ஏன்? எதற்கு? எதில்? – துத்தநாகம்

துத்தநாகம்… நற்சோரம், அஞ்சுவர்ண நிறத்தோன் என சித்தர்களால் அழைக்கப்படும் ஓர் உலோகம். நாம் உண்ணும் உணவில் புரதம் போன்ற சத்துகளைக் கிரகித்துக்கொள்ள நூற்றுக்கும் மேலான என்சைம்கள் வேலை செய்கின்றன. அவற்றை ஊக்கப்படுத்தும் பணியைத் துத்தநாகம் செய்கிறது. கருவின் வளர்ச்சியில் புரதக்கட்டுமானப் பணிக்கு உதவுவதால் கர்ப்பிணிகள் மற்றும்

பாலூட்டும் தாய்மார்களுக்குத்  துத்தநாகம் மிகவும் அவசியமானது. அடிபட்டால் ஏற்படக்கூடிய காயம் ஆறுவதற்கும் கண், சருமம், தலைமுடி ஆரோக்கியத்துக்கும் வாசனைகளை அறியும் திறனுக்கும் உதவக்கூடியது. ஆனால், இந்த துத்தநாகம் நமது உடலில் சேமிக்கப்படுவதில்லை. எனவே,  உணவு மற்றும் ஊட்டச்சத்து மருந்துகளின் மூலம்தான் இதைப் பெற முடியும்.
துத்தநாகம் போதுமான அளவு கிடைக்கா விட்டால் ஜீரண உறுப்பின் ஆரோக்கியமும், வளர்சிதை மாற்றமும் பாதிக்கப்படும். சரும ஆரோக்கியம் குறைந்து முடி உதிர்தல், வளர்ச்சிக் குறைபாடு போன்றவை ஏற்படும்.

எவ்வளவு தேவை?
6 மாதக் குழந்தைக்கு – 2 மி.கி
  1 முதல் 3 வயது – 3 மி.கி
9 முதல் 13 வயது – 8 மி.கி.
14 முதல் 18 வயது – 9 மி.கி.
19 வயது முதல் – 8 மி.கி.
கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு 13 மி.கி வரை தேவைப்படுகிறது.

எதில் துத்தநாகம்?
பூசணி விதையில் உயர்தர துத்தநாகம் அடங்கியுள்ளது.
இனிப்பில்லாத டார்க் சாக்லேட்
கோக்கோ பவுடர்
பூண்டு
கறுப்பு எள்
தர்பூசணி விதை
கோதுமைத் தவிடு (100 கிராமில் 17 மி.கி. அளவு துத்தநாகம் உள்ளதால் நமது ஒருநாளின் தேவையைப் பூர்த்தி செய்கிறது. அதனால்தான் தவிட்டைச் சலிக்காமல் கோதுமை மாவைப் பயன்படுத்த வேண்டும் அல்லது கடைகளில் கிடைக்கும் கோதுமைத் தவிட்டை  வாங்கி சாலட், பொரியல், இட்லி, தோசை மாவில் கலந்து பயன்படுத்தலாம்.)
இவை தவிர கொண்டைக்கடலையிலும் துத்தநாகம் உள்ளது.

%d bloggers like this: