பளிச் சருமத்துக்கும் பட்டுக் கூந்தலுக்கும்… – ஆப்பிள் சிடர் வினிகர்..!

தினமும் ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரைப் பார்க்கவேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள். ஆப்பிளைவிட ஆப்பிள் சிடர் வினிகருக்கு  இன்று டிமாண்ட் அதிகம். இது ஆப்பிளின் தோலிலிருந்து தயாரிக்கப்படுவதால் பல நன்மைகளைத் தரக்கூடியது.

ஆப்பிள் சிடர் வினிகர் இயற்கை வைத்திய முறைக்குப் பெரிதும் பயன்படுகிறது. நம் ஊர் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் ஆர்கானிக் கடைகளிலும் ஆப்பிள் சிடர் வினிகர் கிடைக்கிறது.  இது சருமம் மற்றும் கூந்தலுக்குப் பலவகையான நன்மைகளைத் தருகிறது.

ஆப்பிள் சிடர் வினிகரில், பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் பண்புகள் நிறைந்துள்ளதால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கிறது. இது சருமம் மற்றும் கூந்தலின் பி.ஹெச் அளவைச் (pH Level) சமமாக வைத்திருக்க உதவும்.

வெயில் காலம் வந்துவிட்டால் வெளியில் சென்று வந்தாலே முகம் கறுத்துவிடும். கருமை நீங்கிப் பொலிவு பெற, 4 கப் தண்ணீருடன் 20 மி.லி. ஆப்பிள் சிடர் வினிகரைச் சேர்த்து முகத்தைக் கழுவவேண்டும். 15 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரால் மீண்டும் முகத்தைக் கழுவலாம். ஆப்பிள் சிடர் வினிகரின் வீரியம் அதிகம் என்பதால், அதை நேரடியாகச் சருமத்தின் மீது பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

இது சிறந்த டோனராகவும் செயல்படுகிறது. எண்ணெய் வழிகிற சருமம் உள்ளவர்களுக்கு, முகத் தசைகளில் துவாரங்கள் அதிகமாகக் காணப்படும். இவர்களுக்கு மேக்அப் போட்டாலும் இயற்கையான சருமம் போலத் தெரியாது. எனவே, ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரில் 2 டேபிள்ஸ்பூன் நீரைக்கலந்து பஞ்சால் முகத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவி, மாய்ஸ்சரைசர் பூசலாம். இதைத் தொடர்ந்து ஒரு மாதம் வரை செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.

ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் இரண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீரைச் சேர்த்து முகத்தில் இருக்கும் பருக்கள் மீது, தினமும் நான்கு முறை பஞ்சால் ஒற்றியெடுத்தால், பருக்கள் காய்ந்து உதிர்ந்துவிடும்.

வீட்டிலேயே பீல்ஸ் சிகிச்சையைச் செய்ய, ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர், அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், அரை டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் பால் இவற்றைக் கலந்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிவிடலாம். வாரம் ஒரு முறை  இப்படிச் செய்துவர, கருமையான திட்டுகள், கரும்புள்ளிகள் ஆகியவை மறைந்துவிடும்.

பொடுகுத் தொல்லை நீங்க, இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர், இரண்டு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, இரண்டு டீஸ்பூன் தண்ணீர் ஆகியவற்றைக் கலந்து மண்டையில் தடவ வேண்டும். சரியாகப் பத்து நிமிடங்கள் கழித்துக் கூந்தலை அலசலாம். வாரம் மூன்று முறை எனத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குச் செய்துவர, பொடுகுப் பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

ஷாம்பூவால் கூந்தலை அலசிய பிறகு, ஒரு கப் தண்ணீரில் 20 மி.லி. ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து கூந்தலை அலச வேண்டும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு கண்டிஷனரைக் கொண்டு முடியை அலசலாம். இதனால், முடி உதிர்வது தடுக்கப்படும். முடியின் வேர்கள் உறுதியாகும்.

ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு கப் ஆப்பிள் சிடர் வினிகரைச் சேர்த்து, 10-15 நிமிடங்கள் வரை கால்களை நனைக்கலாம். இதனால், கால் ஆணி நீங்கும். பித்த வெடிப்புகள் சரியாகும். நகங்களில் உள்ள கிருமிகள் அழியும்.

கொசுக்கடியால் ஏற்படும் அரிப்பு, அக்குள் மற்றும் தொடைப்பகுதிகளில் ஏற்படும் கருமை ஆகியவை நீங்க ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் கற்றாழை ஜெல் இரண்டையும் சமஅளவில் எடுத்துக்கொண்டு அந்த இடங்களில் தேய்த்து, பத்து நிமிடங்களுக்குப் பிறகு கழுவ வேண்டும்.

உடலில் துர்நாற்றம் ஏற்பட்டால் ஒரு பக்கெட் நீரில், ஒரு கப் ஆப்பிள் சிடர் வினிகரைச் சேர்த்துக் குளிக்கலாம்.

முகம் பளபளப்பாக இருக்க, ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவைக் கலந்து, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.

உள்ளுக்குச் சாப்பிடலாமா?

அசிட்டிக் அமிலம், பொட்டாசியம், சோடியம் மற்றும் தயமின்  என  இதில் அமிலத்தன்மை நிறைந்துள்ளதால், இதைத் தொடர்ந்து உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

குறைந்த கலோரிகள் இருப்பதால், இதை அடிக்கடி குடிப்பவர்கள் உண்டு. இது முற்றிலும் தவறு. ஒரு நாளைக்கு ஒரு முறைதான் குடிக்க வேண்டும். அதுவும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து குடிக்கலாம். அதிகமாக ஆப்பிள் சிடர் வினிகரைக் குடித்தால் உணவுக்குழாயில் எரிச்சல் ஏற்படும்.

பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்க, ஆப்பிள் சிடர் வினிகரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும் என்பார்கள். உண்மையில், இதிலுள்ள அமிலத்தன்மை பற்களின் எனாமலைப் பாதிப்பதோடு பற்களின் உறுதியையும் வலுவிழக்கச் செய்யும். பற்களைத் தேய்ப்பதற்கு முன் ஒரு கப் தண்ணீரில் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து கொப்பளிக்கலாம். இதை 15 நாள்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். முடிந்தளவுக்கு, எலுமிச்சைச் சாற்றை இதற்கு மாற்றாகப் பயன்படுத்துவது சிறந்த பலன்களைத் தரும்.

ஆப்பிள் சிடர் வினிகர் பசியைக் குறைத்து, நிறைவான நிலையைத் தருவதால் அதிகமான உணவைச் சாப்பிடமுடியாமல் போகிறது. இதுவே, எடை குறையக் காரணமாகிறது. இப்படி எடை குறைக்க முயற்சி செய்வது ஆரோக்கியமான வழியல்ல. சமச்சீரான உணவும், உடற்பயிற்சியும்தான் உடல் எடையைக் குறைப்பதற்கான சிறந்த வழிகள்.

சிலர் வெறும் வயிற்றில் இதைக் குடித்தால் தொப்பை குறையும் என்கிறார்கள். இப்படிக் குடித்தால் இரைப்பையில் பாதிப்பு ஏற்படும். வயிற்றுப் புண் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன.

உணவு அருந்தியதும் ஆப்பிள் சிடர் வினிகரைக் குடித்தால், சர்க்கரைநோய் குறையும் என்பார்கள். உண்மையில், இதற்கான எந்த ஆதாரமும் இல்லை. சர்க்கரைநோய் கட்டுக்குள் வர வாழ்வியல் மாற்றங்களே தேவை என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

ஆப்பிள் சிடர் வினிகர் என்பது அயல்நாடுகளில் மிகவும் பிரபலமான ஒன்றுதான். கால் ஆணிகளை நீக்க, பொடுகுத் தொல்லையைச் சரியாக்க, அழகு மற்றும் பராமரிப்புத் தொடர்பான விஷயங்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது. ஆனால், இதை உள்ளுக்குச் சாப்பிடுவது சரியான முறை அல்ல. அதனால், மருத்துவரின் ஆலோசனையின்படி ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்துவது நல்லது.

%d bloggers like this: