Advertisements

முடி வளர கரிசலாங்கண்ணி!

ரிசாலை, அரிப்பான் பொற்கொடி, கைகேசி, கையாந்தகரை, தேகராசம் உள்பட பல பெயர்களைக் கொண்டது கரிசலாங்கண்ணி. மஞ்சள் மற்றும் வெள்ளைக் கரிசலாங்கண்ணி என இரண்டு வகைப்படும் இந்த மூலிகையை ஞான மூலிகை, தேகச்சுத்தி மூலிகை, வள்ளலார் கண்ட தெய்விக மூலிகை என்றும் அழைப்பார்கள். அந்த அளவுக்குச் சக்தி படைத்தது.

தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துகள் அதிகம் உள்ள கரிசலாங்கண்ணியை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது பாரம்பர்ய மருத்துவத்தில் பயன்படுத்தியுள்ளனர். கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது, கீரையை அரைத்துச் சாறு எடுத்து, அதை 100 மில்லி அளவுக்கு அருந்தி வந்தாலும், நோய் எதிர்ப்புச்சக்தி கிடைக்கும். மஞ்சள் காமாலை, பொடுகு, முடி உதிர்தல் உள்ளிட்ட நோய்களின் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளவும் கரிசலாங்கண்ணி உதவுகிறது.
கரிசலாங்கண்ணிச் சாற்றை 30 மில்லி அளவுக்கு தினமும் காலை வேளையில் அருந்தி வந்தால், சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சல் அடங்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் சளித்தொல்லைக்கு இரண்டு சொட்டு கரிசலாங்கண்ணிச் சாற்றுடன் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்து வந்தால் பலன் கிடைக்கும். 500 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றுடன் சுத்தமான நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து தைலப்பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு, ஒரு டீஸ்பூன் வீதம் தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வரலாம். இதனால், சளியுடன் கூடிய இருமல், மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக்கோளாறுகள் நீங்கும்.
இன்றைக்குத் தலைமுடி பிரச்னை பெரும் பிரச்னையாக உருவெடுத்து நிற்கிறது. 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் பாதி அளவு கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தலையில் தடவி வந்தால், தலைமுடி நன்றாக வளரும். இளநரையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த எண்ணெய் பலனளிக்கும். கரிசலாங்கண்ணி இலைச்சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி எடுத்துக் காய்ச்சி, தைலப்பதம் வந்ததும் வடிகட்டி, தலையில் தடவி வந்தால் பொடுகு நீங்கும். இதே எண்ணெய் வழுக்கையை நீக்குவதோடு, நரைத்த முடியையும் கருமையாக்கும்.
கரிசலாங்கண்ணி இலையை உலர வைத்துப் பல்பொடி போல பயன்படுத்தி வந்தால், பற்கள் பலம் பெறுவதோடு ஈறுகளில் உள்ள நோய்க்கிருமிகள் அழியும். மேலும் இது தொண்டைச்சளியை அகற்றக்கூடியது. கசடுகளை நீக்கி தேகத்தைச் சுத்தப்படுத்தி ஆயுளை நீடித்து, உடல் வசீகரம் பெறச் செய்வதோடு, புற்றுநோய்க் கிருமிகளை வளர விடாமலும் தடுக்கக் கூடியது.

Advertisements
%d bloggers like this: