Advertisements

ரஜினி தனி ரூட்… மோடி ஷாக்?

‘‘ரஜினி ரயில் ஸ்டார்ட்ஸ்!” என்றபடியே கழுகார் உள்ளே நுழைந்தார்.
‘‘அது ஸ்டார்ட் ஆன வேகத்திலேயே நின்றுவிடும் ரயில்தானே? புறப்படும் என்பார் புறப்படாது” என்றோம். ‘‘புறப்படாது என்பார் புறப்படும்” என்று எதிர்பாட்டு பாடியபடியே கழுகார் ஆரம்பித்தார்.

‘‘ரஜினியை எப்படியாவது பி.ஜே.பி-க்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடப்பது குறித்து ஏற்கெனவே நான் சொல்லி இருந்தேன். 2.4.17 ஜூ.வி இதழில் ‘உ.பி-யில் யோகி… தமிழ்நாட்டில் ரஜினி!’ என வெளியிட்டு இருந்தீர். ரஜினி தனது தயக்கங்கள் அனைத்தையும் சொல்ல… பி.ஜே.பி அவற்றை உடைக்கும் கருத்துக்களைச் சொல்லி அவரைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. இந்த நிலையில் அவர் வராவிட்டால், ஓ.பன்னீர்செல்வத்தை பி.ஜே.பி-க்குள் கொண்டுவந்து அதை ஈடுசெய்யும் முயற்சியை பி.ஜே.பி தொடங்கிவிட்டதையும் சொல்லி இருந்தேன். 14.5.17 இதழில் ‘ரஜினி இடத்தில் ஓ.பி.எஸ்!’ என அதுதான் கவர் ஸ்டோரி. ரஜினிக்கு யாரெல்லாம் நண்பர்களோ, யாரிடம் எல்லாம் அவர் மனம்விட்டுப் பேசுவாரோ அவர்கள் மூலமாகத் தூது அனுப்பி நெருக்கடி கொடுத்து வருகிறது பி.ஜே.பி. நிம்மதியாகப் படத்தில் நடிக்க முடியாத அளவுக்கு அவர் மனதில் குழப்பங்கள்.”
‘‘ரஜினி மனதில் என்ன ஓடுகிறது?”
‘‘மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘லிங்கா’ பாடல் வெளியீட்டு விழாவில், ‘அரசியலைப் பார்த்து பயப்படலை. தயங்குறேன்’ என்று பேசினார்.  அப்போது பேசியதற்கும் இப்போது பேசியதற்கும் இடையில் நிறைய வேறுபாடு இருக்கிறது. இப்போது கொஞ்சம் தெளிவு தெரிகிறது. ‘என் தலையில அரசியல் எழுதலைனு சொன்னால் நீங்க ஏமாந்து போவீங்க. ஒருவேளை நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், பணம் சம்பாதிக்கணும், ஊழல் பண்ணணும்னு நினைக்கிற ஆட்களை கிட்ட கூட சேர்க்க மாட்டேன். நுழைய கூட விட மாட்டேன். அதுனால இப்பவே அவங்க எல்லாம் ஒதுங்கிடுங்க. இல்லைன்னா ஏமாந்து போவீங்க’ என்று சொன்னார். ‘இப்ப நடிகனாக இருக்கேன். நாளைக்கு என்ன ஆவேன் என்று ஆண்டவனுக்குத்தான் தெரியும்’ என்றார். இவை அனைத்துமே அவராக வலிய வந்து பேசியதாகவே இருக்கிறது!”
‘‘ம்!”
‘‘அரசியலுக்கு வரலாம் என்று அவர் நினைப்பதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகிறது. ‘அவர் மதித்த கருணாநிதி உடல்நலமில்லாமல் இருக்கிறார். ஜெயலலிதா இறந்துவிட்டார். இந்த சூழ்நிலையில் அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு என்று அவர் நினைக்கிறார்’ என ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். ‘இல்லை, பி.ஜே.பி அவரை நிர்பந்தம் செய்து வர வைக்கிறது’ என்று இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள். ‘அவருக்கே அரசியல் ஆசை வந்துவிட்டது. அதனை சோதித்துப் பார்க்க நினைக்கிறார்’ என்று மற்றொரு தரப்பினர் சொல்கிறார்கள்.”
‘‘ஓஹோ!”

‘‘1996-ம் வருஷமே அரசியலுக்கு வந்துவிட்டார் ரஜினி. அப்போதைய அரசியல் சூழலில், ஜெயலலிதாவை துணிச்சலாக விமர்சனம் செய்து, தி.மு.க – த.மா.கா கூட்டணியை ஆதரித்தார். 1996-ல் ரஜினி பெரும் செல்வாக்கோடு இருந்தார். இப்போது அதேபோன்ற அரசியல் வெற்றிடம் உருவாகி இருப்பதாக ரஜினி நினைப்பதும்கூட, அவரின் அரசியல் குறித்த பாசிட்டிவ் பேச்சுக்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். அ.தி.மு.க தலைமை இல்லாமல் தவிக்கிறது. விஜயகாந்த் கட்சி பலவீனமடைந்து விட்டது. ம.தி.மு.க., பா.ம.க போன்ற கட்சிகளும் பலமாக இல்லை. இதுதான் சரியான தருணம் என நினைக்கிறார் ரஜினி.”
‘‘அப்படியானால் பி.ஜே.பி-யில் ரஜினி இணைவாரா?”
“இப்போதைய  சூழலில், தங்கள் பக்கம் ரஜினியை இழுக்க பி.ஜே.பி காய் நகர்த்தி வருகிறது. படு பலவீனமாக இருக்கும் தமிழ்நாட்டில் கால் பதிக்க, ரஜினி மாதிரியான ஸ்டார் அவசியம் என பி.ஜே.பி நினைக்கிறது. ஆனால், ரஜினி மனதில் அப்படியான நினைப்பு இல்லை. அரசியலில் இறங்கினால் தனிக்கட்சிதான் என அவர் நினைக்கிறாராம்.”
‘‘மோடி ஷாக் ஆகிவிடுவாரே?”
‘‘பி.ஜே.பி-க்குள் இழுத்துவருவது… அல்லது, புதுக்கட்சி ஆரம்பிக்க வைத்து அவரது செல்வாக்கை பி.ஜே.பி-க்கு பயன்படுத்திக் கொள்வது… இதுதான் மோடியின் திட்டமாம். இப்போது தமிழக ஆளும்கட்சியில் நடக்கும் குழப்பத்தைப் பயன்படுத்தி, இங்கு டம்மி அரசாங்கத்தைத் தொடர்ந்து இருக்க விடுவது. ‘இதனால் அரசு மீது எழும் வெறுப்பை தங்கள் பிரசாரத்துக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும்போது தமிழக சட்டசபையைக் கலைத்துவிட்டு அதற்கும் சேர்த்து தேர்தல் நடத்தலாம்’ என்பதுதான் பி.ஜே.பி-யின்  திட்டம். ‘நாடாளுமன்றத்தோடு  தமிழக சட்டசபைத் தேர்தலை நடத்தினால் மோடி செல்வாக்கு இரண்டு இடங்களிலும் எதிரொலிக்கும்’ என்று நினைக்கிறார்கள்.  ‘எனக்கு ரசிகர்களாக அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். பி.ஜே.பி-யில் சேர்ந்தால், இன்னொரு பக்க செல்வாக்கை இழக்க வேண்டி வரும். ஏற்கெனவே எந்தப் பிரச்னை என்றாலும், கன்னட அடையாளத்தை எடுத்துக் காட்டி சிலர் பிரசாரம் செய்கிறார்கள். அதில் இதுவும் சேர்ந்துவிடக்கூடாது’ என ரஜினி  யோசிக்கிறாராம்.”
‘‘மேடையின் பின்பக்கத்தில் வெள்ளைத்தாமரை படம் இருந்ததே?”
‘‘வெள்ளைத்தாமரை மேல் பாபா முத்திரை இருக்கும் அந்தப் படம், ரஜினிக்கு ரொம்ப பிடித்த அடையாளம். இது அவரது லோட்டஸ் பிக்சர்ஸ் லோகோ. அதனால்தான் அதை வைத்தாராம்.”
‘‘ம்!”
‘‘சமீபத்தில் தன் நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்த ரஜினி, ‘அரசியல்ல ஒவ்வொரு செங்கல்லும் கெட்டுப்போய் இருக்கு. எனக்கான அரசியல் அழைப்பு எப்பவுமே இருக்கு. இதுல நான் முடிவு பண்ண ஒண்ணும் இல்லை. பாபாதான் முடிவு பண்ணனும். நான் அரசியலுக்கு வந்தா மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னுதான் வருவேன். மத்தபடி பேருக்கோ, புகழுக்கோ, பணத்துக்கோ இல்லை’ எனச் சொன்னாராம். ‘அரசியலுக்கு வர இது சரியான நேரம்னு ரஜினி நினைக்கிறார். அதனாலதான் இதுவரைக்கும் அரசியலுக்கு வர்றதைப் பத்தி மட்டும் பேசினவர், இப்போ அரசியலுக்கு வந்த பின்னாடி நடக்கப்போறதைப் பேச ஆரம்பிச்சிருக்கார்’ என்று அந்த நண்பர்கள் சொல்லி வருகிறார்கள்!”
‘‘ரஜினியின் அரசியல் நண்பர்களில் ஒருவரான, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு நடத்துகிறதே?”
‘‘கடந்த 2008-ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டுக்கான அனுமதியைப் பெற்றுத் தந்ததற்காகப் பணம் பெற்றதாக, கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு 22 கோடி டாலர் அன்னிய முதலீடு கிடைத்துள்ளது. அன்னிய முதலீட்டுக்கான அனுமதியை ‘ஃபாரின் இன்வெஸ்ட்மென்ட் புரொமோஷன் போர்டு’ அளிக்க வேண்டும். 2008-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அவரது கட்டுப்பாட்டின் கீழ்தான் இந்த போர்டும் இருந்தது. இதில், அனுமதியைப் பெற்றுத் தருவதாக கார்த்தி சிதம்பரம் உறுதி அளித்து, அதற்கான கமிஷன் தொகையைப் பெற்றிருப்பதாகச் சில ஆண்டுகளுக்கு முன்பாகப் புகார் எழுந்தது. ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு வந்ததும், கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு இந்த கமிஷன் பணம் வழங்கப்பட்டதாக வழக்கு. 2008-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி, கார்த்தியின் அட்வான்டேஜ் ஸ்ட்ராடெஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு 35 லட்ச ரூபாயும், அதேநாளில் கார்த்தியின் மற்றொரு நிறுவனமான நார்த்ஸ்டார் சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு 60 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரங்கள் சி.பி.ஐ-க்குக் கிடைத்திருக்கிறதாம். இதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ, அதிரடியாக அவரது மற்றும் ப.சிதம்பரம் வீடுகளில்  ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் மீது ஏர்செல் மேக்சிஸ், வாசன் ஹெல்த்கேர் பண முதலீடு தொடர்பாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.’’
‘‘சிதம்பரம் என்ன சொல்கிறார்?”

‘‘அவர், ‘ஃபாரின் இன்வெஸ்ட்மென்ட் புரொமோஷன் போர்டு நூற்றுக்கணக்கான அனுமதிகளை அளிக்கிறது. அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டது.  இதற்காக, அந்த அமைப்புக்கு ஐந்து செயலாளர்களை இந்திய அரசு நியமித்துள்ளது. இவர்கள் யார் மீதும் குற்றச்சாட்டு எழவில்லை. என் மீதும் குற்றச்சாட்டு எழவில்லை. ஆனால், என்னுடைய மகனைக் குறிவைக்கிறார்கள். என் மகனுக்கும் அந்த நிறுவனங்களுக்கும் தொடர்பு இல்லை. சி.பி.ஐ-யைப் பயன்படுத்தி என் வாயை மூடிவிட மத்திய அரசு நினைக்கிறது. ஆனால், என்னுடைய பேச்சு, எழுத்தை மத்திய அரசால் தடுத்து நிறுத்த முடியாது’ என்கிறார்.’’
‘‘கொடநாடு எஸ்டேட் கொள்ளை, கொலையில் பன்னீர் அணியினர் சி.பி.ஐ விசாரணை கேட்ட நிலையில், அந்த அணியின் எம்.எல்.ஏ ஆறுக்குட்டிக்கே சம்மன் அனுப்பி இருக்கிறார்களே?”
‘‘யாரும் எதிர்பார்க்காத திருப்பம்தான். சம்பவத்தில் தொடர்புடையதாக சொல்லப்பட்ட டிரைவர் கனகராஜ், விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதன் பின்னணியில் சிலர் இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்தது. விபத்தில் இறப்பதற்கு முன் கனகராஜ், எம்.எல்.ஏ ஆறுக்குட்டிக்கு 4 முறை செல்போனில் அழைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கனகராஜ் ஏன் அவரை அழைக்க வேண்டும் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அதனால்தான் ஆறுக்குட்டியை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். ‘சென்னைக்குச் செல்லும்போது அவ்வப்போது கனகராஜ் எனக்கு டிரைவராக இருப்பார். என் உதவியாளர் செல்போன் எண்ணில் இருந்து அவருக்கு போன் போனதாகச் சொல்கிறார்கள். வேலை சம்பந்தமாகத்தான் அவர் கூப்பிட்டார். இதை போலீஸிடம் சொல்வேன்’ என விளக்கம் அளித்திருக்கிறார் ஆறுக்குட்டி.’’ என சொல்லி பறந்தார்.

Advertisements
%d bloggers like this: