வேண்டாமே வெளிநாட்டு காய்கறி மோகம்!

வெளிநாட்டு மோகம் நமக்கு ரொம்பவே அதிகம். அது வாசனைத் திரவியமோ, மின்சாதனப் பொருட்களோ, வெளிநாட்டு தயாரிப்பு என்றால் ‘பெஸ்ட்’ என்ற எண்ணம் நம் மனதில் இருக்கிறது. மொழி, வாகனம், ஆடை, வீட்டு உபயோகப் பொருட்களை விட்டுவைக்காத

வெளிநாட்டு மோகம், உணவுப் பொருட்களை மட்டும் விட்டுவிடுமா?
நம் ஊரில் உள்ள காய்கறி, பழங்களில் இல்லாத சத்துக்களே இல்லை. மிகக் குறைந்த விலையில், “ப்ரெஷ்’ஷான, ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளைத் தவிர்த்துவிட்டு, புரோகோலி, டிராகன் ப்ரூட், கிவி என்று வெளிநாட்டுக் காய்கறி, பழங்கள் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
இயற்கை அந்தந்தப் பகுதியின் தட்பவெப்ப நிலை, சூழலுக்கு ஏற்ப காய்கறி, பழங்களை அளிக்கிறது.
தமிழகம் போன்ற வெப்ப மண்டலத்தில், வெயிலைச் சமாளிக்க, உடலில் நீர்ச்சத்து சமநிலையைக் காக்க, தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி, முலாம் பழம், புடலங்காய், பீர்க்கங்காய் என விளைகின்றன. இவை தாகத்தைத் தீர்க்கும். வெயிலைச் சமாளிக்க, உடலுக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும். அத்துடன், இவற்றில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள், புற்றுநோய் முதல் தொற்றுநோய்கள் வரை வராமல் காக்கும்.
நம் ஊரில் கிடைப்பதைவிட இறக்குமதி செய்யும் காய்கனிகளில் சத்துக்கள் அதிகம் என்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால், இது உண்மை அல்ல. தாய்லாந்தின் டிராகன் பழத்தைவிட, நம் ஊர் சீதாப்பழத்தில் புற்றுநோயை எதிர்க்கும் சக்தி அதிகம்.
கேரட்டில் உள்ள சத்துக்கள் அவரைக்காயிலேயே உள்ளன. நம் ஊர் முழு நெல்லிக்காயைச் சாப்பிட்டா லே, ஐந்து ஆப்பிள் பழங்களுக்குச் சமம். ஆப்பிள் பழத்தின் சத்துகளைப் பெற, நெல்லிக்காயும் கொய்யாவுமே போதும். இறக்குமதி காய்கனிகளைச் சுவைப்பது தவறு இல்லை. ஆனால், அதுவே நம் அன்றாடப் பழக்கத்தில் வந்துவிடக் கூடாது.
அயல்நாட்டுக் காய்கறி, பழங்கள் சாப்பிடலாமா?
வெளிநாட்டுக் காய்கறி, பழங்களை எப்போதாவது சுவைக்கலாமே தவிர, நம் உணவுத் தட்டில் நாள்தோறும் சாப்பிடுவதற்கான இடத்தைத் தந்துவிடக் கூடாது. வெளிநாட்டுக் காய்கறி, பழங்கள் விலை அதிகமானவை. உள்ளூர் காய்கறி, பழங்கள் விலை குறைவானவை; அதே நேரத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டவை.
ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய பழம், வாழைப்பழம். பூவன் பழம், மொந்தன், ரஸ்தாலி, தேன் வாழை, செவ்வாழை, நேந்திரம் போன்ற அனைத்தையும் சுவைக்கலாம். ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய காய்கள், கத்திரி, வெண்டை, தக்காளி. எல்லா காலத்திலும் கொடிக் காய்கறிகளைத் சாப்பிடலாம். எந்த உபாதைகளையும் ஏற்படுத்தாது.
சித்திரை, வைகாசி போன்ற இளவேனில் காலத்தில் முள்ளங்கி, பட்டாணி, கீரைகள், பப்பாளி கிடைக்கும். கோடை காலத்தில், மாம்பழம், தர்பூசணி, பீர்க்கங்காய், சுரைக்காய், புடலங்காய், முலாம் பழம், வெள்ளரி, கிர்ணி, நுங்கு, பாகற்காய் கிடைக்கும். முன்பனி காலத்தில் பீட்ருட், முட்டைக்கோஸ், கத்திரி, காலிபிளவர், தக்காளி, கொய்யா, மாதுளை கிடைக்கும். பனிக்காலத்தில், ஆப்பிள், ஆரஞ்சு, கேரட், கீரைகள் கிடைக்கும்.
தவிர்க்க வேண்டியவை: திட்டுத்திட்டாக கறுப்பு நிறத்தில் பழத்தின் தோலில் புள்ளிகள் இருந்தால், தவிர்த்துவிடுவது நல்லது. சீஸன் இல்லாத நேரத்தில் விற்கப்படும் பழங்களைத் தவிர்க்க வேண்டும்.

%d bloggers like this: