தீரா பிணிகளையும் தீர்க்கும் ‘திருமாத்திரை’ பிரசாதம்!

சித்தர்களின் வழிபடு தெய்வமாகத் திகழ்பவள் பாலா என்கிற வாலை. அம்பிகையின் பத்து வயது தோற்றமே பாலா. ‘சக்தி சடாதரி வாலைப் பெண்ணாம்; சித்தர்கள் போற்றிய வாலைப் பெண்ணாம்; எங்கும் நிறைந்தவள் வாலைப் பெண்ணாம்’ என்று கொங்கணச் சித்தரின் கும்மிப் பாடல், வாலையின் பெருமைகளை விவரிக்கிறது.

`பத்து வயதினை உடைய பாவையினன்றோ நீ சித்தர்க்கெல்லாம் தாயாய் செய்தாய் மனோன்மணியே…’ என்று பாடியவர் மஸ்தான் சாகிபு. வாலை, சித்தருக்கெல்லாம் தாயானதால்தான், ‘சித்தனோடு சேர்ந்தாளே சித்தத்தா…’ என்றும் பாடப்பட்டுள்ளாள்.

வாலாம்பிகை என்ற பாலாம்பிகையைக் குருவும் சிஷ்யருமான இரண்டு சித்தர்கள் வழிபட்ட தலம்தான் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை செல்லும் சாலையில் அமைந்திருக்கும் கொம்மடிக்கோட்டை. இந்தத் தலத்தில் பாலா அருள்புரிவதால், ‘பாலா க்ஷேத்திரம்’ என்ற பெயரும் இந்தத் தலத்துக்கு உண்டு.

சுமார் 800 வருடங்களுக்கு முன்பு, வாலை குருசாமி என்பவர் தம்முடைய சீடர் காசியானந்தர் என்பவருடன் காசியில் இருந்து புறப்பட்டு, பல தலங்களைத் தரிசித்தபடி கொம்மடிக்கோட்டைக்கு வந்து சேர்ந்தார். இந்த இடத்திலேயே ஓர் ஆசிரமம் அமைத்துக்கொண்டு, ஸ்ரீவாலாம்பிகையைப் பூஜித்து, தவம் இயற்றி ஸித்திகள் பெற்றதுடன், இங்கேயே இருவரும் ஜீவசமாதி அடைந்தனர்.

தாங்கள் வழிபட்ட தெய்வத்தை அனைவரும் வணங்கி அருள் பெற வேண்டும் என்பதற்காக வாலாம்பிகைக்குத் தனிச் சந்நிதி அமைத்தார் வாலைகுருசாமி சித்தர். ஸ்ரீவித்யை (ஸ்ரீபாலா) மார்க்கத்தைக் குரு முகமாகவே அடைய வேண்டும் எனச் சொல்கிறது சாஸ்திரம். ஸ்ரீவாலை வழிபாட்டைப் போகர் நந்தீசரிடம் இருந்து உபதேசம் பெற்றதாகவும் போகர், கொங்கணருக்கு உபதேசித்ததாகவும் கொங்கணர், பல சீடர்களுக்கு உபதேசித்ததாகவும் சொல்லப்படுகிறது.

கோயிலில் ஒரே கருவறையில் வாலை குருசாமியும், காசியானந்தரும் அடுத்தடுத்து காட்சியளிக்கின்றனர். வாலைகுருசாமிக்கு எதிரே கொடிமரத்தடியில் நந்திகேஸ்வரப் பெருமான் காட்சியளிக்கிறார்.

குரு – சீடர்களின் சந்நிதிக்கு வலப்புறம் ஸ்ரீசந்திரசேகரர் சமேத மனோன்மணி அம்பாள் சந்நிதி உள்ளது. `மனோன்மணி’ என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. மன இருளை அழித்து ஞானநிலைக்கு அழைத்துச் செல்பவள் என்பது இதன் பொருள். பின்புறம், கன்னி விநாயகரும் பால முருகனும் தொடர்ந்து சண்டிகேஸ்வரரும் இடப்புறத்தில் தெற்குநோக்கி நடராஜர் – சிவகாமி அம்பாளும் அருள்பாலிக் கின்றனர். 

தனிச்சந்நிதியில் தனி விமானத்துடன் பாலாம்பிகை சந்நிதியும், அம்பிகை சந்நிதிக்கு வலப்புறம் வாராகி அம்பாள் சந்நிதியும் அமைந்திருக்கின்றன. வெளிப் பிராகாரத்தில் கொடி மரத்துக்கு அருகில் வடகிழக்கு மூலையில் சொர்ணாகர்ஷண பைரவர் அருள்கிறார்.

கோயிலின் தல விருட்சம் மஞ்சணத்தி மரம். இந்த மஞ்சணத்தி மரத்தின் அடியில்தான் வாலை குருசாமியும், காசியானந்தரும் வாலை பூஜை செய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த மரத்தினடியில் உச்சிஷ்ட கணபதி காட்சி தருகிறார்.

ஆதிகாலத்தில் இருந்த மஞ்சணத்தி மரம் பட்டுப்போனது. புதிய மஞ்சணத்தி மரக்கன்றை நட்டு வளர்க்கலாம் என்று ஊர் மக்கள் நினைத்துக்கொண்டு இருந்தபோது, ‘பட்ட மரம் துளிர்க்கும்’ என்று உத்தரவு வந்ததாகவும், அதன்படியே பட்டுப்போன மஞ்சணத்தி மரத்தின் நடுவில் இருந்து ஒரு கன்று முளைத்து வளர்ந்த தாகவும், அந்த மரம்தான் தற்போது தல விருட்சமாக உள்ளது என்றும் ஊர்மக்கள் நெகிழ்ச் சியும் பூரிப்புமாகக் கூறினார்கள்.

வருடம்தோறும் சித்திரை, ஆவணி மாதங்களில் 11 நாள்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறு கின்றது. ஐப்பசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சந்திரசேகரர் – மனோன்மணி அம்பாள் திருக் கல்யாண உற்ஸவம் நடைபெறு கின்றது. இரவு அம்மி மிதித்தல், தேங்காய் உருட்டுதல், நலங்கு வைத்தல் போன்ற சடங்குகள் நடைபெறும். தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் திருத்தேரில் எழுந்தருளி, பவனி வருவார்கள்.

அமாவாசை, பெளர்ணமி நாள்களில் சிறப்பு பூஜையும், மதியம் அன்னதானமும் நடைபெறும். அன்று மாலை வாலாம்பிகை அம்பாள் ஊஞ்சலில் எழுந்தருளலும், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும் தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் நடைபெறும்.அதேபோல், ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியில் சொர்ணாகர்ஷண பைரவருக்கும், ஒவ்வொரு வளர்பிறை பஞ்சமியில் வாராகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகின்றன.

வாலைகுருசாமிக்கும், காசியானந்த சுவாமிக்கும் வெள்ளை நிற வஸ்திரம் சாத்தி, வில்வமாலை அணிவித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் வெற்றி பெறும், வாலாம்பிகைக்குச் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி, செவ்வரளி மாலை அணிவித்து, எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.

குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள், தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள் அனைவருக்கும் இந்தக் கோயிலில் வழங்கப்படும் மருந்து ‘திருமாத்திரை’.

மஞ்சணத்தி இலை இரண்டு பங்கு, வேப்பிலை, வில்வ இலை, புளிய இலை ஆகியவை ஒரு பங்கு என்று எடுத்து, கோயிலில் உள்ள அம்மியில் இட்டு, அத்துடன் எலுமிச்சைச் சாறு, திருநீறு, சிறிது கோயில் மண் சேர்த்து அரைத்துக் கோயில் பூஜையில் வைக்கின்றனர். பிறகு அதை 41 சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காய வைத்துத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த திருமாத்திரையைத் தொடர்ந்து 41 நாள்கள் சாப்பிட்டு வர, தீராத பிணிகளும் தீரும் என்று பலன் பெற்ற பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

சுமார் 60 வருடங்களுக்கு முன்பு இங்கு நடைபெற்ற ஓர் அற்புதம் வாலைகுருசாமியின் சக்தியை உணர்த்துவதாக உள்ளது.

வாலைகுருசாமியின் வருஷாபிஷேக பூஜையின் இரண்டாவது நாள், அங்கிருந்த பனைமரத்தின் அடியில் ஆறு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீசிய சூறைக் காற்றில், பனை மரத்தின் மட்டைக் கிளைகளுடன் கூடிய மேல்பகுதி ஒடிந்து விழுந்தது. மரத்தினடி யில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு என்ன ஆயிற்றோ என்ற அச்சத்துடன் அங்கிருந்தவர்கள் மட்டைகளை அப்புறப்படுத்த, அதன் அடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆறு சிறுவர்களும் சிறு காயம்கூட இல்லாமல் சிரித்தபடி இருந்தனர். இதுபோல் பல அற்புதங்களை நிகழ்த்தியதாக அங்கிருந்த பக்தர்கள் மெய்சிலிர்க்கக் கூறினர்.

சித்தர்கள் அனைவரும் குருமுகமாக தீட்சை பெற்றே வாலையை அடைந்தனர். அதேபோல, ஸ்ரீவாலைகுருசாமி அவரின் சீடர் ஸ்ரீ காசியானந்தர் இவர்கள் இருவரையும் முழுமையாக வணங்கியபின்னரே, வாலையை வழிபட வேண்டும். அப்போதுதான் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நாமும் அதேபோல் சித்த புருஷர்கள் இருவரையும் வழிபட்டுவிட்டு, தொடர்ந்து வாலையை வழிபடுவோம்; வேண்டும் வரங்களை வேண்டியபடி பெறுவோம்.


உங்கள் கவனத்துக்கு:

தலத்தின் பெயர்: கொம்மடிக்கோட்டை

அம்பிகை: ஸ்ரீவாலாம்பிகை

சித்தர்கள்: ஸ்ரீவாலைகுருசாமி, ஸ்ரீகாசியானந்த சுவாமி

சிறப்புப் பிரசாதம்:
திருமாத்திரை

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6.30 முதல் மதியம் 1 வரை மாலை 5 முதல் 8.30 வரை

எப்படிச்செல்வது..?

திருச்செந்தூரில் இருந்து உடன்குடி வழியாக திசையன்விளை செல்லும் சாலையில் சுமார் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீவாலைகுருசாமி கோயில்.

%d bloggers like this: