தன்மை கொண்டது. இது நம் உடலின் கழிவுப் பொருள்களை வெளியேற்றும் உறுப்பான சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளுக்கு அருமருந்தாக இருக்கிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களைக் கரைக்கக் கூடியது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்ப் பிரச்னைகளையும் போக்கக் கூடியது.

சிறுநீரகக் கல்…

இன்றைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை சிறுநீரகக் கல் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய பிரச்னையிலிருந்து  விடுபட வேண்டுமானால், ஒரு லிட்டர் நீரில் 50 கிராம் சிறுபீளைத் தாவரத்தைப் போட்டு, அது கால் லிட்டராகும் வரை சுண்டக்காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரில் சுமார் 50 மில்லி அளவு காலை, மாலை வேளைகளில் குடித்து வந்தால் சிறுநீரகக் கல் கரைந்துவிடும். அதுமட்டுமல்ல, ஹைட்ரோ நெஃப்ரோசிஸ் எனப்படும் சிறுநீரக வீக்கமும் குறையும். மேலும் கற்கள் ஏற்படுத்தும் வலியையும் போக்கும். சிறுநீர் கழிக்கும்போது ஏற்படக்கூடிய எரிச்சலைப் போக்குவதோடு, சிறுநீரோடு ரத்தம் போவதையும் சரி செய்யக்கூடியது.

மாதவிலக்குக் கோளாறு…

சிறுபீளையின் முழுத்தாவரத்தையும் அரைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த நீரை வடிகட்டி அதனுடன் காய்ச்சிய பால் சேர்த்துக் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்துவர மாதவிலக்கு நாள்களில் ஏற்படக்கூடிய வலி குறையும். அதிக ரத்தப்போக்கும் கட்டுக்குள் வரும். மேலும் அப்போது ஏற்படக்கூடிய உடல்சோர்வைத் தவிர்த்து புத்துணர்ச்சி தரும்.

சிறுபீளையால் வேறு நன்மைகள்…

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரவல்லது.

காயங்களால் ஏற்படும் வடுக்களைப் போக்கக்கூடியது.

கொழுப்பைக் கரைத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கும்..

ஈரலில் ஏற்படும் பிரச்னைகளைப் போக்கக் கூடியது.

உள் உறுப்புகளில் உண்டாகும் அலர்ஜியைச் சரிசெய்யும்.

கண்ணெரிச்சலைப் போக்கும்.

சிறுகண்பீளை

ரத்தக் கழிச்சலை சரிப்படுத்தும்.

தேகம் வெளிறலைத் தடுக்கும்.

பித்த வாதத்தைச் சரிசெய்யும்.

சிறுபீளைச்செடியின் வேர் பாம்புக்கடி மற்றும் வெறி நாய்க்கடிக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய தளர்ச்சியைப் போக்கி உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.

சிறுநீரகக் கல்

சிறுநீர்க்கல்லானது அலோபதி மருத்துவம் மூலம் கரைக்கப்பட்டால் மீண்டும் வருவதற்கு வாய்ப்புண்டு. ஆனால், இதுபோன்ற பாரம்பர்ய மிக்க மருந்து நிரந்தரத் தீர்வைத் தரக்கூடியது. இதற்கு நாம் அதிகமான பணம் செலவளிக்கவும் தேவையில்லை. சிறுகண்பீளை இயற்கை நமக்களித்த வரமாகும். அதைப் பயன்படுத்தி நோய், நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வோம்.

%d bloggers like this: