நான் வளர்கிறேனே மம்மி! – கர்ப்ப காலம் A to Z

ர்ப்பகாலம்… நிறைய அன்பையும், பெரிய பொறுப்பையும் பெண்கள் சுமக்கும் சுகானுபவம். ஒரு கருவை உயிராக வளர்க்கும் அந்தக் காலகட்டத்தில், ஒவ்வொரு மாதத்திலும் நிகழும் சிசுவின் வளர்ச்சி மற்றும் தாயின் உடல்நிலையில் ஏற்படும்

மாற்றங்கள் என்னென்ன என்பன பற்றி விளக்கமாகச் சொல்கிறார், மதுரையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஹேமலேக்கா.

முதல் மூன்று மாதங்கள்!

முறையான மாதவிலக்கு சுழற்சி இருப்பவர்களுக்கு மாதவிலக்கு ஒரு வாரத்திற்கு மேல் தள்ளிப் போயிருந்தால், கர்ப்பம் அடைவதற்கான சாத்தியக்கூறுகளை முன்னிறுத்தி சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு, வயிற்றில் ஒருவித அழுத்தம், மார்பகம் சற்று மென்மையானது போலவும், பெரிதானது போலவும் உணர்வது, சோர்வு, குமட்டல், வாந்தி… இவற்றையெல்லாம் கர்ப்பத்துக்கான அறிகுறிகளாகக் கொள்ளலாம்.

 

சிறுநீர்ப் பரிசோதனையில் கர்ப்பம் உறுதியானதும், தொடர்ந்து ஸ்கேன், ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும். இதில் ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை, தைராய்டு, ஆர்.எச். ஃபேக்டர், ரத்த வகை, இரும்புச் சத்துக் குறைபாடு மற்றும் ருபெல்லா  கிருமித் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி போன்றவை கண்டறியப்படும். சிறுநீரகப் பரிசோதனையில் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிந்து, சிகிச்சைகள்  அளிக்கப்படும். இதய நோய், தைராய்டு பிரச்னை உள்பட வேறு ஏதாவது உடல்நலக் குறைபாடு காரணமாக மாத்திரை, மருந்துகள் சாப்பிடுகிறவராக இருந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற்று,  அவற்றைத் தொடரலாம். தலைவலி, வாந்தி, மயக்கம் போன்ற எந்தத் தொந்தரவுகள் இருந்தாலும் சுய மருத்துவம் செய்து கொள்ளக்கூடாது. மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்னரே மாத்திரைகள்  சாப்பிட  வேண்டும். மருத்துவர் சிசுவின் சீரான வளர்ச்சிக்குப் பரிந்துரைக்கும் ஃபோலிக் ஆசிட், மல்டி வைட்டமின் மாத்திரைகளைத் தவறாமல் சாப்பிட வேண்டும். சத்தான உணவுகளைச் சாப்பிடும்போது, வயிற்றில்  வளரும்  கருவுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் தாது உப்புகளை  இயற்கையான முறையில் பெற முடியும்.

இரண்டாம் மாதத்தில் குழந்தையின் ரத்த ஓட்ட மண்டலம் வளர்ச்சி அடையும். குழந்தையின் இதயம் துடிக்க ஆரம்பிக்கும். இந்த மாதத்தில் தாய்க்குச் சோர்வு, குமட்டல்,  மலச்சிக்கல், நெஞ்சு எரிச்சல், வாயுத் தொல்லை, உணவு மீதான வெறுப்பு, தலைவலி போன்றவை ஏற்படும். வாந்தி ஏற்படுபவர்கள், உணவைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பிட வேண்டும். அதிக மசாலா கலந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதிகமான சோர்வு ஏற்படும் என்பதால் நன்கு ஓய்வு எடுக்க வேண்டும். வயிற்றில்  இருக்கும் கருவின்  வளர்ச்சியைக்கொண்டு, இந்த மாதத்தில் பிரசவத் தேதியை மருத்துவர் கணக்கிடுவார்.

மூன்றாம் மாதத்தில், கரு உருவாகி எட்டு வாரங்கள் கடந்த நிலையில், எலும்பு செல்கள், மென்மையான கார்டிலேஜ் செல்கள் உருவாகும். குழந்தையின் முகத்தில் உள்ள உறுப்புகள் உருவாகும். ஈறுகளுக்கு அடியில் பற்களும் முளைக்க ஆரம்பிக்கும். கைகளில், விரல்கள்  தோன்றும். இம்மாதத்தில் குழந்தையின் இதயத் துடிப்பை அல்ட்ரா சவுண்டு ஸ்கேனில் துல்லியமாகக் கேட்க முடியும். குழந்தை மூன்று இன்ச் உயரமும், கிட்டத்தட்ட 30 கிராம் எடையும் இருக்கும். இந்த மாதத்திலிருந்து தாயின் எடை அதிகரிக்கத் துவங்கும். சிலருக்கு எடை குறையவும் வாய்ப்புள்ளது. மனதளவில் `நாம் கருவுற்றிருக்கிறோம்’ என்ற எண்ணம், சந்தோஷத்தை ஏற்படுத்தும்.

குழந்தையின்  எலும்பு வளர்ச்சிக்குக் கால்சியம் மிகவும் அவசியம். கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவை  எடுத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி பால் பருகுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனைப்படி, 13-வது வாரத்தில், டவுன் சிண்ட்ரோம் உள்ளிட்ட மரபணுக் குறைபாடு  பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வாந்தி, குமட்டல் போன்றவை பெரும்பாலான  பெண்களுக்கு மூன்றாவது மாதத்திலேயே சரியாகிவிடும். சிலருக்குக் கர்ப்பகாலம் முழுவதுமே லேசான குமட்டல் இருக்கலாம். வெறும் வயிற்றில் இருப்பதும் குமட்டலை அதிகரிக்கச் செய்யும் என்பதால் தவிர்க்கவும்.

இரண்டாவது மூன்று மாதங்கள்!

நஞ்சுக்கொடியும், குழந்தையின் அனைத்து உறுப்புகளும் நான்காவது மாதத்தில் தோன்றி இருக்கும். இப்போதிருந்தே சிசு பெரிதாகத் தொடங்கும். வெளிப்புற பாலின உறுப்புகள் வளர்ச்சியடைய ஆரம்பிக்கும். குழந்தை தூங்குவதும் விழிப்பதுமாக இருக்கும். வெளிப்புறச் சத்தங்களைக் கேட்கத் தொடங்கும். குழந்தை ஐந்து முதல் ஆறு இன்ச் அளவுக்கு வளர்ந்திருக்கும். அதன் எடை, 110-120 கிராம்  இருக்கும். இந்த மாதத்தில் இருந்து சிசுவின் அசைவை உணரலாம்.

இந்தக் காலத்தில், தாய்க்குச் சருமத்திலும் மாற்றங்கள் தெரியும். ஊட்டச்சத்துக் குறைபாடு  காரணமாக, சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படலாம். ரத்தக்குழாய்கள் அதிகளவில் வேலை செய்யும்.  கருப்பைக்கு முன்பைக் காட்டிலும் இரண்டு மடங்கு ரத்த ஓட்டம் தேவைப்படும்.  சிறுநீரகத்துக்கு 25% அதிகமாக ரத்த ஓட்டம்  தேவைப்படும். எனவே, இதயம் அதிக அளவில் வேலை செய்யும். மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களிடம் ஆலோசித்து, எளிய  உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்க வேண்டும்.  தொடர்ச்சியாக எளிமையான பயிற்சிகள் செய்வது, தாய்க்கும் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ஆரோக்கியத்தைத் தரும். நேரம் தவறாமல், சத்தான உணவைச் சாப்பிட வேண்டும். கர்ப்பகாலத்தில்  தொடர்ந்து நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்த, நல்ல புத்தகங்கள் வாசிப்பது, இனிமையான பாடல்கள் கேட்பது வயிற்றில் வளரும் கருவுக்கு ஆரோக்கியமான உடல், மன வளர்ச்சியைக் கொடுக்கும்.

இம்மாதத்தில் டெட்டனஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

ஐந்தாவது மாதம் குழந்தையின் இதயத் துடிப்பைச் சாதாரண `ஸ்டெதாஸ்கோப்’ மூலமாகவே கேட்க முடியும். குழந்தையின் எலும்புகள் வலுவடையத் தொடங்கும்.எலும்பு மஜ்ஜைகள் உருவாக ஆரம்பிக்கும். இந்த எலும்பு மஜ்ஜையே, ரத்தச் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு வளர்ச்சி அடையும். சிறுநீரகம் முன்பைக்காட்டிலும் அதிக ஆற்றலுடன் செயல்படும். குழந்தை, 8 முதல் 12 இன்ச் வளர்ந்திருக்கும். எடை கிட்டத்தட்ட அரை கிலோ இருக்கும்.

சாப்பிட்டதும் நெஞ்சு எரிச்சல், செரிமானக் குறைபாடு போன்றவற்றால் கர்ப்பிணி பாதிக்கப்படலாம். மலச்சிக்கல் மற்றும் இடுப்பு வலி ஏற்படலாம். இடுப்பு  எலும்புப் பகுதி தளர்வு பெறுவதால், இந்த வலி வழக்கமான ஒன்றுதான். வலி அதிகமாகவோ, அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதாகவோ இருந்தால், டாக்டரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.  சிலருக்கு மார்பகத்தில் ஒருவகையான திரவம் சுரக்கலாம், கவலை வேண்டாம். இம்மாதத்தில் குழந்தையின் உள்ளுறுப்புகளில் குறைபாடு ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய, ‘அனாமலி ஸ்கேன்’ செய்து பார்க்க வேண்டும். சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.

சர்க்கரை அளவைத் தெரிந்து கொள்வதோடு, ரத்தத்தில் ஹீமோகுளோபின்  அளவு 11 கிராமிற்குக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும், உணவு உட்கொள்வதைக் குறைத்துக்கொள்ளக்கூடாது. நார்ச்சத்துள்ள  காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

ஆறாம் மாதம் குழந்தைக்கு இனப்பெருக்க மண்டலம் உருவாகும். குழந்தையின் உயரம் 11 முதல் 14  இன்ச் இருக்கும். எடை 400 முதல் 650 கிராம் இருக்கும். கர்ப்பப்பை  பெரிதாவதால், இடுப்புப் பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்தும். குழந்தையின் அசைவுகளை தினமும் உணர முடியும். உடல் எடை  அதிகரிக்கும். நெஞ்சு எரிச்சல், முதுகுவலி, வெரிகோசிஸ்  வெயின் போன்ற உடல் உபாதைகள் தோன்றும். இம்மாதத்தில் சிலருக்குக் குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், அதன் அறிகுறிகள் ஏதேனும் ஏற்படுகிறதா என்ற  விழிப்புடன் இருக்க வேண்டும். டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

மூன்றாவது மூன்று மாதங்கள்!

ஏழாவது மாதத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். இருள், வெளிச்சத்தை சிசு உணரும். குழந்தை 15 முதல் 17 இன்ச் உயரம் இருக்கும். எடை 1.1 கிலோ முதல் 1.3 கிலோ வரை இருக்கும். தூக்கமின்மை, மூச்சுத்திணறல், கால் வலி, உள்ளங்கை, பாதங்களில் குடைச்சல், வயிற்றுப் பகுதியில் தோல் விரிவதன் அடையாளங்கள் தோன்றும். கர்ப்பப்பை,  சிறுநீர்ப்பையில்  அழுத்தம் கொடுப்பது அதிகரிக்கும். இதனால், அடிக்கடி சிறுநீர் கழித்தல் பிரச்னை ஏற்படும். முதுகு வலியும் ஏற்படும்.

மலச்சிக்கல், மூலநோய் ஏற்படலாம். இந்த மாற்றங்கள், அவரவர்  உடல்நிலை, எடை,  உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்து வேறுபடலாம். பிரசவம் பற்றிய விழிப்பு உணர்வு இருப்பது நல்லது. இதற்கான வகுப்புகளில் பங்கேற்கலாம். பிரசவம் தொடர்பான புத்தகங்களை  வாசிக்கலாம். பிரசவத்தை எதிர்கொள்வது பற்றி, டாக்டர் சொல்லித்தந்த பயிற்சிகளைத்  தொடர்ந்து செய்ய வேண்டும். இரண்டாவது பிரசவத்தை எதிர்நோக்கும் பெண்கள் என்றாலும், டாக்டரிடம் கேட்டே பயிற்சி  முறைகளைச் செய்ய வேண்டும்.

எட்டாவது மாதம் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம் முழு வளர்ச்சி அடையும். குழந்தையின் அனைத்து உறுப்புகளும் செயல்படத் துவங்கும். வயிற்றின் தோல் வழியே ஊடுருவும் வெளிச்சத்தை, குழந்தை உணரத் தொடங்கும். சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கும். இம்மாதத்தில் குழந்தையின் பல்வேறு அசைவுகளைத் தாயால் நன்கு உணர முடியும். குழந்தை 2.5  கிலோவும், 45 செ.மீ. உயரமும் இருக்கும்.

சில பெண்களுக்கு இந்த மாதத்தில் அடிக்கடி பிரசவ வலி போல் உருவாகி நீங்கும். கருப்பையின் தசைகள் உறுதியாவதற்காக உடல் மேற்கொள்ளும் தற்காப்புப் பயிற்சி இது. சோர்வு, நெஞ்சு எரிச்சல்,  தூக்கம், மலச்சிக்கல், கால்வலி போன்ற பொதுவான பிரச்னைகள் ஏற்படலாம். ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனை  மற்றும்  சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கர்ப்பப்பைப் பெரிதாவதால், இடுப்பு எலும்பில் அழுத்தம் அதிகரிக்கும். இதற்காக மருத்துவரின் ஆலோசனை பெற்று, பிரத்யேக உடற்பயிற்சி செய்ய வேண்டும். எளிமையான வீட்டு வேலைகள், நடைப்பயிற்சி போன்றவை பிரசவத்தைச் சுலபமாக்கும்.

ஒன்பதாவது மாதம் குழந்தை 46 செ.மீ. அளவுக்கு வளர்ந்திருக்கும். 2.7 கிலோவுக்கு மேல் இருக்கும். குழந்தையின் எடை என்பது, தாயின் உடல்நிலை, எடுத்துக்கொண்ட சத்தான உணவு   மற்றும் மரபியல் சார்ந்து வேறுபடும். இப்போது குழந்தை மூச்சுவிடுதல் பயிற்சியைச் செய்யத் தொடங்கும். இம்மாத இறுதியில் குழந்தை வெளிவரத் தயாராகிவிடும். எந்த நிலையில்  வெளியேற  வேண்டும் என்பதையும் குழந்தையால் உணர முடியும். குழந்தை வெளியேற வசதியாக இடுப்புப் பகுதியைத் தளர்த்தும் பணியில் உடல் ஈடுபடும். இதற்கான ஹார்மோன் சுரந்து, இடுப்பு  எலும்பு மற்றும்  மூட்டுப் பகுதியிலும் தளர்வை ஏற்படுத்தும். தூக்கம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். குழந்தை, இடுப்புப் பகுதியை நோக்கி நகர்வதால், மூச்சுவிடுவது கொஞ்சம் எளிதாகும்.

 

எப்போது பிரசவம்  ஏற்படும் என்ற கேள்வி மனதில் எழுந்துகொண்டே இருக்கும். நன்கு ஓய்வெடுக்க வேண்டும். குழந்தையின் அசைவை உற்று கவனிக்க வேண்டும். அசைவு குறைவதுபோல் தோன்றினால், உடனடியாக  மருத்துவரை அணுக வேண்டும். பிரசவத்தை எளிமையாக்க,  சொல்லிக்கொடுக்கப்பட்ட பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். ஒன்பது மாதம் முடியும் தருவாயில் எப்போது வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். கருப்பையின் தசைகள் இறுகும். இது குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து ஏற்பட்டு, பின்னர் நீடிக்கும். முதுகின் கீழ்ப்பகுதியில் வலி ஏற்படும். பிறப்புறுப்பில் ரத்தக் கசிவுடன்கூடிய திரவம் வெளிப்படும். பனிக்குடம் உடைய ஆரம்பிக்கும். வலி ஏற்பட்டதுமே மருத்துவமனைக்குச் சென்றுவிடுதல், பிரசவ நேர அவசரநிலையைத் தவிர்க்க உதவும்.”


கர்ப்ப காலத்திற்கான ஸ்பெஷல் உணவுகள்

கர்ப்ப காலம் என்பது பெண்களின் வாழ்வில் மறக்க முடியாத தருணம். கர்ப்பம் தரித்தது முதல் பிரசவம் ஆகும் வரை தாய் மற்றும் சேயின் உடல் ஆரோக்கியத்திற்குச் சத்தான உணவுகளை உண்பதோடு, மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் தாய், சேய் உடல் ஆரோக்கியத்திற்கு சுவையான, ஹெல்தியான ரெசிப்பி களைச் செய்து காட்டியிருக்கிறார் ராஜ்மோகன். அவற்றின் பலன்களைப் பட்டியலிடுகிறார் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டயட்டீஷியன் ஜெயந்தி ஆள்.

 

 

கறுப்பு உளுந்து சாதம்

தேவையானவை: கறுப்பு உளுத்தம் பருப்பு – 75 கிராம், வரகு அரிசி – 150 கிராம், பூண்டுப் பல் – 2 (தட்டி வைக்கவும்), காய்ந்த மிளகாய் – ஒன்று, சீரகம் – கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல், வெண்ணெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, தண்ணீர் – தேவையான அளவு.

தாளிக்க: வெண்ணெய்-2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் பூண்டு, சீரகம், காய்ந்தமிளகாய், உப்பு சேர்க்கவும்.இத்துடன் கறுப்பு உளுந்து சேர்த்து வேக விடவும். ஐந்து நிமிடம் கழித்து வரகு அரிசி, வெண்ணெய் சேர்த்துக் கிளறி விடவும். கலவை நன்கு வெந்து வரும்போது தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி, மூடிப் போட்டு மிதமான தீயில் ஐந்து நிமிடம் வைத்து இறக்கவும். தாளித்துச் சாதத்துடன் சேர்த்துச் சூடாக சுவைக்கலாம்.

பலன்கள்: கறுப்பு உளுத்தம் பருப்பு மற்றும் வரகு அரிசியில் புரோட்டீன், இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகளவில் உள்ளன. குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். கர்ப்ப கால  முதுகுவலியையும், சர்க்கரை வியாதியையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.

கோதுமை ரவை கஞ்சி

தேவையானவை: கோதுமை ரவை – ஒரு கப், சின்ன வெங்காயம் – 5 ( பொடியாக நறுக்கவும்), மோர் – ஒரு கப், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு, கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை: பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் கோதுமை ரவை சேர்த்து வேக விட்டு இறக்கவும். ஆறிய பின் ரவையுடன் மோர், சின்ன வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை, சீரகத்தூள் சேர்த்துக் கலந்து பருகலாம்.

பலன்கள்: கோதுமை ரவை, சின்ன வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரோட்டீன் உள்ளன. கர்ப்பக்காலத்தின் முதல் மூன்று மாதத்தில் வரும் குமட்டல், வாந்தியைக் கட்டுப்படுத்த இவை உதவும். எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு.

முருங்கைக்கீரை பருப்பு சோர்பா

தேவையானவை: முருங்கைக்கீரை – ஒரு கப், துவரம்பருப்பு – 50 கிராம், சின்ன வெங்காயம் – 5 (பொடியாக நறுக்கவும்), சீரகம் – அரை டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தக்காளி – ஒன்று ( பொடியாக நறுக்கவும்) , பூண்டு – 4 பல் (ஒன்றிரண்டாகத் தட்டவும்), நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு, அரிசி கழுவிய தண்ணீர் – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்துடன் மிளகு, சீரகம் சேர்த்துத் தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். முருங்கைக்கீரையைக் கழுவி குக்கரில் துவரம் பருப்பு, அரிசி கழுவிய தண்ணீர், அரைத்த விழுது, மஞ்சள்தூள், தக்காளி, பூண்டு, உப்பு, நல்லெண்ணெயுடன் சேர்த்து மூடி, மூன்று விசில் விட்டு இறக்கவும். ஆறிய பின் வடிகட்டிப் பருகலாம்.

பலன்கள்: முருங்கைக்கீரையில் ஏராளமான இரும்புச்சத்து, வைட்டமின், ஃபோலிக் ஆசிட், நார்ச்சத்து உள்ளன. கர்ப்பக்காலத்தில் தாய் மற்றும் குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு நல்லது. துவரம்பருப்பு சேர்ப்பதால் புரோட்டீன் அதிகளவில் கிடைக்கும். மலச்சிக்கலை விரட்டும்.

கலவை மோர்

தேவையானவை: தயிர் – ஒரு கப், மாங்காய்த் துண்டுகள் – 4 டீஸ்பூன், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை – சிறிதளவு , சின்ன வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), சீரகத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தயிருடன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்து எடுக்கவும். பிறகு, கண்ணாடிக் கோப்பைகளில் ஊற்றி மேலே மாங்காய்த் துண்டுகள், சீரகத்தூள் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறலாம்,

பலன்கள்: இதில் வைட்டமின் சி, கரோட்டின், ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ், ஓமேகா 3, ஆல்பா கரோட்டீன், பீட்டா கரோட்டீன் அதிகளவில் உள்ளன. கண் நோய்களிலிருந்து காக்க உதவும். கார்ப்பக் காலத்துக்குத்  தேவையான கால்சியம் கிடைக்க உதவும். காலையில் ஏற்படும் வாந்தி, மயக்கத்தைத் தடுக்கும்.

கருவாடு – பூண்டு குழம்பு

தேவையானவை: கருவாடு-75கிராம், சின்ன வெங்காயம்–5, பச்சைமிளகாய்-ஒன்று, பூண்டு–8 பல், தக்காளி–ஒன்று, புளி–எலுமிச்சை அளவு, தனியாத்தூள்- ஒன்றரை டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள்- ஒரு டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு, கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன்.

அரைக்க: தேங்காய்த்துருவல் – இரண்டு டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 2

செய்முறை: கருவாட்டை வெந்நீரில் ஊறவைத்து, கழுவித் தனியாக வைக்கவும். தேங்காய்த் துருவலுடன் வெங்காயம் சேர்த்துத்  விழுதாக அரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் பச்சைமிளகாய், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கி புளிக்கரைசல்  ஊற்றி ஒரு கொதி விடவும். மிளகாய்த்
தூள், தனியாத்தூள், உப்பு, அரைத்த விழுது, கருவாடு சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்க குழம்பு தயார்.

பலன்கள்: பூண்டில் நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைய உள்ளது. கர்ப்பக் காலத்தில் காய்ச்சல் மற்றும் சளி வராமல் தடுக்கும்.

மல்டி க்ரெய்ன் தோசை

தேவையானவை: சிறு தானிய மாவு – 300 கிராம், மோர் – 130 மிலி, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு (பொடியாக நறுக்கவும்) தோல் சீவிய இஞ்சித் துருவல்- அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம்-10 (பொடியாக நறுக்கவும்) மிளகு – அரை டேபிள்ஸ்பூன், முருங்கைக்கீரை – கைப்பிடியளவு.

செய்முறை: பாத்திரத்தில் மாவுடன் உப்பு, மோர் சேர்த்து தோசைமாவு பதத்துக்குக் கரைத்து அரை மணி நேரம் ஊறவிடவும். மற்றொரு பாத்திரத்தில் சின்ன வெங்காயம், இஞ்சித் துருவல், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, முருங்கைக்கீரை, மிளகு சேர்த்துக் கலந்து வைக்கவும். தோசைக்கல்லை காய வைத்து, மாவை ஊற்றி மேலே கீரைக் கலவையை சிறிதளவு தூவி எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுத்து சாப்பிடவும்.

பலன்கள்: மல்டி க்ரெய்ன் தோசையில் தாய்க்கும், சேய்க்கும் தேவையான தாது உப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகளவில் உள்ளன. நல்ல உற்சாகத்தை அளிக்கக்கூடிய உணவு. கர்ப்பகால மலச்சிக்கலைத் தடுக்க உதவும்.

கிங் ஸ்மூத்தி

தேவையானவை: ஆப்பிள், கேரட் – ஒன்று, பீட்ரூட் – ஒரு சிறிய துண்டு, பாதாம், முந்திரிப்பருப்பு – தலா 5 (பொடியாக நறுக்கவும்) , தேன் – 3 டேபிள்ஸ்பூன், பால் – ஒரு கப் (காய்ச்சி ஆற வைத்தது), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை: ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட்டின் தோலைச் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் பால், தேன், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து எடுக்கவும். பிறகு பாத்திரத்தில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். மேலே பாதாம், முந்திரி அலங்கரித்து பரிமாறலாம்.

பலன்கள்: கர்ப்பகாலத்தில் உடலுக்கு ஆற்றலையும், உற்சாகத்தையும் தரக்கூடியது. இதில் அதிகளவில் வைட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. குழந்தையின் எடையை அதிகரிக்க ஏற்ற உணவு.

பேரீச்சம் பீட்ரூட் ஸ்வீட்

தேவையானவை: பீட்ரூட் – 200 கிராம், பேரீச்சம் பழம் (விதை நீக்கியது) – 180 கிராம், பாதாம் துருவல், முந்திரித் துருவல் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 50 மிலி, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், பனங்கற்கண்டு – 10கிராம்.

செய்முறை: பீட்ரூட்டின் தோலைச் சீவி தண்ணீர் விட்டு வேக வைத்துத் துண்டுகளாக்கவும். வெந்த பீட்ரூட்டை தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து எடுக்கவும். பீட்ரூட் வேக வைத்த தண்ணீருடன், பேரீச்சம்பழத்தைச் சேர்த்து நன்கு நைசாக மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் நெய்யைச் சூடாக்கி பீட்ரூட் விழுது, பேரீச்சம்பழம் விழுது சேர்த்து நன்கு கிளறவும்.தண்ணீர் முழுவதும் சுண்டியதும் முந்திரி, பாதாம், பனங்கற்கண்டு சேர்த்துக் கிளறி இறக்கினால் சுவையான ஸ்வீட் ரெடி.

பலன்கள்: அதிகளவில் இரும்புச்சத்து நிறைந்த உணவு. கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கும், தாயின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.

பாலக்கீரை க்ரீம் சூப்

தேவையானவை: பாலக்கீரை – 3 கட்டு (பொடியாக நறுக்கவும்), மசூர் பருப்பு – 100 கிராம், மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பூண்டு – 3 பல், சின்ன வெங்காயம் – 5, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்), உப்பு – தேவையான அளவு, ஃப்ரெஷ் க்ரீம் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். குக்கரில் கீரை, மசூர்பருப்பு, அரைத்த விழுது, மஞ்சள்தூள், தக்காளி, உப்பு , தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி நான்கு விசில் விட்டு இறக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, மேலே ஃப்ரெஷ் க்ரீமைச் சேர்த்துப் பரிமாறினால் பாலக்கீரை சூப் தயார்.

பலன்கள்: பாலக்கீரையில் அதிகளவில் இரும்புச்சத்து, வைட்டமின் உள்ளன. எனர்ஜி அளவை அதிகரிக்க உதவும். அன்றாடப் பணிகளை உற்சாகமாக களைப்பின்றி செய்ய உதவும். கர்ப்ப காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் நல்ல ஆற்றலையும், சத்தையும் தரவல்லது. கரப்பகால சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும்.

பழம் பொங்கல்

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், பேரீச்சம்பழம் – 2 (பொடியாக நறுக்கவும்), ஏலக்காய்த்தூள்- ஒரு சிட்டிகை, பழக்கூழ் – ஒரு கப் (விருப்பமான ஏதேனும் இனிப்பான பழம்), தேன் – 2 டீஸ்பூன், வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,

செய்முறை:  பச்சரியை தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து எடுக்கவும். இதனுடன் தேன், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். சூடு ஆறிய பின்பு பழக்கலவையை, வெண்ணெய் சேர்த்துக் கிளறி மேலே பேரீச்சை துண்டுகளால் அலங்கரித்துப் பரிமாறலாம். (குறிப்பு : மாம்பழம், பப்பாளி, ஆப்பிள், அன்னாசிப் பழம், சப்போட்டா பழங்களின் தோலைச் சீவி சதைப்பகுதியை மட்டும் எடுத்து நன்கு மசிக்கவும். இதுவே பழக்கூழ்)

பலன்கள்: பழங்களில்  அதிகளவில்  இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் இருக்கும். கொழுப்புச்சத்து மிதமாக இருக்கும். உடலுக்கு நல்லது.  பழங்களில் உள்ள சத்துகளோடு, சோடியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சி  மற்றும்  ஆன்டிஆக்ஸிடன்ட்  அதிகளவில் இருப்பதால் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரக்கூடியது. ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன், எப்போதும் உற்சாகமாக இருக்க உதவும்.

மீன் மொய்ழி

தேவையானவை: சங்கரா மீன்–2, பெரிய வெங்காயம் தேவையான அளவு, பச்சை மிளகாய் – ஒன்று, பூண்டுப்பல்–2, தோல் சீவிய இஞ்சி – ஒரு இன்ச், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தக்காளி – ஒன்று, தேங்காய்ப் பால் (முதல் பால், இரண்டாம் பால்) – தலா 200மிலி, தேங்காய் எண்ணெய்-2 டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை: பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து லேசாகக் கிளறவும். நன்கு வதங்கியதும் மஞ்சள்தூள், இரண்டாம் தேங்காய்ப் பால் ஊற்றி ஒரு கொதி விடவும். பிறகு மீன் துண்டுகள், உப்பு சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். மீன் துண்டுகள் வெந்ததும் முதல் தேங்காய்ப் பால் ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். இதன் மீது தக்காளி அலங்கரித்துப் பறிமாறலாம்.

பலன்கள்: மீனில் கர்ப்பகாலத்திற்குத் தேவையான புரதச்சத்து அதிகளவில் உள்ளது. தேங்காய்ப்பால் உடலை உற்சாகமாக வைத்திருக்க உதவும்.

மாதுளை ஜில் ஜில்

தேவையானவை: மாதுளம்பழம் – 2, தோல் நீக்கிய இஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன், புதினா இலை – 2, தேன் – 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – சிறிதளவு, ஐஸ் கியூப்ஸ் – சிறிதளவு.

செய்முறை: மாதுளை முத்துக்களுடன் இஞ்சி, தேன், புதினா மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் நுரை வரும் வரை அடிக்கவும். பிறகு வடிகட்டி ஐஸ்கட்டிகளைச் சேர்த்துப் பரிமாறலாம்.

பலன்கள்: மாதுளையில் அதிகளவில் வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளன. கர்ப்பக்காலத்தில் தாய் மற்றும் குழந்தையை ஏராளமான நோய்களில் இருந்து காக்க வல்லது. குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுவதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கும்.

புரோக்கோலி சூப்

தேவையானவை: புரோக்கோலி – ஒன்று, பூண்டுப் பல் – 2, வெண்ணெய், உப்பு – தேவையான அளவு, வெள்ளை மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், கெட்டியான தேங்காய்ப் பால் – 3 டேபிள்ஸ்பூன், வெங்காயம் – 1(பொடியாக நறுக்கவும்) , உருளைக்கிழங்கு – அரை துண்டு, பாதாம் துருவல் – சிறிதளவு, தண்ணீர் – தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு உருகியதும் பூண்டு, வெங்காயம், உருளைக்கிழங்கு, புரோக்கோலி, உப்பு சேர்த்து வதக்கித் தண்ணீர் விட்டு வேக விடவும். ஆறிய பின் நைசாக அரைத்து எடுக்கவும். இதனுடன் மிளகுத்தூள், தேங்காய்ப் பால், தேவையான அளவு தண்ணீர் விட்டு சூப் பதத்திற்குக் கரைத்து, மிதமான சூட்டில் ஒரு கொதி விட்டு இறக்கவும். மேலே பாதாம் துருவல் அலங்கரித்து புரோக்கோலி சூப்பைப் பரிமாறலாம்.

பலன்கள்: புரோக்கோலியில் ஏராளமான இரும்புச்சத்து, புரதம் உட்பட பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளன. கர்ப்பகாலத்தில் ஏற்படும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியத்தை அளிக்க ஏற்ற உணவு.

க்ரிஸ்பி சங்கரா

தேவையானவை: சங்கரா மீன் – 6,வெள்ளை மிளகுத்தூள் – தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு – பத்து டீஸ்பூன், தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், பூண்டுப் பல் – 3 (பொடியாக நறுக்கவும்), செலரி துண்டுகள் – 2 (பொடியாக நறுக்கவும்), முட்டை – 3, பிரெட் க்ரம்ப்ஸ் – 250 கிராம், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முட்டையுடன் உப்பு சேர்த்து அடித்து வைக்கவும். தட்டில் தக்காளி சாஸ், பூண்டு, செலரி, மிளகுதூள் , உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சுத்தம் செய்த சங்கரா மீனை சேர்த்துப் புரட்டி ஒரு மணி நேரம் ஊற விடவும். பிறகு மீன் துண்டுகளை முட்டை கலவையில் முக்கியெடுத்து பிரட் க்ரம்ப்ஸில் புரட்டி எடுக்கவும். மீன் துண்டுகளை ஒரு தட்டில் அடுக்கி 180 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்ட அவனில் 25 நிமிடம் வரை பேக் செய்து எடுக்கவும்.

பலன்கள்: சங்கரா மீனில் புரதச்சத்து அதிகளவில் உள்ளது. தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு.

வெந்தயக் கஞ்சி

தேவையானவை: வெந்தயம் – 3 டேபிள்ஸ்பூன், அரிசி – 6 டீஸ்பூன் , ஏலக்காய்த்தூள் – சிட்டிகை, கருப்பட்டி – 50 கிராம், பசும்பால் (காய்ச்சி ஆற வைத்தது) – 300மிலி.

செய்முறை: பாத்திரத்தில் கருப்பட்டியைச் சேர்த்து அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு இறக்கி வடிகட்டவும். வெந்தயத்துடன் அரிசி சேர்த்து கொர கொரப்பாக ரவை போல பொடித்து எடுக்கவும். பாத்திரத்தில் அரைத்த அரிசியுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். நன்கு வெந்து கஞ்சி பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், கருப்பட்டி கரைசலை ஊற்றிக்  கிளறவும். பிறகு பாலைச் சேர்த்து மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கவும்.. வெந்தயக்கஞ்சி தயார். குறிப்பு: வெந்தயம் , அரிசியை வறுக்க வேண்டாம்.

பலன்கள்: எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. வெந்தயக் கஞ்சியில் ஏராளமான நார்ச்சத்து, இரும்புச்சத்து உள்ளன. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். குழந்தை பிறந்த பின்னர் பாலின் அளவை அதிகரிக்க ஏற்ற உணவு. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவல்லது.

%d bloggers like this: