கிரக தோஷங்களும் பரிகாரங்களும்!

ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி

களத்திர தோஷத்தால் கவலையா?

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களினால் ஏற்படும் தோஷங்களைப் பற்றி விளக்கமாகக் கூறப்பட்டு இருக்கிறது. கிரக தோஷங்கள் ஒருவரின் பூர்வ ஜன்ம வினைப்பயன்களால்தான் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படும், கிரக தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கு எளிய பரிகாரங்களும் ஞானநூல்களில் சொல்லப்பட்டுள்ளன. இறைவனிடம் பூரண நம்பிக்கையுடன் பரிகாரங்களைச் செய்தால், தோஷங்கள் நீங்கி,  சந்தோஷ வாழ்வைப் பெறலாம்.

தோஷங்களில் இல்வாழ்வை பெரிதும் பாதிப்பது களத்திர தோஷம் ஆகும். `களத்திரம்’ என்றால் இல்வாழ்க்கைத் துணையைக் குறிப்பதாகும். களத்திர தோஷம் என்றால் இல்வாழ்க்கையில் அதாவது, திருமண வாழ்க்கையில் ஏற்படும் தோஷம் அல்லது தடையைக் குறிப்பதாகும்.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து வரும் 7-ம் வீடுதான் களத்திர ஸ்தானம் ஆகும். இந்த இடத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை பெற்று இருப்பது, 7-ம் இடத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்று இருப்பது, 7-க்கு உடைய கிரகம் 6, 8, 12 போன்ற இடங்களில் தனித்தோ அல்லது பாவ கிரகங்களுடன் சேர்ந்தோ இருப்பது, ராகு அல்லது கேது 7-ல் இருப்பது களத்திர தோஷத்தைக் குறிப்பிடும்.

சுருக்கமாகச் சொன்னால் 7-வது வீட்டுக்குரிய கிரகமோ அல்லது சுக்கிரனோ, பாவ கிரகங்களின் பார்வை பெற்று இருந்தாலோ அல்லது 6, 8-க்குரிய கிரகத்துடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது 6, 8, 12-ல் மறைந்து இருந்தாலோ களத்திர தோஷம் என்று அர்த்தம். பொதுவாக, லக்னத்துக்கு ஏழாம் இடத்தில் உள்ள கிரகங்களைக் கொண்டுதான், ஒருவருக்கு களத்திர தோஷம் இருக்கிறதா, இல்லையா என்று முடிவு செய்யப்படுகிறது.

லக்னத்தில் இருந்து 7 மற்றும் 8 ஆகிய இடங்களில் கிரகங்கள் எதுவும் இல்லாமல் இருந்தால், சுத்த ஜாதகம் என்றும் களத்திர தோஷம் இல்லை என்றும் சொல்லுவார்கள். அப்படிச் சொல்வது சரியல்ல. 7-க்கு உடையவனின் வலிமை, சுக்கிரனின் வலிமை ஆகியவற்றைக் கணித்தே களத்திர ஸ்தானத்தில் தோஷம் உள்ளதா, இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும். களத்திர தோஷம் இருந்தால், அதை நிவர்த்தி செய்யாமல் திருமணம் செய்யக் கூடாது.களத்திர தோஷம் இருப்பவர்களுக்கு பொதுவாகத் திருமணம் தாமதமாகும் அல்லது தடைப்படும்.

சிலருக்குத் திருமணம்  கைகூடினாலும் இல்வாழ்க்கையில் பிரச்னைகளுக்கு மேல் பிரச்னைகள் தோன்றி, திருமணப் பந்தம் முறியும்.

ஆகவே, களத்திர தோஷம் எந்த கிரகத்தால் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து, அந்த கிரகத்துக்கும், அந்த கிரகத்துக்கு உரிய பிரத்யதி தேவதைக்கும் வழிபாடு சாந்தி செய்த பிறகே திருமணம் செய்ய வேண்டும். குரு, சுக்கிரன் ஆகியோருக்கு வழிபாடு செய்வதாலும் நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.

சூரியன் 7-ல் நீச்சம் பெற்று இருந்தால் திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். சூரியனை வழிபடுவதுடன், ஸ்ரீருத்ர மூர்த்தியை வழிபாடு செய்தால், இனிய இல்லற வாழ்க்கை அமையும். ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்வதும் உத்தமம்.
சந்திரன் 7-ல் வலுக்குன்றி  இருந்தால், சந்திரனை வழிபடுவதும், பௌர்ணமி தினங்களில் அம்பிகையை வழிபடுவதும் தோஷத்தை நிவர்த்தி செய்து, நல்ல மண வாழ்க்கையை அருளும்.

செவ்வாயால் களத்திர தோஷம் ஏற்பட்டால், செவ்வாய் பகவானை வழிபடுவதுடன், முருகப்பெருமானை வழிபடுவதும், தினமும் சஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

புதன் 7-க்கு உடைய கிரகமாகி, ஜாதகத்தில் வலுக்குன்றி இருந்தால் புதனையும் மகா விஷ்ணுவையும் வழிபடுவதுடன், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.

குரு பகவான் 7-ல் பலவீனம் அடைந்து காணப்பட்டால், குரு பகவானை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட தோஷம் நிவர்த்தியாகி நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.

களத்திரகாரகனான சுக்கிரன் வலுக்குன்றியிருந்தால், சுக்கிரனையும், மகாலட்சுமி தேவியையும் வழிபடவேண்டும். இதனால் தோஷம் விலகி நல்ல வாழ்க்கைத்துணை அமைவதுடன், இல்லற வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.

சனி பகவான் 7-ல் இருந்தாலும், 7-ம் வீட்டைப் பார்த்தாலும், 7-ம் வீட்டுக்குரிய கிரகத்துடன் சேர்ந்து இருந்தாலும் திருமணம் நடைபெறுவதில் தடை, தாமதங்கள் ஏற்படும். சனி பகவானை வழிபடுவதுடன், அனுமன் சாலீஸா பாராயணம் செய்து ஆஞ்சநேயரை வழிபடுவதும் தோஷ நிவர்த்திக்குச் சிறந்த பரிகாரம் ஆகும்.

ராகு அல்லது கேது 7-ல் இருப்பதும் தோஷம் ஏற்படுத்தி, திருமணம் நடைபெறுவதில் தடையை ஏற்படுத்தும். இதற்கு ராகு கேதுவை வழிபடுவதுடன், விநாயகர், துர்கை, சரபேஸ்வரர் ஆகியோரையும் வழிபட்டால், நல்ல மண வாழ்க்கை அமையும்.


வாஸ்து குறைபாடுகள் நீங்க எளிய பரிகாரம்!

வீட்டில் ஏதேனும் ஓரிடத்தில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால், அதற்காகக் கவலைப்பட வேண்டியதில்லை. வீட்டின் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டு இருக்கிறதோ அந்தப் பகுதிக்குரிய விருட்சத்தை ஓர் ஆலயத்தில் நட்டு வளர்ப்பதால், மரம் வளர வளர வாஸ்து குறைபாடுகள் நீங்கிவிடுவதுடன், மரங்களை வளர்த்த புண்ணியமும் கிடைக்கும்.

ஈசான்யம்     – மல்லி, முல்லை, திருநீற்றுப் பச்சிலை

கிழக்கு     – செம்பருத்தி, வாழை, சந்தனம், பலா

அக்னி     – அத்தி, பலா, சந்தனம்

தெற்கு     – வில்வம், மாமரம், தென்னை

தென்மேற்கு     – புளிய மரம், கடம்ப மரம், தேக்கு

மேற்கு     – வன்னி, மகிழம்

வடமேற்கு     – நாவல், புங்கை, வேப்ப மரம்

வடக்கு     – துளசி, நாயுருவி

இப்படிச் செய்வதற்கு முன்பாக, ஒரு நல்ல நாள் பார்த்து நாம் நடவேண்டிய மரக்கன்றை வாங்கி, இறைவனின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டுவிட்டு, நல்ல ஹோரையில் நம் கையாலேயே நட வேண்டும்.


செல்வச் செழிப்பு உண்டாக…

மாதம்தோறும் வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை தினத்தில் அன்னதானம் செய்தால், கடன் பிரச்னைகள் நீங்கி, பணவரவு கூடும்.

தினமும் காலை வேளையில் பறவைகள் உண்ண தானியங்கள் இடுவதும், பசுவுக்குப் புல் வழங்குவதும் விசேஷமாகும். இதனால், வீட்டில் வறுமை நீங்கும்.

காலையில் எழுந்ததுமே பசுவையோ, தங்க நாணயங்கள் அல்லது தங்கக் குடம் இருக்கும் படத்தையோ பார்த்து வந்தால் செல்வம் பெருகும்.

தினமும் காலையில் குளித்து முடித்ததும் சிறிதளவு சர்க்கரையை எடுத்து, வீட்டு வாசலில் தூவி வர வேண்டும். அப்படி தூவும் சர்க்கரை, எறும்புகள் உள்ளிட்ட சிறு பூச்சிகளுக்கு உணவாகும். இப்படிச் செய்யச் செய்ய கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி, செல்வச் செழிப்பு உண்டாகும்.


செவ்வாய் தோஷத்துக்கு விதிவிலக்கு உண்டு!

ரு மனங்கள் இணையும் திருமண வாழ்க்கையில் செவ்வாய் பகவானுக்கு முக்கிய பங்கு உண்டு. திருமணத்துக்கு வரன் பார்க்கும்போது, பிள்ளைக்கோ அல்லது பெண்ணுக்கோ செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்றுதான் முதலில் கேட்கிறார்கள். அந்த அளவுக்குச் செவ்வாய் தோஷம் பாடாய்ப் படுத்துகிறது.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியோருக்கும், செவ்வாய் இருக்கும் இடத்துக்கும் உள்ள தொடர்பைக் கொண்டுதான் செவ்வாய் தோஷம் ஒருவரின் ஜாதகத்தில் எந்த அளவுக்கு வலிமையாக இருக்கிறது என்பதைக் கணிக்கமுடியும்.

லக்னம், ராசியில் சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இருக்கும் இடத்துக்கு, 2-ம் இடம், 4-ம் இடம், 7-ம் இடம்,  8-ம் இடம், 12-ம் இடம் ஆகிய இடங்களில் ஒன்றில் செவ்வாய் இருந்தால், செவ்வாய் தோஷம் ஆகும். ஆனால், மேற்கண்ட இடங்களில் செவ்வாய் இருந்து, குரு, சனி, சூரியன் ஆகியோரின் சேர்க்கை பெற்றிருந்தாலும், பார்வை பெற்றிருந்தாலும் தோஷம் இல்லை.

செவ்வாய் மேஷம், விருச்சிகம், மகர ராசிகளில் இருந்தாலும் தோஷம் இல்லை. கடகம், சிம்மம் லக்னத்துக்குச் செவ்வாய் தோஷம் இல்லை.

செவ்வாய் இருக்கும் இடம் 2-ம் வீடாக இருந்து, அந்த வீடு மிதுனம் அல்லது கன்னியாக இருந்தாலும் தோஷம் இல்லை.

செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்திருந்தாலும் தோஷம் இல்லை. செவ்வாய் இருக்கும் இடத்தின் ராசி அதிபதி கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும் தோஷம் இல்லை. இப்படி செவ்வாய் தோஷத்துக்கு பல விதி விலக்குகள் உள்ளன.

ஆக, துல்லியமாகக் கணித்து செவ்வாய் தோஷம் இருக்கிறது என்றால், நம்பிக்கையோடு மிக எளிய பரிகாரங்களைச் செய்வதன்மூலம் தோஷ நிவர்த்தி பெறலாம். செவ்வாய் தோஷம் என்பது திருமணத் தடையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், மேலும் பல இடையூறுகளையும் ஏற்படுத்தும். எனவே, செவ்வாய் பகவானை செவ்வாய்தோறும் செவ்வாய் ஹோரையில் வழிபடுவதும், செவ்வாய்க்குரிய கடவுளான முருகப் பெருமானை ஒன்பது நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய அசுப பலன்களின் தாக்கத்தைப் பெரிதும் குறைக்கும்.


காலசர்ப்ப தோஷம் சுபமா… அசுபமா?

ருவரின் ஜனன ஜாதகத்தில் ராகு – கேது ஆகிய கிரகங்களுக்கு இடையில் மற்ற கிரகங்கள் அமைந்திருந்தால், அந்த ஜாதகம் காலசர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம் ஆகும். இதனால், முன்னேற்றத் தடை, இல்லற வாழ்வில் பிரச்னைகள், குழந்தை பாக்கியம் இல்லாமை ஆகியன ஏற்படும்.

சுப காலசர்ப்பம் என்றும், அசுப காலசர்ப்பம் என்றும் இரண்டு காலசர்ப்பங்கள் உள்ளன. மேஷத்தில் அசுவினி நட்சத்திரத்தில் கேதுவும், துலாமில் சுவாதி நட்சத்திரத்தில் ராகுவும், மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ராகுவும், தனுசில் மூலம் நட்சத்திரத்தில் கேதுவும், சிம்மத்தில் மகம் நட்சத்திரத்தில் கேதுவும், கும்பத்தில் சதய நட்சத்திரத்தில் ராகுவும் இருந்தால் சுப காலசர்ப்பம் என்று சொல்லப்படும். இதனால், பாதிப்பு இருக்காது.

இந்த அமைப்பைத் தவிர வேறு இடங்களில் ராகு கேது இருந்து, அவற்றுக்கிடையில் மற்ற கிரகங்கள் அமைந்திருந்தால், காலசர்ப்ப தோஷம் ஆகும். இந்த தோஷம் உள்ளவர்கள், வெள்ளியினால் நாகர் வடிவம் செய்து, தொடர்ந்து 90 நாள்களுக்குப் பாலபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு, அந்த நாகர் சிலையை வஸ்திரம், தாம்பூலம், தட்சிணை ஆகியவற்றுடன் ஓர் அந்தணருக்குத் தானம் கொடுத்துவிட வேண்டும்.இப்படிச் செய்ய முடியாதவர்கள், கோயில்களில் அரச மரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் நாகர் சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடலாம்.


புத்திர தோஷத்துக்கு தீர்வு என்ன?

ல்ல குணங்களுடன் நல்ல செயல்களைச் செய்யும் கணவனும் மனைவியும் இணைந்த இல்லற வாழ்க்கை மிகவும் சிறப்பானது. அந்தச் சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பது நல்ல குழந்தைகளைப் பெறுவதாகும்.

ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆனதும் அந்தப் பெண்ணும், அவளுடைய கணவனும், இருவரின் குடும்பத்தினரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது குழந்தை பாக்கியத்தைத்தான். ஆனால்,  குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றால், இருவரின் ஜாதகத்திலும் புத்திரஸ்தானமும் புத்திரகாரகனான குருவும் சுப பலத்துடன் அமைந்திருக்க வேண்டும். இல்லையெனில், புத்திர பாக்கியம் கிடைப்பது தடைப்படுகிறது. புத்திர தோஷம் என்பது குழந்தை பாக்கியம் இல்லாத நிலையை மட்டும் குறிப்பதல்ல; புத்திரர்களால் ஏற்படக்கூடிய சிரமங்களையும் சேர்த்தே குறிக்கும். குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை ஏற்படுத்தும் புத்திர தோஷத்துக்கான கிரக அமைப்புகளையும் அதற்கான பரிகாரங்களையும் பார்ப்போம்.

5-ம் இடத்தில் சூரியன், செவ்வாய், சனி, ராகு அல்லது கேது ஆகிய கிரகங்கள் இருந்தால். புத்திர தோஷம் ஆகும். 5-ம் வீட்டுக்கு உரிய கிரகம் பாவ கிரகங்களுடன் சேர்ந்தாலும், பாவ கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலும், 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைவு பெற்றிருந்தாலும் புத்திர தோஷம் உண்டாகும்.

தம்பதியரின் ஜனன ஜாதகத்தில் ஒருவருக்குப் புத்திரஸ்தானம் பாதிக்கப்பட்டு, மற்றவருக்குப் புத்திரஸ்தானம் வலுப்பெற்று இருந்தால், அவர்களுக்குப் பெண் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஒருவருக்காவது புத்திரஸ்தானம் நல்ல நிலையில் இருப்பது அவசியம்.

புத்திர தோஷத்தை நிவர்த்தி செய்யும் தலமாக பிரசித்தி பெற்றிருக்கும் ராமேஸ்வரத்துக்குச் சென்று, கடலில் 21 முறை மூழ்குவதுடன், அங்குள்ள 21 தீர்த்தங்களிலும் தீர்த்தமாட வேண்டும். பிறகு புத்திர பாக்கியம் அருளுமாறு பக்தி பூர்வமாகப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து எந்த கிரகத்தால் புத்திரஸ்தானத்துக்கு தோஷம் ஏற்பட்டிருக்கிறதோ அந்த கிரகத்துக்கு உரிய பரிகாரத் தலத்துக்குச் சென்று இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்டு வர வேண்டும். இப்படி நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்தால், விரைவிலேயே புத்திர தோஷம் விலகி, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குருவாலும் சந்திரனாலும் புத்திர தோஷம் ஏற்பட்டிருந்தால், வியாழக்கிழமையன்று திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு, அங்குள்ள ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வர வேண்டும். இப்படி 27 வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால், புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாகும். சந்தானகோபாலனை விரதம் இருந்து பூஜித்து வந்தாலும் குழந்தை வரம் கிடைக்கும்.


7-ம் எண்ணும் இல்லற வாழ்க்கையும்!

ண் கணிதத்தில் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு கிரகம் அதிபதியாக சொல்லப்பட்டு இருக்கிறது. அப்படி 7-ம் எண்ணுக்கு அதிபதியாகத் திகழ்பவர் கேது பகவான்.

கேது ஞானகாரகன் என்பதாலோ என்னவோ, பெரும்பாலும் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பிறந்த தேதி, மாதம், வருடம் மூன்றும் கூட்டி வரும் எண் 7-ஆக அமையப்பெற்றவர்களுக்கும் திருமணம் நடைபெறுவதில் தடைகளும் தாமதமும் ஏற்படுகின்றன. இந்த எண்ணில் பிறந்தவர்களுக்குத் திருமணம் நடைபெற்றாலும்கூட, ஏதேனும் காரணத்தினால் கணவன் – மனைவி இருவரும் பிரிந்திருக்க நேரிடுகிறது. வேறு தேதிகளில் பிறந்திருந்தாலும், தேதியோ அல்லது தேதி, மாதம், வருடம் ஆகிய மூன்றையும் கூட்டி வரும் எண் 7-ஆக இருந்து, அந்த நாளில் திருமணம் நடைபெற்றாலும் தம்பதியினரிடையே பிரிவு ஏற்படுவதை அனுபவபூர்வமாகக் காண முடிகிறது.

தேதி எண், அல்லது கூட்டு எண் 7-ஆக வரும் தேதியில் திருமணம் செய்துகொள்வதை  தவிர்த்துவிட முடியும். ஆனால், 7-ம் தேதி பிறப்பதை தவிர்க்க முடியாது. அப்படி 7-ம் எண்ணில் பிறந்தவர்களின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமைய, 1, 2, 5, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களைத் திருமணம் செய்துகொண்டால் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும்.

அதேபோல் திருமண நாளையும் 1, 2, 6 என்ற தேதிகளில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல், 8-ம் தேதியில் பிறந்தவர்களைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது.  தேதி எண்ணும் கூட்டு எண்ணும் 8 வரும் நாளிலும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது.


நவகிரக தோஷங்களும் எளிய பரிகாரங்களும்…

சூரியன்: ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால், சூரிய தசை மற்றும் சூரிய புக்தி காலத்திலும் ஞாயிறன்றும் விரதம் இருந்து, வீட்டுப் பூஜையறையில் சூரிய பகவானின் திருவுருவப் படத்துக்குச் செந்தாமரை மலர்களால் ஆன மாலையை அணிவித்து, கோதுமையினால் இனிப்பு செய்து நைவேத்தியம் செய்து, சூரிய காயத்ரி பாராயணம் செய்தால் தோஷம் நிவர்த்தி ஆகும்.

சந்திரன்: சந்திரனால் தோஷம் ஏற்பட்டால், சந்திர தசை மற்றும் சந்திர புக்தியில் திங்கட்கிழமை விரதம் இருந்து அம்பிகையின் திருவுருவப் படத்துக்கு வெள்ளை அரளி மலர்ச் சரம் சாத்தி, பால் அன்னம் நைவேத்தியம் செய்து, சந்திர காயத்ரியைப் பாராயணம் செய்து வந்தால் தோஷம் நிவர்த்தியாகும்.

செவ்வாய் தோஷ நிவர்த்தி: செவ்வாயால் தோஷம் ஏற்பட்டால், செவ்வாய் தசை மற்றும் புக்தி காலங்களில் செவ்வாய்தோறும் விரதம் இருந்து, செவ்வாய் பகவானுக்குச் செண்பக மலரால் அர்ச்சனை செய்து, வெண் பொங்கலும் துவரையும் நைவேத்தியம் செய்து, செவ்வாய் காயத்ரியைப் பாராயணம் செய்து, முருகப்பெருமானை வணங்கி வர செவ்வாய் தோஷம் நிவர்த்தி ஆகும்.

புதன்: புதனால் தோஷம் ஏற்பட்டால், புதன் தசை, புதன் புக்தி காலங்களில், புதன்கிழமை விரதமிருந்து, வெண் காந்தள் மலர் தூவி, புளி சாதம் படைத்து, புதனின் காயத்ரி மந்திரத்தை 24 முறை பாராயணம் செய்து ஸ்ரீமகா விஷ்ணுவை வழிபட புத பகவானின் பரிபூரண அருளும், சிறந்த அறிவும், கல்வியும் பெறுவார்கள்.

குரு: குருவால் தோஷம் ஏற்பட்டால், குரு தசை மற்றும் புக்தி காலங்களில், வியாழக்கிழமை விரதமிருந்து முல்லை மலர் தூவி, கொண்டைக் கடலையுடன் தயிர் சாதம் படைத்து, குரு காயத்ரியை 24 முறை பாராயணம் செய்து வழிபட வேண்டும். இதனால் குரு தோஷம் விலகி, சகல நன்மைகளும் பெறலாம்.

சுக்கிரன்: சுக்கிரனால் தோஷம் ஏற்பட்டால், சுக்கிர தசை மற்றும் புக்தி காலங்களில், வெள்ளிக்கிழமை விரதமிருந்து, வெண்தாமரை மலரிட்டு, நெய் சாதம் நைவேத்தியம் செய்து, சுக்கிர காயத்ரியை 24 முறை பாராயணம் செய்வதுடன்,  மகாலட்சுமியை வழிபட, சுக்கிர தோஷம் நிவர்த்தி ஆகும்.

சனி: சனியினால் தோஷம் ஏற்பட்டால், சனி தசை மற்றும் புக்தி காலங்களில், சனிக்கிழமை விரதமிருந்து, கருங்குவளை மலர் தூவி, எள் அன்னம் படைத்து, சனி காயத்ரியை 26 முறை பாராயணம் செய்வதுடன், சனி பகவானின் வாகனமான காகத்துக்கு அன்னம் அளித்து வந்தால், சனி தோஷம் நிவர்த்தி ஆகும்.

ராகு: ராகுவினால் தோஷம் ஏற்பட்டால், ராகு தசை மற்றும் புக்தி காலங்களில் வெள்ளிக்கிழமை விரதமிருந்து, ராகு காலத்தில் மந்தாரை மலரால் ராகுவுக்கு அர்ச்சனை செய்து, உளுந்து கலந்த அன்னம் நைவேத்தியம் செய்வதுடன், துர்கை அம்மனை வழிபட வேண்டும்.

கேது: கேதுவினால் தோஷம் ஏற்பட்டால், கேது தசை மற்றும் புக்தி காலங்களில் திங்கட்கிழமை விரதமிருந்து பல வகையான மலர்களால் கேது பகவானுக்கு அர்ச்சனை செய்து, சித்ரான்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும். தொடர்ந்து விநாயகரை வழிபட்டாலும் கேது தோஷங்கள் விலகும்.

பொதுவாக, ஒவ்வொரு கிரக மூர்த்தியையும் அவருக்குரிய நாளில் முறைப்படி வழிபடுவதால், நவகிரகங்களின் நல்லருள் கிடைக்கும்.


விசேஷ தரிசனமும் வரம் தரும் வழிபாடுகளும்!

கல்யாணம் கைகூட…

ன்னிப்பெண்கள் கல்யாணத் தடைகள் நீங்கவும், மனதுக்கினிய கணவன் வாய்க்கவும், சுயம்வர பார்வதிதேவியை வழிபட வேண்டும். சிவபெருமானை மணமகனாக மனதில் நினைத்து நடந்து செல்லும் கோலத்தில் அருள்கிறாள் சுயம்வர பார்வதிதேவி. இந்த அருள்கோலத்தை மனதில் தியானித்து வழிபட்டால், கல்யாண வரம் விரைவில் கிடைக்கும். அதேபோல், திருக்கோயில்களில் நடைபெறும் திருக்கல்யாண வைபவங்களையும் தரிசித்து அருள்பெற்று வரலாம்

செல்வச் செழிப்பு தரும் இரட்டை மீன்கள்!

லய மண்டபங்களில் விதானத்தில் `இணை கயல்’ சிற்பங்களைக் (இரட்டை மீன்கள்) காணலாம். இவை, மங்கலச் சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. திருக்கோயில்களுக்குச் செல்லும்போது இந்த மீன்களைத் தரிசிப்பதால், செல்வம் செழிக்கும்; சகல சுபிட்சங்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

சந்திர தரிசனம்

கோயில் விதானங்களில் சந்திரனின் சிற்பத்தையும் தரிசிக்க முடியும். விதானங்கள் நிழல் பரப்பும் அமைப்பாதலால் அதில் குளிர் பரப்பும் சந்திரனின் சிற்பம் அமைக்கப்படுவதாகக் கூறுவர்.  அதைப்போன்றே, சூரியன் மற்றும் சந்திரக் கிரகணக் காட்சிகளும்  சிற்பங்களாக இடம்பெற்றிருக்கும். இவற்றைத் தரிசிப்பதன் மூலம், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் வினைகள் அழியும் என்பது ஐதீகம்.

பயம் நீக்கும் பைரவர்!

ருள்மிகு பைரவர் தண்ணீருக்கு அதிபதியாவார். உயிர்களுக்குத் தண்ணீரால் ஆபத்து நிகழாமல் காக்கும்தெய்வம் அவர். தீர்த்தங்களில் நீராடுபவர்கள், க்ஷேத்திரபாலராகவும் தீர்த்தபாலராகவும் திகழும் பைரவரை வழிபட்டுவிட்டே தீர்த்தமாட வேண்டும். வணிகத்தின் பொருட்டும் வேறு விஷயங்களுக்காகவும் கடற் பயணம் மேற்கொள்வோர் பைரவரை வழிபட்டுச் சென்றால், பயணத்தில் எவ்விதத் தடங்கலும் உண்டாகாது என்பதுடன், அந்தப் பயணத்துக்கு உரிய நோக்கமும் வெற்றி பெறும்.

புத்திர சம்பத்து  கிடைக்கும்

னந்தன் என்ற பாம்பரசன் நாகராஜாக்களுக்கு சக்ரவர்த்தியாகத் திகழ்கிறார். அவரையும் அவர் மனைவி அனந்தமதியும் பாம்பு வடிவில் பின்னிப் பிணைந்திருக்க, அவர்களுடைய படத்துக்கு இடையே லிங்கம் அமைந்திருக்கும் மூர்த்தத்தை அனந்த லிங்க மூர்த்தம் என்பர். இந்த லிங்கத்தைத் தரிசித்து வழிபட்டால் புத்திர தோஷம் நீங்கி வம்சம் விருத்தியாகும். அனுதினமும் பாகவதம் படித்து, குருவாயூரப்பனைத் வழிபட்டு வந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

செல்வம் அருளும் பிச்சிப்பூ

பிச்சிப்பூவை கேள்விப்பட்டுள்ளீர்களா? இது மல்லிகை மலர்களின் ஒருவகை. வாசனை மிகுந்தது. ‘பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழலி’ என்று அம்பிகையைப் பாடியுள்ளார் அபிராமிப்பட்டர். பைரவியோடு கூடிய பைரவராகத் திகழும் இறைவன் பிச்சுப்பூ சூடியவராக அருள்கிறாராம். பிச்சுப்பூவைக் கொண்டு மாலை தொடுத்து சிவனாருக்குச் சமர்ப்பித்து வழிபட, வேண்டிய செல்வங்கள் கிடைக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.

விபூதி லிங்கம்!

விபூதியுடன் சந்தனம் பன்னீர் ஆகியவற்றைக் கலந்து விபூதி லிங்கத்தைச் செய்து வழிபடும் வழக்கம் உண்டு. இந்த லிங்கத்தை ‘பஸ்ம லிங்கம்’ என்றும் சொல்வார்கள். சத்ரு ஜெயம், காரிய வெற்றி, செல்வச் செழிப்பு ஆகியவற்றை விரும்புவோர் விபூதிலிங்கத்தை வழிபட வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு.

%d bloggers like this: