ருசி உங்கள் சாய்ஸ்? – எல்லாமே கெமிக்கல்!

காரீயம் (Lead) என்ற வேதிப்பொருள் அளவுக்கு அதிகமாக இருப்பதாகக்கூறி உணவுப்பொருள் ஒன்று தடை செய்யப்பட்டது. உங்களுக்கு அது என்ன உணவு என்று நினைவிருக்கலாம். அதேவேகத்தில் தடை நீக்கப்பட்டு மீண்டும் மார்க்கெட்டுகளில் வலம் வர `வெல்கம் பேக்’ என வரவேற்றவர்கள் அதிகம்பேர். சமீபத்தில்கூட வேதிப்பொருள்கள் அதிகம் சேர்க்கப்படுவதால் பிரெட்

தயாரிப்பையே தடை செய்தது அமெரிக்கா. ஆனால், நம் ஊரில் பலரின் காலை உணவே பிரெட்தான். தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு ரசாயன‌ம் அதில் இருப்பது தெரிந்தும் ஏன் இந்த அதீத நாட்டம்? வேதிப்பொருள்களின் சுவையில் ஆரோக்கியம் என்பதே அவசியமற்றதாகிவிட்டதா?

பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட பல நிறமூட்டிகளுக்கும், சுவையூட்டிகளுக்கும் இன்னும் இந்தியாவில் மட்டும் எந்தத் தடையும் இல்லை. அதனால்தான் இந்தியர்களுக்கு உணவின்மூலம் ஏற்படக்கூடிய நோய்கள் அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்ற தகவல் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. உணவைப் பதப்படுத்த உப்பு, வாசனைக்காக நறுமண இலைகள், பழங்களைப் பாதுகாக்க  சர்க்கரை என முன்பு ஆரோக்கியத் துடன் இருந்த உணவுப் பழக்கமெல்லாம் கடந்து போய்விட்டன. அரிசி வத்தல் மறைந்துபோய் பாக்கெட்டுகளில் அடைத்த பொட்டேட்டோ சிப்ஸ் வந்துவிட்டது. இளநீரையும் பழச்சாறுகளையும் டின் ஜூஸ் இடம் மாற்றி விட்டது. கண்ணிமைக்கும் நொடியில் கைக்கு வந்து சேரும் கலர்ஃபுல் உணவுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையா என்றால், கண்டிப்பாக இல்லை. சுவையைக் கூட்டி நீண்ட நாள்கள் பத‌ப்படுத்தக்கூடிய உணவு என விற்கப்படும்  இந்த நவீன உணவுகள் அனைத்தும் நம் உடலுக்குக் கெடுதலை மட்டுமே ஏற்படுத்துகின்றன. இந்தக் கெடுதலுக்குக் காரணம், இந்த உணவுகளில் சேர்க்கப்படும் பல வேதிப்பொருள்கள்.

மோனோ சோடியம் குளூட்டமேட் (எம்.எஸ்.ஜி – MSG)

உணவின் சுவையைக் கூட்டுவதற்காகச் சேர்க்கப்படும் ஒன்றுதான் இந்த மோனோ சோடியம் குளூட்டமேட். உணவகங்களில் தயாராகும் உணவுகள், உருளைக்கிழங்கு சிப்ஸ், ரெடிமேடு சூப் எனக் கிட்டத்தட்ட அனைத்துவகை உணவுகளிலுமே எம்.எஸ்.ஜி சேர்க்கப்படுகிறது. ஆனால், இது குறித்த பிரச்னைகள் நீண்டநாள்களாகவே இருப்பதால் பாக்கெட்டுகளின் லேபிள்களில் மோனோ சோடியம் குளூட்டமேட் எனக் குறிப்பிடாமல் `நேச்சுரல் ஃப்ளேவரிங் அல்லது குளூடமிக் ஆசிட்’ என்றே குறிப்பிடப்படுகிறது. இத்தகைய உணவுகளை உண்பதன்மூலம் எம்.எஸ்.ஜி-யின் அளவு உடலில் அதிகமாகும்போது தலைவலி, பதற்றம், நெஞ்சுவலி, சோர்வு போன்றவை ஏற்படுகின்றன. இவற்றை நீண்ட நாள்கள் எடுத்துக்கொள்வதால் உடல்எடை கூடுவதோடு, கல்லீரல் அழற்சியும் ஏற்படும்.

ஆர்செனிக் (Arsenic)

ஆர்செனிக் என்பது ஒரு வகையான தனிமம். இது நச்சுத்தன்மை வாய்ந்தது. நீர் மற்றும் காற்றில் இயற்கையாகவே ஆர்செனிக் கலந்திருக்கும். மற்ற பயிர்களைவிட அரிசி தனது வளர்ச்சியின்போது மண் மற்றும் காற்றிலிருந்து அதிகமாக ஆர்செனிக் தனிமத்தை உள்ளே எடுத்துக்கொள்கிறது. எனவே அதிகமாக அரிசி உணவு சாப்பிடுபவர்களுக்கு, ஆர்செனிக் அளவு நாளுக்கு நாள் ரத்தத்தில் அதிகரித்து நஞ்சாக மாறிவிடும். எனவே, அரிசி உணவை அளவாக எடுத்துக்கொண்டு மற்ற சிறுதானியங்களை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் ஆர்செனிக் அபாயத்திலிருந்து தப்பிக்கலாம்.

புரோமினேட்டட் வெஜிடபிள் ஆயில் (பி.வி.ஓ – BVO)

ஆயில் என்றவுடன் சமையலுக்குப் பயன்படுத்தப்படுவது என நினைக்க வேண்டாம். அனைத்துவகையான கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள், விளையாட்டு வீரர்கள் அருந்தும் பானங்கள் மற்றும் டின்களில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகளிலும் சேர்க்கப்படுவதுதான் பி.வி.ஓ.

இந்த வகையான பானங்களில் சேர்க்கப்படும் மற்ற துணைப்பொருள்கள் தண்ணீரிலிருந்து தனியே பிரிந்து பாட்டிலின் அடியில் தங்குவதால் குளிர்பானங்கள் சீக்கிரம் கெட்டுவிடும். இதைத் தடுப்பதற்காகத்தான் பி.வி.ஓ சேர்க்கப்படுகிறது. இவை உடலில் கல்லீரல் மற்றும் மூளைப்பகுதியில் உள்ள கொழுப்புகளில் அப்படியே தங்கி விடுகின்றன. இதனால்,  தோல் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதோடு நினைவாற்றலும் குறைந்துவிடுகிறது. இந்தப் பாதிப்புகள் அதிகமாக இருந்தாலும் சில பிரபலமான குளிர்பானங்களில், இன்னும் பி.வி.ஓ சேர்க்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

பொட்டாசியம் புரோமேட்

வெள்ளை நிறத்தில் உள்ள மைதா மாவால் தயாரிக்கப்படும் பிரெட்டுகளில் மிருதுவான தன்மையை அதிகமாக்கத்தான் பொட்டாசியம் புரோமேட் அதிகஅளவில் சேர்க்கப்படுகிறது. இந்த வேதிப்பொருள் மனிதர்களுக்குப் புற்றுநோயை ஏற்படுத்தும் என ஆய்வுகள் சில எடுத்துரைக்கின்றன. இந்தியாவைத் தவிர பெரும்பாலான நாடுகள் பொட்டாசியம் புரோமேட் சேர்ப்பை த் தடை செய்துவிட்டன.  பிரெட் சாப்பிடுவதை முழுவதுமே தவிர்ப்பது நல்லது. முடியாதவர்கள் வெள்ளை கலரில் உள்ள பிரெட்டுக்குப் பதிலாகக் கோதுமையில் தயாரிக்கப்படும் பிரவுன் பிரெட் எடுத்துக் கொள்ளலாம்.

செயற்கை இனிப்பூட்டிகள்

வெள்ளைச் சர்க்கரையைவிட செயற்கை இனிப்பூட்டிகளில் குறைந்த கலோரி உள்ளதாகக்கூறி சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் எடை குறைப்பவர்களுக்கான குளிர்பானங்கள் மற்றும் உணவுப்பண்டங்களில் அஸ்பார்டேம் (aspartame) அதிகம் சேர்க்கப்படுகிறது. உடலில் அஸ்பார்டேமின் அளவு அதிகரிக்கும்போது, மூளையிலுள்ள நியூரான்களின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு சிலருக்கு , இவை கலந்த உணவுகளைச் சாப்பிட்ட உடனேயே மயக்கம், தலைவலி, அலெர்ஜி போன்றவை ஏற்படும். டயட் உணவுகளில் காணப்படும் இந்த அஸ்பார்டேம் உணவின் மீதான நாட்டத்தை அதிகமாக்கி அதிக உணவை உட்கொள்ளச் செய்வதோடு, எடையைக் கட்டுப்படுத்தும் நொதிகளின் செயல்பாட்டையும் குறைத்துவிடுவதால் உடல் எடையையும் அதிகரிக்கச் செய்கிறது. சூயிங்கம், ஜெல்லி மற்றும் ரொட்டிகளில் சேர்க்கப்படும் ஆசிசல்ஃபம்-கே (acesulfame k) என்ற செயற்கை இனிப்பூட்டி சேர்க்கப்படுகிறது. இந்த இரண்டு இனிப்பூட்டிகளையுமே, விலங்குகளுக்குக் கொடுத்துப் பரிசோதித்ததில் ரத்தப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், தைராய்டு புற்றுநோய் போன்ற‌ பாதிப்புகளையும் உருவாக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

செயற்கை நிறமூட்டிகள்

ப்ளூ 1 (blue 1), ரெட் 40 (red 40), ரெட் 3 (red 3), எல்லோ 5 (yellow 5) மற்றும் எல்லோ 6 (yellow 6) போன்ற செயற்கை நிறமூட்டிகளானது கேக் வகைகள், சாக்லேட்டுகள், குளிர்பானங்கள் என அனைத்திலுமே அழகுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ப்ளூ 1 புற்றுநோயையும், ரெட் 40 குழந்தைகளின் நடத்தை தொடர்பான பிரச்னைகளையும், எல்லோ 5 மற்றும் எல்லோ 6 ஆகியவை உடலில் வீக்கம், அரிப்பு போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. எனவே,  கலர்ஃபுல் உணவுகளை வாங்கும்போது லேபிலில் குறிப்பிட்டுள்ள நிறமியின் பெயரைப் பார்த்துதான் வாங்க வேண்டும். குறிப்பாக  சிவப்பு நிறமுள்ள உணவு வகைகள் அதிக நச்சுத்தன்மை வாய்ந்தவை. ஸ்ட்ராபெர்ரியிலிருந்து பெறப்படுவதாக நினைக்கப்படும் இந்தச் சிவப்பு நிறம் இறந்துபோன  ஒரு வகையான  பூச்சிகளிலிருந்து பெறப்படுகிறது. இந்த வகையான உணவுகளின் லேபிள்களில்  Carmine அல்லது Cochineal என்ற சொற்கள் கண்டிப்பாக இருக்கும். இந்தப் பெயர்கள் குறிப்பிட்ட பொருள்களைத் தவிர்ப்பது நலம்.

பிளாஸ்டிக் நச்சுகள்

தாலேட்ஸ் (Phthalates) மற்றும் பிஸ்பீனால் ஏ (bisphenol-A (BPA)  போன்ற  வேதிப்பொருள்கள் பெரும்பாலான பிளாஸ்டிக் டப்பாக்களிலும் காணப்படும். தாலேட்ஸ்  (Phthalates) பிளாஸ்டிக் டப்பாக் கள் மட்டுமன்றி அதிகக் கொழுப்புச்சத்து மிக்க, செயற்கையாகத் தயாரிக்கப்படும் பால்பொருள்களிலும்கூடக் காணப்படு கிறது. அடைகலன்களில் உணவை வைக்கும்போது இந்த வேதிப் பொருள்கள் உணவில் கலந்து விடுகின்றன. இவை ஹார்மோன்களின் செயல்பாட்டைப் பாதிப்பதால் இனப்பெருக்க ம‌ண்டலம் அதிகளவில் பாதிக்கப்படும். குறிப்பாக, வளர் இளம்பருவத்தினரில் வளர்ச்சி மற்றும் நடத்தைகளில் அதிக அளவிலான குறைபாடுகள் ஏற்படுகின்றன. பிளாஸ்டிக் கலன்களைத் தவிர்த்து உணவுப் பொருள்களை வைக்க‌க் கண்ணாடிப் பாத்திரங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, டொமேட்டோ சாஸ் போன்ற தக்காளி தொடர்பான பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கும்போதும் பி.பி.ஏ  இல்லாத  கண்ணாடி பாட்டில்களில் வாங்க வேண்டும்.

பூச்சிக்கொல்லி மருந்துகள்

ஆப்பிள், வாழை, ஆரஞ்சு, பெர்ரி பழங்கள், தர்பூசணி எனப் பெரும்பாலான பழங்களின் உற்பத்தியின்போது குளோர்பைரிஃபாஸ் (chlorpyrifos) என்ற பூச்சிக்கொல்லி மருந்து சேர்க்கப்படுகிறது. இது மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதால் பக்கவாதம், வலிப்பு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த வகையான உணவுகளை வெளிப்புறத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவினாலும் பழங்களின் உள்ளேயும்கூட இந்த வேதிப்பொருள் இருந்துகொண்டேதான் இருக்கும். எனவே, ஆர்கானிக் பழங்களை வாங்குவது மட்டுமே இதற்கு மாற்று வழி.

குழந்தைகளிடம் ஏற்படுத்தும் பிரச்னைகள்

பெரியவர்களைவிடக் குழந்தைகளிடம்தான் இந்த வேதிப்பொருள்கள் அதிக  தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கவர்ச்சிகரமான விளம்பரங்களாலும், கலர்ஃபுல் பாக்கெட்டுகளாலும் இத்தகைய   உணவுப்பொருள்கள் தான் குழந்தைகளின் எவர்டைம் உணவாகவே மாறிவிட்டது. அன்றாட உணவில் பெரியவர்களுக்கு உணவு ஆய்வாளர்கள் பரிந்துரைக்கும் அளவைவிடவும் அதிகமாகவே குழந்தைகள் வேதிப்பொருள்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். இதனால் அதிகப் படியான வேதிப்பொருள்களும் உடலில் தங்கி அவை ஏற்படுத்தும் பாதிப்புகளும் குழந்தைகளிடம் அதிகரித்து விடுகின்றன.

* அதிக அளவிலான லெட்- குழந்தைகளில் நுண்ணறிவுத் திறனைக் (IQ ) குறைத்துவிடும்.

பைஸ்பீனால் ஏ (BPA) – ஹார்மோன் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.  கருவளர்ச்சியில் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

குளோரோபைரிஃபாஸ் (Chlorpyrifos) மற்றும் டிடிடி (DDT) போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் – நரம்பு மண்டலப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஆர்செனிக் – நினைவாற்றல் மற்றும் படிப்பதைப் புரிந்து கொள்வதில் குழந்தைகளுக்கு அதிகச் சிரமம் ஏற்படும். கர்ப்பிணிகளில் ஆர்செனிக் நச்சு உடலில் சேரும்போது பிறக்கும் குழந்தைகளுக்கு ஹைப்பர்ஆக்டிவிட்டி பிரச்னைகள் ஏற்படும்.

மீதைல் மெர்குரி – இது பெரிய பெரிய மீன்களில் அதிகமாகக் காணப்படும். கர்ப்பிணிகள் இத்தகைய மீன்களை அதிகம்  உட்கொள்ளும்போது அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு  நரம்பு மண்டலப் பிரச்னை கள் ஏற்படும்.

உணவுப் பொருள்களின் லேபிள்களில் விலையோடு சேர்த்து அதில் சேர்க்கப்படும் பொருள்களின் பெயர்களை யும் பார்க்கப் பழகுங்கள். சுவையையும் நிறத்தையும் தாண்டி, உணவென்பது ஆரோக்கியத்துக்கானதாக அமையட்டும்.

%d bloggers like this: