எதற்காக கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை? காரணம் சொல்லும் எஃப்ஐஆர்

ஐ.என்.எக்ஸ்’ என்ற மீடியா நிறுவனத்துக்கு, அந்நிய முதலீட்டுக்கான அனுமதியை சட்டவிரோதமாகப் பெற்றுக்கொடுத்ததாக சிபிஐ., கார்த்தி சிதம்பரம் மீது எஃப்ஐஆர் பதிவுசெய்துள்ளது. 

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்கள், டெல்லி, நொய்டா ஆகிய இடங்களில்  இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 15.5.2017ல் சிபிஐ, ஏழு பேர் மீது எஃப்ஐஆர். பதிவு செய்துள்ளது. அதில், மூன்றாவது குற்றவாளியாக கார்த்தி சிதம்பரம் சேர்க்கப்பட்டுள்ளார். 12 பக்கத்துக்கு ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது.

அந்த எஃப்ஐஆரில் உள்ள விவரத்தின் சுருக்கம் இது.

“ஐ.என்.எக்ஸ் என்ற மீடியா நிறுவனம், கடந்த 2006ல் மும்பையில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம், கடந்த 2007ல் மத்திய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியமான எஃப்ஐபிபி-யிடம் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தது. அந்த விண்ணப்பத்தைப் பெற்றதாக, பொருளாதார விவகாரங்கள்துறை ஒப்புகைச் சீட்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அளித்தது. மேலும், இந்த விண்ணப்பத்தைப்  பரிசீலனைசெய்ய, நிதிஅமைச்சகம் தொடர்புடைய துறைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அப்போது, சில விதிமுறைகளையும் எஃப்ஐபிபி. வகுத்தது. ஆனால், அந்த விதிமுறைகள் மீறப்பட்டு, சட்டவிரோதமாக அனுமதியை வாங்கிக் கொடுத்துள்ளார், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனமே, இந்த அனுமதியைப் பெற முயற்சித்தாகச் சொல்லப்பட்டுள்ளது.  

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குநர் இந்திராணி முகர்ஜி மற்றும் சிலர், இரண்டாவது குற்றவாளியாக ஐ.என்.எக்ஸ் நியூஸ் நிறுவனத்தின் இயக்குநர் பிரத்தின் என்ற பீட்டர் முகர்ஜி, மூன்றாவது குற்றவாளியாக கார்த்தி சிதம்பரம், நான்காவது குற்றவாளியாக கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனத்தின் வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள், ஐந்தாவது குற்றவாளியாக பத்மவிஸ்வநாதன், ஆறாவது குற்றவாளியாக நிதி அமைச்சகத்தில் உள்ள வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள், ஏழாவது குற்றவாளியாக அடையாளம் தெரியாதவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் மீது 120 பி, 420 ஐ.பி.சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. 

 

சிபிஐ சோதனையையொட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சோதனையின்போது, கார்த்தி சிதம்பரம் வீட்டில் இருந்தார். அவரிடம், தகவலைத் தெரிவித்துவிட்டு சோதனையை அதிகாரிகள் நடத்தினர். இந்தத் தகவல் தெரிந்ததும் தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் அங்கு திரண்டனர். அவர்களில் பீட்டர் அல்போன்ஸ், கராத்தே தியாகராஜன் ஆகியோர் மத்திய அரசைக் கண்டித்து பேட்டியளித்தனர். தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசரும் மத்திய அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கிடையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் பா.ஜ.க-வைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். 

கார்த்தி சிதம்பரம் அலுவலகம் இருக்குமிடம்

இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “எங்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் சோதனை நடந்துவருகிறது. சோதனைக்குப் பிறகே, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

‘மத்திய அரசு, சிபிஐ அமைப்பைத் தவறாகப் பயன்படுத்துகிறது. சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் நேரடி அந்நிய முதலீட்டுக்கு  அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், அந்நிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் என்பது, ஐந்து அமைச்சகங்கள் தொடர்புடையது. என்மீதும் என் மகன்மீதும் அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாக மத்திய அரசு அடக்குமுறையை ஏவுகிறது. பா.ஜ.க அரசு என்னை அடக்க நினைத்தாலும், தொடர்ந்து குரல் கொடுப்பேன்’ என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

%d bloggers like this: